ஜெஸ்ஸிகா!
ஜெஸ்ஸிகா ரொம்ப நல்ல கரடி. அது ஒரு முறை நீர் வீழ்ச்சி அருகே சென்றது. உச்சியில் தண்ணீர் விழ ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு பலா மரம் இருந்தது. அதில் நன்றாகப் பழுத்த பலாப்பழங்கள் இரண்டு இருந்தன.


ஜெஸ்ஸிகா ரொம்ப நல்ல கரடி. அது ஒரு முறை நீர் வீழ்ச்சி அருகே சென்றது. உச்சியில் தண்ணீர் விழ ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு பலா மரம் இருந்தது. அதில் நன்றாகப் பழுத்த பலாப்பழங்கள் இரண்டு இருந்தன. பலாப்பழ வாசனை ஜெஸ்ஸிகாவின் மூக்கைத் துளைத்தது. அதற்குப் பலாப்பழங்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அது மலை உச்சிக்கு ஏறி, இரண்டு பழங்களையும் பறித்து விட நினைத்தது.
ஒரு வழியாக மலை உச்சியை அடைந்தது. மரத்தின் மீது ஏறி ஒரு பலாப் பழத்தைப் பறித்தது. அது மிகப் பெரிய பலாப்பழம். ரொம்ப கனமாக இருந்தது. பழத்தை ஒரு கையால் பிடித்துக் கொண்டு கஷ்டப்பட்டு இறங்கும்போது பழம் நழுவி நீர் வீழச்சியில் விழுந்து விட்டது! ஜெஸ்ஸிகாவிற்கு ரொம்ப வருத்தமாகப் போய்விட்டது. நீர் விழும் பகுதி மிகவும் ஆழமானது! ஆபத்தானது! அதில் ஜெஸ்ஸிகாவால் குதிக்க முடியாது!
மரத்தில் இன்னும் ஒரு பலாப்பழம் இருந்தது. அதுவும் நன்றாகப் பழத்த பலாதான்! இந்த முறை மரத்தில் ஏறி மிகவும் ஜாக்கிரதையாக பலாப் பழத்தைப் பறித்துக் கொண்டு வந்து விட்டது ஜெஸ்ஸிகா!
பழத்தை ஒரு கையால் வெற்றிப் பெருமிதத்துடன் பிடித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தது!
பழத்தைப் பிளக்கத் தகுதியான ஒரு பாறையைத் தேடிக்கொண்டிருந்தது. அப்போது ஜாலுக் கரடி ஒரு பாறையின் அடியில் ரொம்பவும் சோர்வாக கண்கள் செருகிய நிலையில் தரையில் கால்களை நீட்டி, பாறையில் சாய்ந்த வாறு படுத்திருந்தது. அதற்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அவை அருகிலுள்ள ஒரு குகையில் இருந்தன. ரொம்பவும் சின்னக் குட்டிகள்!
""என்ன ஜாலு! என்ன ஆச்சு?'' என்று கேட்டது ஜெஸ்ஸிகா.
""எனக்கு உடம்பு சரியில்லே..... ஏதாவது மீனைப் பிடித்துத் தின்றுவிட்டு, குழந்தைகளுக்கும் எடுத்துப் போகலாம்னு வந்தேன். ரொம்ப சோர்வாப் போயிடுச்சு!.... அதான் இப்படிப் படுத்துட்டேன்.... பாவம்! குட்டிகள் பட்டினியா இருக்கும்...''
""ஐயய்யோ!..... சின்னப் பசங்க பசி தாங்க மாட்டாங்களே!.... சரி, இந்தா இந்தப் பலாப்பழத்தைப் பிளந்து சாப்பிடு!.... தெம்பா இருக்கும். நான் போய் பாளையிலே தண்ணீர் கொண்டு வரேன்!'' என்று கூறிவிட்டு, பலாப் பழத்தைப் பிளந்து அதிலிருந்து சுளைகளை எடுத்து அருகிலிருந்த பெரிய இலைகளில் போட்டு ஜாலுவுக்குக் கொடுத்தது. ஜாலு அதைச் சாப்பிட்டது!
""பழம் ரொம்ப ருசி!.... என் குழந்தைகளுக்கும் பலாப்பழம் ரொம்பப் பிடிக்கும்!'' என்றது.
ஜெஸ்ஸிகா ஒரு பாளையில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டுவந்து ஜாலுவுக்குக் கொடுத்தது. ஜாலுவும் குடித்தது. அதற்குப் பசியாறி தெம்பு வந்து விட்டது!
""எங்கே பறிச்சே இந்தப் பலாவை?.... ரொம்ப ருசியா இருக்கே?....''
""மலை உச்சியிலேதான்!'' என்று கூறி, தான் ஒரு பலாவை நழுவ விட்டதையும், வருத்தமாகச் சொன்னது. மீதி இருந்த சுளைகளையெல்லாம் ஒரு பெரிய பாளையிலே போட்டு குட்டிகளுக்குக் கொடுக்கச் சொல்லி ஜாலுவிடம் கொடுத்தது.
ஜெஸ்ஸிகாவைப் பார்த்து ஜாலு கேட்டது. ""அது சரி, ஒரு பழத்தை நழுவ விட்டுட்டே!.... வருத்தமா இருந்தது. இப்போ இந்தச் சுளைகளை எல்லாத்தையும் எங்களுக்கே குடுக்கறயே! நீ சாப்பிடவே இல்லையா?''
""ம்ஹூம்!''
""இந்தா சாப்பிடு!'' என்று கூறி நான்கைந்து சுளைகளைக் கொடுத்தது ஜாலு.
""வேணாம்! குழந்தைகளுக்குக் கொடு! பாவம் அதுங்க பசியா இருக்கும்!.... இப்போ நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்!'' என்றது ஜெஸ்ஸிகா.
""அதெப்படி? ஒரு பழம் நழுவினப்போ வருத்தப்பட்டே!... இப்போ இன்னொரு பழத்தையும் முழுசா எங்களுக்குக் கொடுத்துட்டே! இப்போ மகிழ்ச்சியா இருக்கியே? அதெப்படி?''
""ஜாலு, முதல்லே எனக்குப் பழத்துமேலே, அதோட ருசி மேலே ஆசையா இருந்தது!. அதுனாலே அது கீழே விழுந்த போது ரொம்ப வருத்தமா இருந்தது. இப்போ நீ சோர்வா இருக்கறதைப் பார்க்கிறப்போ பாவமா இருந்தது!. அன்புதான் முக்கியம்னு தெரிஞ்சுது!... உன் மேலே அன்பு! உன் குழந்தைகள் மேலே அன்பு! எனக்கு இப்போ பழத்தை விட அன்புதான் முக்கியம்னு தோணுது! பழத்துமேலே இப்போ எனக்குப் பற்று இல்லே! அன்பு மேலே தான் பற்று! நீ பழத்தைக் குழந்தைகளுக்குக் குடு! போ!
அதுங்க பசியா இருக்கும்'' என்று கூறிவிட்டு காட்டின் மரங்களின் ஊடே சென்று மறைந்தது ஜெஸ்ஸிகா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...