

காட்சி : 1
இடம் : வருணின் வீடு / வருணின் அறை, நேரம் : வெவ்வேறு நேரங்கள், மாந்தர் : வருண்
காலை 5.30 : வருண் ஓவியம் வரையத் தொடங்குகிறான்.
காலை 7.15 : வருண் ஓவியத்தைச் சரிபார்க்கிறான்.
காலை 7.30 : வருண் ஓவியப் படத்தை அஞ்சலுறையில் போடுகிறான். முகவரி எழுதுகிறான்.
காட்சி : 2
இடம் : வருணின் வீடு , நேரம் : இரவு 8.30 , மாந்தர் : வருண், அப்பா
(வருண் அமைதியாக வந்து நிற்கிறான்)
அப்பா : பால் குடிச்சுட்டியா?
வருண் : ம்ம்ம்.. குடிச்சுட்டேன்-ப்பா.. அப்பா அவனை நன்றாகப் பார்க்கிறார்.
அப்பா : அந்த கவரை போஸ்ட் பண்ணியாச்சு, வருண். ஸ்டேட் பேங்க்ல இருக்கிற பாக்ஸ்ல போட்டுட்டுதான் ஆஃபீஸூக்கே போனேன் ..
வருண் : (புன்னகையுடன்) தேங்க்ஸ்-ப்பா.. அந்தப் படத்தை நான் அச்சு அசலா மாஸ்ட்டர் வரையிற மாதிரியே வரஞ்சிருக்கேன் .. அவர் பார்த்தா சந்தோஷப்படுவார்..
அப்பா : ம்ம்ம்.. அவர் பேர் என்ன? டக்குனு ஞாபகம் வரமாட்டேங்குது..
வருண் : ஓவியர் இனியவன்.. எல்லாரும் அவரை இனியன் மாஸ்ட்டர்னு சொல்லுவாங்க...
அப்பா : ஸ்ஸ்ஸ்.. இனியவன். அவருக்கு நீ நிறைய ஓவியங்கள் வரைஞ்சு அனுப்பிருக்கியே உனக்கு எதாவது பதில் போட்டிருக்காரா..? எனக்கு தெரியலை..
வருண் : பதில் எல்லாம் வேண்டாம்-ப்பா.. அவர் என்னோட படங்கள பாத்தாலே போதும்..
அப்பா அவனை நன்றாகப் பார்க்கிறார்.
காட்சி : 3
இடம் : இனியவனின் அலுவலகம் , நேரம் : மாலை 5 மணி, மாந்தர் : இனியவன், தியாகராஜன்.
(இனியவன் வருணின் ஓவியத்தைக் கையில் வைத்திருக்கிறார்.)
தியாகராஜன் : ( உள்ளே வந்து) சார், கூப்டீங்கனு சொன்னாங்க..
இனியவன் : ஆமாம், தியாகு.. வருண்-னு ஒரு பையன் அப்பப்போ படம் வரஞ்சு அனுப்பிட்டிருக்கானே.. அவன கான்ட்டேக்ட் பண்ணி பேசிப் பாருங்க.. முடிஞ்சா அடுத்த வாரம் அவங்க வீட்டுக்குப் போய் பையனைப் பார்த்துட்டு வர்லாம்..
(இனியவன் படத்தைக் கொடுக்கிறார்)
தியாகராஜன் : (படத்தை வாங்கி) அடுத்த வாரமா.. ? ஆனா, சார்.. அந்த வாரம் முழுக்க ஒரு எக்ஸிபிஷன் இருக்கே..
இனியவன் : சரிதான்.. அந்த ஏரியாவ தாண்டித்தானே போகணும்.. ஒருநாள் முன்னாடியே அங்க போகலாம்.. இந்த வருண் ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருக்கான்னு நினைக்கிறேன்.. சந்திச்சுத்தான் பார்ப்போமே..
தியாகராஜன் : ஓ.கே. சார்.. நான் கேட்டுட்டு சொல்றேன்.
(தியாகராஜன் படத்தில் இருக்கும் தொடர்பு எண்ணுக்கு அழைப்பு விடுக்கிறார்)
காட்சி : 4
இடம் : வருணின் வீடு, நேரம் : இரவு 9.10, மாந்தர் : வருண், அப்பா, அம்மா
