ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கருவூலம்: ஜம்மு - காஷ்மீர்!

மிகவும் புனிதமான இந்து சமயக் கோயில்களில் ஒன்றாகும். சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத் தலமாகும்.

News image
Updated On :9 பிப்ரவரி 2019, 8:27 am


வைஷ்ணவி தேவி கோயில்!

மிகவும் புனிதமான இந்து சமயக் கோயில்களில் ஒன்றாகும். சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத் தலமாகும். ஜம்மு பகுதியில் கத்ரா என்ற ஊருக்கு அருகில் 5200 அடி உயரத்தில் இமயமலையின் ஒரு பகுதியான திரிகூடமலையின் உச்சியில் வைஷ்ணவி தேவி கோயில் உள்ளது. 

இது ஒரு குகைக்கோயில். 30 மீ நீளமும் 1.5 உயரமும் கொண்ட குகையின் முடிவில் முப்பெரும் தேவியரும் அருவ வடிவில் அமைக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 1 கோடி பக்தர்கள் வருகை தருகின்றனர்.வைஷ்ணவி தேவி கோயிலுக்கு மேல் பைரவ்நாத் ஆலயம் என்ற காலபைரவர் கோயில் உள்ளது.

அமர்நாத் குகைக் கோயில்!

சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிவன் கோயில். இமயமலைப் பகுதியில் 3888 மீ. உயரத்தில் அமைந்துள்ள குடைவரை குகைக் கோயில். இக்குகையில் மே முதல் ஆகஸ்டு வரையிலான காலத்தில் பனிக்கட்டியால் சிவலிங்கம் உருவாகி மீண்டும் உருகிவிடுகிறது. பார்வதி மற்றும் பிள்ளையார் பனி சிலைகளும் இங்குள்ளன. 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று!

இந்திய ராணுவத்தினரின் தீவிரக் கண்காணிப்பில் இந்த ஆலயமும், ஆலயத்திற்குச் செல்லும் மலைப்பாதையும் உள்ளன. அதனால் முன்பதிவு செய்து இந்திய அரசின் அனுமதி பெற்றே செல்லமுடியும்!

மார்த்தாண்ட சூரியன் கோயில்!

சூரிய பகவானுக்காகக் கட்டப்பட்ட கோயில் இது. இக்கோயிலை கார்கோடப் பேரரசின் மூன்றாம் மன்னர் லலிதாத்தியன் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் (கி.பி. 725 - 756 ) கட்டியதாகக் கருதப்படுகிறது. ஆனால்  இக்கோயிலுக்கான அஸ்திவாரம் கி.பி.370 - 500 இல் அமைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். 

220 அடி நீளமும், 142 அடி அகலமும் கொண்ட கோயில் வளாகத்தில் 84 சிறிய சந்நிதிகள் உள்ளன. இங்கு வேதகால தெய்வங்களான சூரியன், விஷ்ணு, கங்கை, யமுனையின் அழகிய சிற்பங்கள் உள்ளன. 

கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் "சிக்கந்தர் பட்சிகான்'  என்னும் இஸ்லாமிய ஆட்சியாளரால் சிதைக்கப்பட்டது. 

எஞ்சியுள்ள ஆலய அமைப்பு இந்திய தொல்லியல் துறையால் தேசிய முக்கித்துவம் வாய்ந்த இடமாக பாதுகாக்கப்படுகிறது.

சிவகோரி குகைக்கோயில்!

இந்த குகைக்கோயில் மலைகள் சூழ்ந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் இருந்து 3 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். 200 மீட்டர் நீளமும் 1 மீ அகலமும் சுமார் இரண்டு முதல் 3 மீ வரை உயரமும் கொண்ட இயற்கையான குகையில் சுயம்பு உருவான சிவலிங்கம் உள்ளது. அமர்நாத் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வருபவர்கள் இங்கும் வருகிறார்கள்.

