நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அன்பிற்கு அடிமை!

புண்ணிய கோடி என்வவர் தன் பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு கோடீஸ்வரர். அவருக்கு பழைய பொருட்களை சேகரிப்பது மிகவும் பிடிக்கும்.

News image
Updated On :11 ஜனவரி 2020, 11:47 am

ஜோ ஜெயக்குமார்

புண்ணிய கோடி என்வவர் தன் பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு கோடீஸ்வரர். அவருக்கு பழைய பொருட்களை சேகரிப்பது மிகவும் பிடிக்கும். பழைய பொருள்கள் எது கிடைத்தாலும் ஓவியத்திலிருந்து நாணயம் வரை என்ன விலையானாலும் அதைக் கொடுத்து வாங்கி தன் மாளிகையில் வைத்து விடுவார்.

புண்ணிய கோடிக்கு நான்கு பிள்ளைகள். அவரது மனைவி சில வருடங்களுக்கு முன்னால் இறந்து விட்டாள். நான்கு பிள்ளைகளும் வெவ்வேறு இடத்தில் வசித்து வருகிறார்கள். புண்ணியகோடிக்கு வயதாகிக் கொண்டிருந்தது.

பிள்ளைகளும் வெகு தூரத்தில் இருந்தனர். ஆனால் பிள்ளைகள் ஒருவரும் தன் தகப்பனை கவனித்துக் கொள்ள முன் வரவில்லை. புண்ணிய கோடியை உடனிருந்தது கவனித்துக் கொண்டது அவரது வேலைக்காரன் மாத்திரமே.

ஒரு நாள் அவர் மரித்துப் போனார். சொத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ள நான்கு பிள்ளைகளும் வந்தனர். அவர்களுடைய குடும்ப வழக்கறிஞர் பிள்ளைகளிடம் புண்ணிய கோடி எழுதி வைத்த உயில் பற்றிச் சொன்னார். வழக்கறிஞர் சொன்னதைக் கேட்டு பிள்ளைகள்அதிர்ச்சியுற்றனர்.

எல்லா சொத்துக்களையும் ஏலம் விட்டு விடச் சொல்லி உயில் எழுதி வைத்திருந்தார் புண்ணியகோடி.... அது மட்டுமல்ல.... விருப்பமிருந்தால் அவரது பொருட்களில் விருப்பமானவற்றைத் தன் பிள்ளைகளே வேண்டுமானாலும் ஏலத்தில் எடுக்கலாம் என்றும், விருப்பப்பட்டபோது அவர்களும் ஏலம் எடுப்பதில் பங்கு பெறலாம் என்றும் எழுதி வைத்திருந்தார்.

பிள்ளைகள் அடைந்தக் கோபத்திற்கு அளவே இல்லை. சரி ஏலத்தில் பழம் பொருட்களை எடுத்து நல்ல விலைக்கு விற்று விடலாம் என நினைத்து அந்த நாளுக்காய் காத்திருந்தனர். அவர்களுக்குத்தான் ஏலத்தில் பங்கு கொள்ள உரிமை இருக்கிறதே!

ஏலம் விடும் நாளும் வந்தது. ஏல அதிகாரி புண்ணியகோடியின் பெரிய பழைய புகைப்படம் ஒன்றை முதலில் ஏலம்விட்டார். ஏலப் பொருள்களை வாங்க, அவரது பிள்ளைகளோடு, அங்கே கூடியிருந்தோரும், "" புண்ணியகோடியின் விலை மதிப்பு மிக்க பழம் பொருட்களை ஏலம் விடுங்கள்!'' என்று கூச்சலிட்டனர்.

""முதலில் தனது புகைப்படத்தைத்தான் ஏலம் விட வேண்டும் என்று புண்ணியகோடி எழுதி வைத்திருக்கிறார்'' என்று ஏலம் விடுபவர் சொன்னார்.
""புகைப்படம் ரூபாய் 100....'' என்று ஏலம் தொடங்கியது.

ஒருவரும் பேசவில்லை. அவர் பிள்ளைகளும் மெளனமாக இருந்தனர். "தந்தையின் அந்த பழைய புகைப்படம் தங்களுக்கு எதற்கு?' என நினைத்தனர்.
ஆனால் அவருடன் இருந்து வந்த வேலைக்காரன் எஜமான் தன்னை இத்தனை ஆண்டுகள் அன்பாய் நடந்தியதை நினைத்து, ""ரூபாய் 2000'' என்றான். அவனை எல்லாரும் திரும்பிப் பார்த்தனர். வேலைக்காரன் மனம் பதறியது... பிள்ளைகள் தங்களது தகப்பனாரின் புகைப் படத்தை ஏலம் கேட்க ஆர்வம் கொள்ளவில்லை.

