தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

மரங்களின் வரங்கள்!

நான்தான் உதிர வேங்கை  மரம்  பேசுகிறேன். என் தாவரவியல் பெயர் பீரோகார்பஸ் இண்டிகஸ் என்பதாம். நான் பபேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.  பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மரம் நான்தான்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2020, 12:30 am

இரத்தத் திலகம் உதிர வேங்கை மரம்

குழந்தைகளே நலமா?

நான்தான் உதிர வேங்கை மரம் பேசுகிறேன். என் தாவரவியல் பெயர் பீரோகார்பஸ் இண்டிகஸ் என்பதாம். நான் பபேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மரம் நான்தான். நானும் இப்போது ஒரு அரிய மரமாகி விட்டேன். அழகான பூவுக்கு சரக்கொன்றையும், மருதும், மரவேலைகளுக்கு தேக்கும், தோதகத்தியும், பிசின் என்றால் வேல மரம், உதிர மரமும் என்று சொல்வார்கள். என்னை நீங்கள் இப்போதெல்லாம் வனப்பகுதிகளில் மட்டுமே காண முடியும். இங்கு வசிக்கும் மான்களும், மாடுகளும் என் இலையை விரும்பி சாப்பிடுகின்றன.

இரப்பர் மரத்தை சீவினால் பால் வடியும், பனையில் பாலையை சீவினால் பதனீர் வடியும், என்னை சீவினால் ரத்தம் மாதிரி பிசின் வடியும். நான் இடி, மின்னல் மற்றும் கதிர்வீச்சுகளிலிருந்து உங்களைப் பாதுகாப்பேன். என்னிடம் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. என்னிடமிருக்கும் ரெட் கிரிஸ்டல்கள் தான் ரத்தம் போல் வரும் சாறுக்குக் காரணம். டானிக் ஆசிட், அமினோ ஆசிட் என பல்வேறு சத்துப் பொருள்கள் என்னிடம் உள்ளன.

என் பூக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். பூக்களின் மேல் சிறுத்தை உடலில் உள்ள புள்ளிகள் போல காணப்படும். அந்தக் காலத்தில் குழந்தைகளே, நான் ஊரெங்கும் நிறைந்திருந்தேன். எனக்கு உதிரத்தை உறைய வைக்கும் சக்தி இருப்பதால், போருக்கு போகும் முன் வீரர்கள் எங்களை வணங்கி விட்டுதான் போவார்கள். போர் வீரர்களுக்கு வெட்டு காயங்கள் ஏற்பட்டால் என் இலையை அரைத்து வீரத் தழும்புகளின் மீது வைத்து கட்டுவார்கள். காயமும் சிறிது நேரத்தில் ஆறி விடுவதுடன், வீரர்களும் புத்துணர்ச்சிப் பெறுவார்கள்.

என் மரத்தின் சிவப்பு நிற பிசின் உலர்ந்ததும் கருப்பாகி விடும், இதைத் தான் அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டாக வைப்பார்கள். இதனால், குழந்தைகளுக்கு தோல் நோய் வராமல் தடுக்க முடியும். பழங்கால கோயில்களில் கொடி மரம், கதவுகளை அமைக்க உங்கள் முன்னோர் என்னைதான் பயன்படுத்தினாங்க.

மற்ற எந்த மரத்திலும் காணப்படாத "ரெட் கிரிஸ்டல்கள்' தான் என் உடம்பிலிருந்து சிவப்பு நிறத்தில் வழியும் பாலுக்கு காரணம். உதிரப் போக்குக்கு மட்டுமல்லாது, பெண்களுக்கு ஏற்படும் அடிவயிற்று வலிக்கும் இது அற்புதமான மருந்து. என் இலைகளில் நார்ச் சத்தும், செரிமானத் தூண்டுதலும் அதிகம் இருக்கு. அதனால், என்னிடம் சர்க்கரை நோயைத் தடுக்கும் சக்தியும் இருக்கு. என் மரத்தின் இலையையும், பூவையும் உடம்பில் தொடர்ந்து பூசி குளித்து வந்தால், கொழுப்புக் கட்டிகள் கரையும்.

என் மரப்பட்டையில் உள்ள டிரோசிலிபின் என்ற வேதிப்பொருள் சர்க்கரை நோயை குணப்படுத்தும். என் பட்டையில் இரும்புச் சத்து மற்றும் கால்சியம் நிரம்பிக் காணப்படுவதால், பட்டையை அரைத்து கஷாயம் செய்து குடிக்கலாம். இதனால், எலும்பு சம்பந்தமான குறைபாடுகள் குணமாகும். வெளிநாடுகளில் என் பிசினை இந்திய "கினோ கம்' என்று அழைக்கிறார்கள். தோல் பதனிடும் தொழில், சாயத் தொழில், காகிதம் செய்யும் அத்தனைக்கு இந்த கினோ கம்மத்தைத் தான் பயன்படுத்தறாங்க. என் மரக்குவளையில் நீங்கள் தண்ணீர் அருந்தினால், உங்களுக்கு சர்க்கரை நோயே வராது, எழுதி வச்சிக்கிங்க.

உங்களுக்குத் தெரியுமா குழந்தைகளே, ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் என் இலைகளைப் பயன்படுத்தி கேன்சரைத் தடுக்கும் ஆன்ட்டி ட்யூமரைத் தயாரிக்கிறார்கள்.

குழந்தைகளே, உயிர் மண் என்றழைக்கப்படும் நிலத்தின் மேல் மண் பெரும் மழையால், காற்றால் அடித்துச் செல்லப்படுவதை தடுப்பது மரங்களாகிய நாங்கள்தான். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.