ரகுநாத் கோயில் - ஜம்மு

ஜம்மு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் பெரிய கோயில் வளாகங்களில் இதுவும் ஒன்று. 1835- இல் குலாப்சிங் என்கிற ஜம்மு-காஷமீர் பேரரசரால் தொடங்கப்பட்டு 1860- இல் அவருடைய மகன் பேரரசர் ரண்பீர் சிங்கால் கட்டி முடிக்கப்பட்டது. 

கோயிலின் மூலவர் ராமர் என்றபோதும் விஷ்ணு, சிவன், பிரம்மா என பிற தெய்வங்களுக்கு 7 தனித்தனி கோபுர விமானங்கள் கொண்ட சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள ஓவியங்கள் சிறப்பு வாய்ந்தவை.

திக்ஸ் மடாலயம் - லடாக்!

"லே' (LEH) என்னும் இடத்தில் 19 கி.மீ. சிந்து பள்ளத்தாக்கில் தூகில் மலை உச்சியில் 3600 மீ. உயரத்தில் இந்த மடாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த 12 மாடி வளாகம் திபெத்தில் உள்ள "போதலா' அரண்மனையைப் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கு புத்த மதத்தைச் சேர்ந்த சுவர் ஓவியங்கள், சிலைகள், ஸ்தூபிகள் என பல வகையான கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன இங்குள்ள மைத்ரேயர் கோயிலில் 15 மீட்டர் உயர மைத்ரேயர் புத்தர் சிலை  உள்ளது. லடாக்கின் மிக உயரமான சிலை இதுதான்!

ஹோலி ஃபேமிலி கத்தோலிக் சர்ச்!

1886 இல் கட்டப்பட்ட ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்களுக்கான தேவாலயம். ஸ்ரீநகரில் மெளலானா ஆசாத் சாலையில் உள்ளது. 

சங்கராச்சாரியார் கோயில்!

தால் ஏரிக்கரையில் உள்ள கோபாத்திரி மலையில் 1000 அடி உயரத்தில் உள்ள சிவன் கோயில். கி.மு. 200-க்கு முன்பே இவ்விடத்தில் ஆலயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இப்போது உள்ள கோயில் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 

ஆதி சங்கரர் இக்கோயிலுக்கு வந்து சென்றதால் சங்கராச்சாரியார் கோயில் என்று பெயர் பெற்றுள்ளது. பெளத்தர்களும் இக்கோயிலை புனிதத் தலமாகக் கருதுகிறார்கள். 

இக்கோயில், "மன்னர் சண்டிமன்'  என்பவரால் கி.மு. 2629 - கி.மு. 2564 இல் கட்டப்பட்டு பிற்காலத்தில் பலராலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளது  எனக் கருதுவோரும் உள்ளனர்.

பிற சுற்றுலாத் தலங்கள்!

தால் ஏரி!

17-ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஜஹாங்கீர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஸ்ரீநகரில் உள்ள தால்  ஏரியில் இருக்கும்போது ""..."உலகின் சொர்க்கம்' என்பது இதுதான்!' என்று சொன்னாராம்! தால் ஏரி, மாநிலத்தில் முக்கியமான சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் ஒன்று.

மாநிலத்தின் 2 ஆவது பெரிய ஏரி. 7.44 கி.மீ. நீளமும், 3.5 கி.மீ. அதிக பட்ச அகலமும், 15.5 கி.மீ. நீளத்திற்கு ஏரிக்கரையும் சுமார் 20 ச.கி.மீ. பரப்பளவும் கொண்டது. ஜீலம் நதியிலிருந்து கால்வாய் மூலம் இந்த ஏரிக்கு நீர் வருகிறது. குளிர்காலத்தில் உறைந்துவிடும்!

இந்த ஏரியில் படகில் சவாரி செய்வதும் படகு வீடுகளில் தங்குவதும் மிகவும் பிரபலம். நூற்றுக்கணக்கில் வரிசையாய் நிற்கும் படகு வீடுகளை பார்த்து ரசித்தபடி இயற்கை எழில் சூழ்ந்த இந்த ஏரிக்கரையில் நடப்பதும் ஆனந்தமே!
ஷாலிமர் பூங்கா! 