அவன் மிகவும் மனம் வருந்தி, " இவ்வளவு குறைந்த விலைக்கா என் எஜமானரின் படம் போக வேண்டும்?.... இங்கு அவர் பிள்ளைகள் இருந்தும் கூட இதற்கு மேல் ஏலம் கேட்கவில்லையே!' என நினைத்தான். யாரும் வேலைக்காரன் கேட்ட தொகைக்கு மேல் கேட்கவில்லை. அனைவரும் மெளனம் சாதித்தனர். பிள்ளைகளும்தான்!

வேலைக்காரன் கண்களில் நீர் தழும்ப, ""என் எஜமான் படத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம், என்னிடம் இருப்பது ரூபாய் 2000 தான்! நான் என்ன செய்ய முடியும்?' என வருத்தப்பட்டான்.

ரூபாய் 2000.... ஒரு தரம்!..... ரூபாய் 2000.... இரண்டு தரம்!..... ரூபாய் 2000..... மூன்று தரம்!.... என்று ஏலம் முடிந்தது.

வேலைக்காரன் தன் வேட்டியில் முடிந்து வைத்திருந்த ரூபாய் இரண்டாயிரத்தைக் கொடுத்து அந்த படத்தை பெற்றுக் கொண்டான். ஒரு துணியால் அந்தப் படத்தை அழுத்தித் துடைத்து அழுக்கை நீக்கினான். எஜமானரின் படம் பளிச்சிட்டது!

பிறகு அங்கு கூடியிருந்தோர் நிமிர்ந்து உட்கார்ந்து, முதலில் என்ன பொருள் ஏலம் விடுவார்கள் என ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஏல அதிகாரி ஓர் அடி முன்னே வந்து, ""கனவான்களே! ஏலம் முடிந்துவிட்டது! நன்றி!....நீங்கள் கலைந்து போகலாம்'' என்றார்.

""என்ன இது?.... ஏலம் முடிந்து விட்டதா? மற்ற ஏராளமான மிக விலை உயர்ந்த பழம் பொருட்கள் எல்லாம் இனிமேல்தானே ஏலம் போட வேண்டும்!'' என்றார்கள்.

இப்போது குடும்ப வழக்கறிஞர் முன் வந்துபேசினார்.

""கனவான்களே மன்னிக்க வேண்டும்!.... யார் தன்னுடைய படத்தை வாங்குகிறார்களோ அவருக்கே தன் முழுச் சொத்தும் போய்ச் சேர வேண்டும் என்று தான் உங்கள் தந்தை எழுதி வைத்திருக்கிறார்! அதன்படி, இந்த வேலைக்காரனே அவரது திரண்ட ஆஸ்திக்குச் சொந்தக்காரன் ஆகிறார்!'' என்றார். எல்லோரும் முணுமுணுத்தவாறு கலைந்து சென்றனர். அவருடைய பிள்ளைகளும் தலை குனிந்து ஒவ்வொருவராக செல்லத் தொடங்கினர்.

விசுவாசம் மிகுந்த அந்த வேலைக்காரனுக்கு அவர்கள் அவ்வாறு செல்வதைக் காணச் சகிக்கவில்லை. அவன் புண்ணியகோடியின் பிள்ளைகளைத் தடுத்து நிறுத்தினான்.

பின்பு வழக்கறிஞரிடம், ""ஐயா!.... உயில் எது வேண்டுமானாலும் இருக்கட்டும்!.... எனக்கு அவரது சொத்தின்மீது ஆசை இல்லை. இதே வீட்டில் எனக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தால் போதும் அதுவே எனக்கு மன நிறைவைத் தரும்!...... அவரது சொத்துக்கள் அனைத்தையும் அவரது மகன்களுக்கே கொடுத்துவிடுங்கள்!'' என்றான்.

வேலைக்காரனின் விசுவாசத்தைப் பார்த்து மனம் திருந்திய பிள்ளைகள் அவனைக் கட்டியணைத்தனர். அவனுக்கு அந்த வீட்டிலேயே முக்கிய பொறுப்புகளைக் கொடுத்தனர்.

மூத்த மகன் வேலைக்காரனிடம், ""எங்கள் தந்தைதான் எங்களைப் பிரிந்து விட்டார்!.... உங்களைப் பிரிய எங்களால் முடியாது!'' என்றான். மற்றவர்களும் அதை ஆமோதித்தனர். அனைவரும் ஒற்றுமையாக சொத்துக்களைப் பராமரித்துக் கொண்டு அந்த வீட்டிலேயே தங்கி வாழ்ந்தனர்.

கதையின் நீதி :-

செல்வத்தைவிட அன்பு மட்டுமே என்றும் நிலையானது. உண்மையான அன்பிற்கு அனைவருமே அடிமை தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.