.... சென்ற இதழ் தொடர்ச்சி....
வாரணாசி!
காசி என்றும் பனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி கங்கைக் கரையில் அமைந்துள்ள நகரமாகும்.இது இந்து சமயத்தினரால் மிகப் புனிதமான நகரமாகக் கருதப்படுகிறது. இந்து மதக் கோட்பாடுகளின்படி முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று.
வாரணாசிக்கு அருகில் உள்ள அக்தா மற்றும் ராம்நகரை ஆராய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் இந்நகரில் மக்கள் கி.மு. 1800 - க்கு முன்பே வாழ்ந்து வந்ததை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் தொடர்ந்து வாழும் உலகின் ஒரு சில தொன்மையான நகரங்களில் காசியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பெளத்த மதத்தினருக்கும் காசி புனிதமானது. வாரணாசியில்தான் கெளதம புத்தர் பல ஆண்டுகள் கடுந்தவம் இயற்றி பின் கி.மு. 528 - இல் ஞானம் பெற்றார்.
சமண சமயத்தவர்க்கும் வாரணாசி புனித இடமாகும். கி.மு. 8 - ஆம் நூற்றாண்டில் பிறந்த 23 - ஆவது தீர்த்தங்கரரான் பார்சுவநாதர் பிறந்த ஊர் வாரணாசிதான்.
காசி விஸ்வநாதர் ஆலயம்!
மிகவும் புகழ் பெற்ற சிவன் கோயில்களில் காசி விஸ்வநாதர் ஆலயம் ஒன்று. கங்கைக்கரைப் படித்துறையில் அமைந்துள்ளது. புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
இக்கோயில் இஸ்லாமிய மன்னர்களால் இடிக்கப்பட்டு மீண்டும், மீண்டும் கட்டப்பட்டுள்ளது. இப்பொழுது உள்ள ஆலயம் 1780 - ஆம் ஆண்டு இந்தூர் ராணி அகல்யா பாய் ஹோல்கரால் கட்டப்பட்டது. 1835 - ஆம் ஆண்டு பஞ்சாப் மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங் ஒரு டன் தங்கத்தை அளித்து இப்போதிருக்கும் தங்கக் கோபுரத்தை அமைத்தார். இந்த ஆலயம் 51 அடி உயரம் கொண்டது. இக்கோயில் வளாகத்திலேயே அன்னபூரணி ஆலயம் உள்ளது.
கோயிலுக்குச் செல்லும் பாதை மிகக்குறுகலானது.
கங்கா ஆரத்தி!
வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் நாள்தோறும் கங்கை ஆற்றிற்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. சுமார் 30 நிமிடங்கள் நடைபெறும் இந்த கங்கா ஆரத்தி மிகவும் பிரசித்தி பெற்றது.
காசியில் கங்கை ஆற்றின் கரையில் 88 படித்துறைகள் உள்ளன. ஒவ்வொரு படித்துறையிலும் குறைந்தது 80 படிகள் உள்ளன. இப்படித்துறைகள் நீராடுவதற்கும், பூஜைகளுக்கும் பிரசித்தி பெற்றவை. அஸ்வமேதா காட், மணிகர்ணிகா காட், பஞ்ச கங்கா காட், ஆதிகேசவா காட், ஆகிய 5 படித்துறைகள் பிரசித்தமானவை.
ராம்நகர் கோட்டை! - வாரணாசி.
இக்கோட்டை கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 1750 - இல் காசி அரசர் பல்வந்த் சிங் இதைக் கட்டினார். கோட்டையினுள் "சரஸ்வதி பவன்' என்ற அருங்காட்சியகம் உள்ளது.
புதிய விஸ்வநாத் கோயில்!
இக்கோயில் பண்டித மதன் மோகன் மாளவியா அவர்களால் நிறுவப்பட்டது. இக்கோயிலில் சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படுவது குறிப்பிடத் தக்கது.
அலகாபாத் பிரயாக் ராஜ்!
அலகாபாத் நகரின் புதிய பெயரே "பிரயாக் ராஜ்.' அலகாபாத் என்ற பெயர் மொகலாய மன்னர் அக்பரால் 1853 - இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. கங்கை, யமுனை ஆகிய நதிகளுடன் கண்ணுக்குப் புலப்படாத சரஸ்வதி ஆறும் இங்கு கலப்பதாக நம்பப்படுகிறது. இங்கு நீராடுவது மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது.
கும்பமேளா!
12 ஆணடுகளுக்கு ஒருமுறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது. அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப் படுகையில் நடைபெறுகிறது. இவற்றில் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா "பூர்ண கும்பமேளா' என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஒவ்வொரு 12 - ஆவது கும்பமேளாவும் "மகா கும்பமேளா' எனப்படுகிறது.
2013 - ஆம் ஆண்டு நடைபெற்ற "மகா கும்பமேளா' வில் சுமார் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் இங்கு புனித நீராடினர்.
6 வருடத்திற்கு ஒருமுறை "அர்த்த கும்பமேளா' கொண்டாடப்படுகிறது. இது அலகாபாத்திலும், ஹரித்வாரிலும் மட்டுமே கொண்டாடப்படுகிறது.
அலகாபாத் தூண்!
கி.மு. 3 - ஆம் நூற்றாண்டில் மெளரியப் பேரரசர் அசோகரால் நிறுவப்பட்டது. இத்தூண் மணற்கல்லால் ஆனது. 35 அடி உயரமும், சுமார் 3 அடிச் சுற்றளவும் கொண்டது.தூணின் உச்சியில் அமர்ந்த நிலையில் சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தூணில் அசோகரின் குறிப்புகள் மற்றும் சமுத்திர குப்தரின் குறிப்புகள் காணப்படுகின்றன.