(மொகல் கார்டன்)

பேரரசர் ஜஹாங்கீர் தன் மனைவி நூர்ஜஹானுக்காக உருவாக்கியது இந்த ஷாலிமர் பூங்கா. மொகலாயர்களின் தோட்டக்கலைக்கு உதாரணமாய் திகழும் 31 ஏக்கர் பரப்பளவு கொண்ட அழகிய தோட்டம். ஸ்ரீநகரின் மகுடம் என்று புகழப்படுகிறது. 

குல்மார்க்!

பாரமுல்லா மாவட்டத்தில் 2690 மீ. உயரத்தில் அமைந்துள்ள கோடை வாசஸ்தலம் குல்மார்க்! இதன் பழைய பெயர் கெளரி மார்க். மன்னர் ""யூசப் ஷா கான்''  தான் பூக்களின் இடம் எனப் பொருள்படும் குல்மார்க் என்ற பெயரைச் சூட்டினார். 

முன்காலத்தில் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் கோடை வாசஸ்தலமாக இருந்தது. 554 பேரே வசிக்கும் குல்மார்க்கில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பெரும்பாலானவர்கள் இரவில் ஊரை விட்டு வெளியேறி விடுவார்கள். சுற்றுலாப் பயணிகளும் அதைச் சார்ந்த தொழில் செய்பவர்களும் மட்டும்தான் இரவில் தங்குவதுண்டு.

ஹெமிஸ் தேசியப் பூங்கா!

கிழக்கு லடாக் பகுதியில் அமைந்துள்ள நாட்டின் பெரிய இயற்கைப் பூங்கா. இந்தியாவின் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள பூங்கா. 4400 ச.கி.மீ. பரப்பளவில் உள்ள இப்பூங்காதான் தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய பூங்கா. இங்கு பனிச்சிறுத்தை உட்பட பல்வேறு உயிரினங்கள் உள்ளன.

பகல்கம்!

லித்தர் பள்ளத்தாக்கிலிருந்து 7200 அடி உயரத்தில் இருக்கும் மலைவாழிடம். பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலம். ஜூலை - ஆகஸ்டு மாதங்களில் நடைபெறும் அமர்நாத் யாத்திரையின்போது பகல்கம் ஊருக்கு வெளியே யாத்திரை வருபவர்களுக்கான தற்காலிகமான பெரிய முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கும். பகல்கமின் 90% பகுதி ஊசியிலைக்காடுகளாகக் காட்சியளிக்கிறது. கஸ்தூரி மான், மலைஆடு, பழுப்புக் கரடிகள், சிறுத்தைகள், சாம்பல் குரங்குகள், காட்டு முயல்கள், கழுகுகள், நீலப்பாறை புறாக்கள். பனிக்கோழிகள் போன்ற பல்வேறு வகை விலங்குகளும், பறவைகளும் இவ்வனப்பகுதியில் வசிக்கின்றன. 

பட்னிடாப்!

லே மாவட்டத்தில் உள்ளது. வைஷ்ணவி தேவி கோயில் அருகில் உள்ள மலைவாழிடம். ரம்மியமான இயற்கை எழில் சூழ்ந்த இடம்.

பாங்காங் ஏரி!

லே மாவட்டத்தில் உள்ளது. இந்தியாவிற்கும், திபெத்திற்கும் இடையே 134 கி.மீ. நீளமும், 5 கி.மீ. அகலமும் கொண்ட இந்த உப்பு நீர் ஏரி இருக்கிறது. இதன் பாதிக்கு மேற்பட்ட பகுதி திபெத் தேசத்திற்குள் அமைந்துள்ளது. இந்திய - சீன எல்லைக்கோடு இதன் ஊடாகத்தான் செல்கிறது. குளிர்காலத்தில் உறைந்துவிடும். இங்கு அதிக எண்ணிக்கையிலான பறவைகள் இனப் பெருக்கத்திற்காக வலசை வருகின்றன. 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.