கருவூலம்: பிகார் மாநிலம் பற்றி அறிவோமா?
இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் பிகார். வரலாற்றுச் சிறப்பு மிக்கது! இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா.


இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் பிகார். வரலாற்றுச் சிறப்பு மிக்கது! இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா.
பிகார் மாநிலம் மேற்கில் உத்தரப் பிரதேசத்தையும், வடக்கில் நேபாள நாட்டையும், கிழக்கில் மேற்குவங்கத்தையும், தெற்கே ஜார்க்கண்ட் மாநிலத்தையும் தனது எல்லைகளாகக் கொண்டுள்ளது. 94,163 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. பிகார் நிர்வாக வசதிக்காக 38 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநிலம் மக்கள்தொகை அடிப்படையில் நாட்டின் 3 - ஆவது இடத்தையும், நிலப்பரப்பில் 12 - ஆவது இடத்தையும் வகிக்கிறது. "விகார்' என்ற சொல்லிலிருந்தே பிகார் என்னும் பெயர் பிறந்துள்ளது. "விகார்' என்ற சொல்லுக்கு "பெüத்த மடாலயம்' என்பது பொருள்.
இந்து மதத்தினர், சமண மதத்தினர் மற்றும் பௌத்த மதத்தினருக்கு இம்மாநிலம் புனிதத் தலமாக விளங்குகிறது. இம்மாநிலத்திலுள்ள "புத்த கயா' எனும் இடத்தில்தான் புத்தர் ஞானோதயம் பெற்றார். சமண மதத்தைத் தோற்றுவித்த மஹாவீரரும் இம்மாநிலத்தில்தான் அவதரித்து மறைந்துள்ளார்.
பிகார் பெரும்பகுதி ஒருகாலத்தில் மகதநாடாக இருந்துள்ளது. மகதநாட்டின் தலைநகரமாக இருந்த பாடலிபுத்திரமே இன்று பாட்னா என்று அழைக்கப்படுகிறது.
மௌரிய, குப்தப் பேரரசுகள் பிகாரை மையமாகக்கொண்டுதான் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்தன. அரசியல், கல்வி, நாகரிகம், மதம் போன்றவற்றின் உன்னத கேந்திரமாக இருந்துள்ளது பிகார்.
கி.பி. 5 - ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட "நாளந்தா பல்கலைக்கழகம்'..., கி.பி. 8 - ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட "விக்கிரமசீலா பல்கலைக்கழகம்' ஆகிய கல்விக்கூடங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அந்நாளில் வெளிநாடுகளிலிருந்து மாணவர்கள் இங்கு வந்து கல்வி பெறுவார்கள்.
கங்கை ஆறும், அதன் துணை ஆறுகளும் பாயும் கங்கைச் சமவெளியில் பிகார் அமைந்துள்ளது. எனவே வேளாண்தொழில் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. கோதுமை, நெல் மற்றும் கரும்பு ஆகியவை முக்கிய விளைபொருட்களாகும்.
வரலாற்றுச் சிறப்பு!
பண்டைகாலத்தில் வடஇந்தியாவில் இருந்த மகாஜனபத நாடுகளில் மகதமும் ஒன்று. இதன் எல்லைக்குள் இன்றைய பிகாரின் பெரும்பகுதி, கிழக்கு உத்தரப் பிரதேசம், வங்காளத்தின் பெரும்பகுதி மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பகுதிகளும் இருந்தன. இதன் முதன்மையான நிலப்பகுதி கங்கையாற்றிற்கு தெற்கே அமைந்துள்ள பிகாரின் பகுதியே ஆகும்.
விதேக நாடு! (மிதிலை) பிகாரின் மற்றொரு பகுதி விதேக (மிதிலை) தேசமாகும். இதனைப்பற்றி ராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடு பிகாரின் சில பகுதிகளுடன் இன்றைய நேபாளத்தின் சிறிய பகுதியையும் உள்ளடக்கியதாக இருந்தது.
இராமனின் மனைவியான சீதை, விதேக நாட்டின் மன்னரான ஜனகரின் மகள் என இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விதேக நாட்டின் தலைநகரான ஜனக்பூர் தற்கால நேபாளத்தின் பகுதியாக உள்ளது.
வஜ்ஜி நாடு!
இகுவும் பண்டைய வட இந்தியாவில் இருந்த மகாஜனபத நாடுகளில் ஒன்று. இதன் தலைநகரமாக வைசாலி நகரம் இருந்துள்ளது. இது ஒரு குடியரசு நாடாக விளங்கியது. இந்நாடு தற்கால பிகார், நேபாளம் எல்லையில் இருந்தது. வஜ்ஜி நாட்டை ஆண்ட வஜ்ஜி குலத்தவர்கள் குறித்து பாணினி, சாணக்கியர், யுவான்சுவாங் ஆகியோர் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
மெüரியப் பேரரசு!
மகத நாட்டை அடிப்படையாகக் கொண்டே மெüரியப் பேரரசு உருவானது. இப்பேரரசு கி.மு. 322 - இல் குப்த மெüரியரால் தோற்றுவிக்கப்பட்டது. பிந்துசாரர், அசோகர் போன்ற அரசர்களால் புகழ் பெற்று விளங்கியது.
குப்தப் பேரரசு!
குப்தப் பேரரசை நிறுவியவர் ஸ்ரீகுப்தர். குப்தப் பேரரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள் முதலாம் சந்திரகுப்தர், சமுத்திர குப்தர், இரண்டாம் சந்திரகுப்தர், முதலாம் குமாரகுப்தர் மற்றும் ஸ்கந்த குப்தர் ஆவார்கள். இதன் தலைநகரமாக பாடலிபுத்திரம் இருந்தது.
அறிவியல், கணிதம், வானியல், சமயம், தத்துவம், தொழில்நுட்பம், சோதிடம், இந்து தொன்மவியல் என பல துறைகளில் நாடு சிறந்து விளங்கியது. அதனால் குப்தப் பேரரசின் காலம் இந்தியாவின் பொற்காலம் எனக் குறிப்பிடப்படுகிறது.
பாலப் பேரரசு!
இப்பேரரசு தற்கால ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், வங்காள தேசம் மற்றும் இந்தியாவின் வடக்கு கிழக்கு மேற்குப் பகுதிகளில் பரவியிருந்தது. இப்பேரரசை நிறுவியவர் கோபாலன் என்பவர் ஆவார். இவர் கி.பி. 750 - இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தார். பாலப் பேரரசின் காலத்திற்குப் பிறகு இந்திய வரலாற்றில் பிகார் சுருங்கிப் போனது. 1540 - சூர் பேரரசு என்று ஓர் அரசு தோன்றியது. 1556 - இல் அது வீழ்ச்சியுற்றது.
பிரிட்டிஷ் ஆட்சி!
பல போர்களுக்குப் பிறகு 1912 - ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியப் பேரரசில் ஒரு தனி மாகாணமாகப் பிரிக்கப்பட்டது. 1947 - இல் நாடு சுதந்திரமடைந்த பிறகு பிகார் இந்தியக் குடியரசில் ஒரு மாநிலமாக இருந்து வருகிறது.
தொடரும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...