வருண் : ப்பா.. உண்மையாவேவா.. இல்ல எதாவது காமெடி கீமெடி பண்றீங்களா.. ?
அப்பா : ம்ம்ம்.. நீ இப்படி சொல்லுவேன்னு தெரியும்.. இந்தா.. ஆட்டோமேட்டிக் கால் ரெக்கார்டர் லிஸ்ட்ல மதியம் ரெண்டு மணி ஃபைல கேளு..
அப்பா நீட்டும் திறன்பேசியை வாங்கிக் கேட்கிறான் வருண்.
வருண் : ( மகிழ்ச்சியில்) ஊஊஊஊஊ.. ஏஏஏஏஏஏஏ..
வருண் துள்ளிக் குதிக்கிறான்.
அம்மா : டேய்.. டேய்.. டேய்.. அப்பா ஃபோனை எங்காவது கீழ போட்டுத் தொலச்சிடாத.. அத எங்கிட்ட கொடு..
வருண் : ம்மா.. மாஸ்ட்டர் நம்ம வீட்டுக்கு வர்றாரு..இதென்ன பெரிய ஃபோனு .. போனா போயிட்டுப் போகுது..
அப்பா : போயிட்டுப் போகுதா? வேணா.. வலிக்குது..
அம்மாவும் வருணும் சிரிக்கிறார்கள்.
காட்சி : 5
இடம் : வருணின் வீடு, நேரம் : மதியம் 1.30, மாந்தர் : இனியவன், அப்பா, அம்மா.
(இனியவன் கைக்குட்டையால் கையைத் துடைத்தபடி சோஃபாவில் வந்து அமர்கிறார்)
அப்பா : இந்தாங்க லைம் ஜுஸ்.. சாப்பாடெல்லாம் பிடிச்சிருந்ததா, சார்?
இனியவன் : ம்ம்ம்.. உண்மையாவே பிரமாதமா இருந்துச்சு.. இவ்ளவு பண்ணி வெப்பீங்கனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல .. அசத்திட்டீங்க..
அப்பா : சார், உங்கள நல்லபடியா கவனிக்கறது ஒரு
வகையில எங்க கடமை .. எங்க பையனுக்கு உங்கள ரொம்பப் புடிக்கும்.. உங்க ஓவியங்களைப் பத்தியும் உங்கள பத்தியும் அவன் பேசாத நாளே இல்ல..
அம்மா : சிறுவர் இதழ்கள் தவிர எப்பவாது பேப்பர்ல நடுபக்க கார்ட்டூன் வரஞ்சீங்கனாலும் கண்டுபிடிச்சிருவான்.. அதே மாதிரியே வரைஞ்சும் காட்டுவான்.. இனியவன் : கேட்கவே சந்தோஷமா இருங்குங்க.. அவனுக்கு ஏன் என் படங்களைப் பிடிச்சிருக்கு..?
அப்பா : தெரியலை , சார்.. நாங்க கேட்டா அதெல்லாம் அப்டித்தான்னு சொல்றான்..
அம்மா : உங்ககிட்ட காட்டணும்னு என்னவோ தேடிட்டிருக்கான் .. வந்ததும் நீங்களே பேசிப்பாருங்க..
காட்சி : 6
இடம் : வருணின் வீடு , நேரம் : பிற்பகல் 2.15 ,
மாந்தர் : வருண், இனியவன்.
(வருண் ஒரு நோட்டின் பக்கத்தைத் திருப்புகிறான்)
வருண் : மாஸ்டர், இதுதான் நான் ஆரம்பத்துல வரைஞ்ச படங்கள்.. சுமாராத்தான் இருக்கு.. ஆனா, என்னோட ஃபேவரிட்ல இதுவும் சேரும்..
(இனியவன் அமைதியாகப் பார்க்கிறார்)
வருண் : இது நீங்க " டம்பான் ' னு ஒரு கதைக்கு வரைஞ்ச பாண்டா கரடி.. மூக்குலதான் கொஞ்சம் சொதப்பிட்டேன்.. போண்டா கரடி மாதிரி ஆயிருச்சு..
(இனியவன் அமைதியாகப் பார்க்கிறார்)
வருண் : இது " நெருங்கிய நண்பர்கள் '. இதுலயிருந்துதான் நான் உங்களை மாதிரியே வரையத் தொடங்கினேன்.. எனக்கு ரொம்ப புடிச்ச படம் இதுதான்..