இத்தூண் முதலில் பண்டைய கோசல நாட்டின் தலைநகரமாகிய கெளசாம்பியில் நிறுவப்பட்டது. பின்னர் மன்னர் ஜஹாங்கீரால் அலகாபாத் கோட்டையில் கி.பி.1605 - இல் நிறுவப்பட்டது.
ஆனந்த பவனும், சுவராஜ் பவனும்!
இது ஜவஹர்லால் நேரு குடும்பத்தினரின் பூர்வீக இல்லமாகும். அலகாபாத்தில் உள்ளது.
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான பல முடிவுகள் ஆனந்த பவனுக்கு அருகில் உள்ள சுவராஜ் பவனில்தான் எடுக்கப்பட்டன. இதனை 1930 - இல் மோதிலால் நேரு இந்திய தேசிய காங்கிரஸூக்கு நன்கொடையாகக் கொடுத்தார்.
ஆனந்தபவனை 1970 - இல் இந்திரா காந்தி நாட்டிற்கு அளித்தார். பள்ளிக் குழந்தைகள், அறிவியல் மற்றும் கல்வி பயன்பாட்டிற்கான அருங்காட்சியகமாக இது அரசால் பராமரிக்கப்படுகிறது.
லக்னோ!
நவாப்களின் நகரம் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படும் லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலை நகரமாகும். இது கோமதி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. நவாப் ஆசஃப் உத்தெளலா என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட தலைநகரமாக சிறப்புடன் திகழ்ந்திருக்கிறது.
பாரா இமாம்பாரா!
பாரா இமாம்பாரா எனும் பெயருக்கு மிகப் பெரிய வழிபாட்டுத்தலம் என்பது பொருளாகும். இது நவாப் "அஸ்ஃபி உத் தெளலா' என்ற மன்னரால் 1783 - ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
இந்த மசூதி முழுக்க இரும்பு பயன்படுத்தாமலே கட்டப்பட்டுள்ளது என்பது இதன் தனித்தன்மை ஆகும். இங்குள்ள 50 மீ. நீளமும், 16 மீ. அகலமும் 15 மீ. உயரமும் கொண்ட மையக் கூடத்தின் கூரை எந்தவிதமான தாங்கு தூண்களும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும்!
நல்ல வழிபாட்டுக்கூடம், அழகிய சுற்றுப் பாதை, கலையழகு பொருந்திய படிக்கிணறு ஆகியவை இந்த மசூதியில் உள்ளன.
சோட்டா இமாம்பாரா!
1838 -ஆம் ஆண்டு முகமது அலி ஷா நவாபால் கட்டப்பட்ட இந்த மசூதி லக்னோ நகரின் முக்கியச் சின்னமாகும். இங்கு நவாப் மற்றும் அவரது குடும்பத்தினரின் சமாதிகள் அமைத்துள்ளன. அழகிய கலையம்சங்கள் கொண்ட மசூதி இது.
ரூமி தர்வாஸா!
இந்த 60 அடி உயர லக்னோ நகர நுழைவாயில் 1784 - ஆம் ஆண்டு ஆசஃப் உத் தெளலா எனும் நவாபால் கட்டப்பட்டது. இது "அவத்' வம்சத்திய கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தியாவின் முக்கிய வரலாற்றுச் சின்னம்!
கேய்சர்பாக் அரண்மனை!
ஆவாத் நவாப் "வாஜித் அலி ஷா' என்பவர் இந்த கேய்சர்பாக் அரண்மனையை 1847 - ஆம் ஆண்டில் கட்டினார். இது அவரது கனவுப் படைப்பாகும்! இதனை எட்டாவது உலக அதிசயமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கட்டினார்.
ஆனால் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கேய்சர்பாக் அரண்மனையை சதி ஆலோசனை நடத்தும் இடமாகக் கருதினார்கள். அதனால் அவர்கள் இதன் பெரும் பகுதியை அழித்துவிட்டனர். தற்போது கம்பீரமான தூண்கள், அலங்காரமான ஏணிப்படிகள், குடை அமைப்புகள், விளக்குத் தூண்கள் ஆகியவை இந்த வளாகத்தில் காணப்படுகின்றன.
ராணி மஹால்!
இது இந்தியாவின் பிரசித்தி பெற்ற போர் வீராங்கனை ஜான்சி ராணி என்றழைக்கப்பட்ட ராணி லக்ஷ்மிபாயின் வசிப்பிடமாக இருந்தது. இது நவால்கர் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாம் ரகுநாத் அவர்களால் கட்டப்பட்டதாகும்.
இந்த அரண்மனைதான் ராணி லக்ஷ்மிபாய் மராத்திய தளபதியான தந்த்யா தோப் மற்றும் நானா சாகிப் ஆகியோரின் தலைமையின் கீழ் 1857 - ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்றவர்கள் கூடும் மையமாக இருந்துள்ளது.
இப்பெரிய கட்டடத்தின் பெரும்பகுதி ஆங்கிலேய பீரங்கிப் படையால் அழிக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள பகுதி நினைவு அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றைத் தவிரவும் லக்னோ நகரத்தில் பல கண்ணைக் கவரும் நினைவுச் சின்னங்கள் மற்றும் புராதனக் கட்டடங்கள் உள்ளன.
லக்னோ உயிரியல் பூங்கா, தாவரவியல் பூங்கா, புத்தா பூங்கா, குக் ரெயில் பாதுகாப்பு வனச் சரகம், மற்றும் சிகந்தர் பாக் ஆகியவை இங்குள்ள இயற்கை எழில் பிரதேசங்களாகும்.
....தொடரும்......
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்! ஷ்ரேயாஸை பாராட்டிய சச்சின்!

எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய அவகாசம்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