(இனியவன் அமைதியாகப் பார்க்கிறார்)
வருண் : இது " பார்வை '... இது " மூன்று கூழாங்கற்கள் '.. . இது.. இது.. அய்யய்யோ.. ஞாபகம் வர்லியே..
வருண் பேசிக்கொண்டே பக்கங்களைத் திருப்பிச் செல்கிறான்.
(இனியவன் அமைதியாகப் பார்க்கிறார்)
காட்சி : 7
இடம் : வருணின் வீடு, நேரம் : மாலை 5.50, மாந்தர் : வருண், இனியவன், அப்பா, அம்மா.
(வருணின் முகம் வாடியிருக்கிறது)
வருண் : மாஸ்டர், அதுக்குள்ள டைம் ஆயிடுச்சா.. என்னால நம்பவே முடியல..
இனியவன் : வருண்.. உனக்கு நல்ல திறமை இருக்கு.. ரொம்ப நல்லா அப்சர்வ் பண்ற.. தொடர்ந்து நீ நிறைய வரையணும்.. ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் ... நீ தப்பா எடுத்துக்கலனா, சொல்றேன்..
வருண் : சொல்லுங்க, மாஸ்டர்.. கண்டிப்பா நீங்க
நல்லதுக்குத்தான் சொல்வீங்க..
இனியவன் : ம்ம்ம்.. நீ எங்கிட்ட காட்டின படங்கள்ல ஆரம்பத்துல வரஞ்சுதுனு சொன்னேயில்ல.. அந்த ஸ்டையில்லியே இனிமே நீ நிறையா வரை..
வருண் : ( அதிர்ந்து) மாஸ்டர்.. என்ன சொல்றீங்க.. ?
நான் உங்கள மாதிரியேதான வரையறேன்.. அப்றம் ஏன்?
இனியவன் : அதுதான் பிரச்னை, வருண்.. ஒரு ஓவியர் அவரோட தனிப்பட்ட ஸ்டைலாலதான் அடையாளம் தெரியறார்.. என்னை மாதிரி வரையத்தான் நான் இருக்கேனே.. அது போதும்..
(வருண் அமைதியாக இருக்கிறான்)
இனியவன் : உன்னோட பார்வையில நீ வரஞ்ச அந்த மொதல் படங்கள் எல்லாம் புதுசா இருக்கு.. இதுவரைக்கும் அப்படியொரு ஸ்டைல் யாருக்கும் இல்ல.. அதான் சொல்றேன்..
(வருண் இனியவனை நன்றாகப் பார்க்கிறான்)
இனியவன் : நமக்கு யார் வேணாலும் ரோல் மாடலா இருக்கலாம்.. ஆனா, நாம யாருக்காவது ரோல் மாடலா இருக்கணும்னா நமக்கு ஒரு தனித்தன்மை வேணும்.. புரியுதா, வருண்?
வருண் : புரியுது, மாஸ்டர்.. இனிமே நான் உங்களுக்கு அனுப்புற ஓவியங்கள் எப்படி இருக்கும்னு பாருங்க..
(இனியவன் வருணின் கையைக் குலுக்குகிறார்)
- திரை-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மனித உரிமை மீறல்! 19 ஈரானிய அதிகாரிகள் மீது தடை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
2026 ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியானது!

மதிமுகவுக்கு 4 தொகுதிகள்!

எரிவாயு தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி
வீடியோக்கள்

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்
தினமணி வீடியோ செய்தி...

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

