தவம்!

ஆதிசங்கரின் சீடரான பத்மபாதர் அடிக்கடி காட்டுக்குள் சென்று தியானத்தில் ஈடுபடுவார். ஒரு நாள் குருவிடம் விடைபெற்றுக்கொண்டு காட்டுக்குள் தவம் செய்யச் சென்றார்.
தவம்!

ஆதிசங்கரின் சீடரான பத்மபாதர் அடிக்கடி காட்டுக்குள் சென்று தியானத்தில் ஈடுபடுவார். ஒரு நாள் குருவிடம் விடைபெற்றுக்கொண்டு காட்டுக்குள் தவம் செய்யச் சென்றார். காட்டுக்குள் சென்று ஓரிடத்தில் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தார். 
அப்போது ஒரு வேடன் வேட்டையாடுவதற்காக அந்த வழியே வந்தான். தவமியற்றிக் கொண்டிருக்கும் பத்மபாதரைப் பார்த்தான். அவரைப் பார்த்ததும் அவனுக்கு அவர் மேல் இரக்கம் மேலிட்டது. ""அடப் பாவமே! என்னது இது? இவர் இப்படி இந்தக் காட்டில் தனியாகக் கண்ணை மூடிக்கொண்டு தவம் செய்துகிட்டு இருக்காரே..... இந்தப் பக்கம் காட்டு விலங்குகள் வருமே!.... இவரைப் பார்த்தால் அடித்துத் தின்றுவிடுமே.... '' என்று நினைத்து அவருக்குக் காவலாக அங்கேயே இருந்தான். இருள் சூழ்ந்தது. கண்ணும் கருத்துமாய் அந்த வேடன் பத்மபாதரைக் காவல் காத்துக் கொண்டிருந்தான். பொழுதும் விடிந்துவிட்டது. 
பத்மபாதர் கண் விழித்தார்! தனக்கு முன் வேடன் ஒருவன் நின்றுகொண்டிருப்பதைக் கண்டார். 
""இங்கே என்ன செய்கிறாயப்பா?'' என்று கேட்டார்.
""இந்தப் பக்கம் காட்டு விலங்குகள் வரும்.... அதனாலே உங்க உயிருக்கு ஆபத்து வருமேன்னு காவலா இருந்தேங்க''
""ராத்திரிப் பூராவா?''
""ஆமாங்க!'' 
""சாப்பிடலையா''
""கொஞ்சம் பழம் வெச்சிருந்தேங்க....சாப்பிட்டேன்!... நம்மாலே பசி தாங்க முடியாதுங்க!.....நீங்கதான் பாவம்!..... ஒண்ணும் சாப்பிடவே இல்லே!.... கொஞ்சம் பழம் இருக்கு இந்தாங்க...'' 
""வேண்டாம்ப்பா!.... இன்னிக்கும் நான் தவத்தைத் தொடரலாம்னு இருக்கேன்!''
""அப்படீங்களா!.... உங்களை மாதிரி நானும் கண்ணை மூடிக்கிட்டுக் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேங்க....''
""என்ன? ஏதாவது தெரிஞ்சதா?''
""ம்ஹூம்.... ஒண்ணும் தெரியலே சாமி!.... ஒரே இருட்டா இருந்ததுதான் மிச்சம்!.... உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சுதாங்க''
""மனசை ஒரு நிலைப் படுத்தி தியானம் செஞ்சா நான் விரும்புகிற தெய்வத்தை தரிசிக்க முடியும்.... ம்ம்ம்... ஆனால் இன்னிக்கு நான் விரும்பின நரசிம்மரை என்னலே தரிசிக்க முடியவில்லை!.... என்ன செய்வது?'' என்று வருத்தமாகச் சொன்னார். 
""நரசிம்மரா?.... அது எப்படி இருக்கும் சாமி?'' 
""சிங்கத் தலையும், மனித உடலும் கொண்டவர்.... எங்கும் நிறைந்த எனக்குப் பிடித்த கடவுள்! அவர்தான் நரசிம்மர்!''
""இவ்வளவுதானே!..... நாளைக்கு சாயங்காலத்துக்குள்ளே உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்தறேன்!'' என்று கூறிவிட்டுப் போய்விட்டான் அந்த வேடன். 
பத்மபாதருக்கு அவனை நினைத்துச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. ஆனால் பாவம் பாமரன்!....
மறுநாள் மாலை..... சொன்னபடி நரசிம்மரை ஒரு கயிற்றால் கட்டி இழுத்துக்கொண்டு வந்து பத்மபாதர் முன்னால் நிறுத்தினான் வேடன்.
பத்மபாதர் பிரமித்து விட்டார்!
கண்களில் ஆனந்தக் கண்ணீருடன், ""பிரபோ!..... இதை என்னால் நம்ப முடியவில்லை!.... பெரிய தபஸ்விகளும், ரிஷிகளும், காணத் தவிப்பர்! தங்களை தரிசிக்க நான் விரதங்களை அனுஷ்டித்து இரவு பகலாக உங்கள் நினைவிலேயே இருந்தேன்!.... எனக்கு மனமிரங்காமல் ஒரு வேடனுக்குக் கட்டுப்பட்டு இப்படி நிற்கிறீர்களே!....இதென்ன ஆச்சரியம்!'' என்றார்.
தன்னலமின்றி உன்னை அவன் காவல் காத்தான். இப்போதும் தனக்காக இல்லாமல் உனக்காக என்னை கட்டிக்கொண்டு வந்தான். பிறர் நலனுக்காகச் செய்யும் காரியத்தில் நான் கட்டுப்படுவேன். உதவியும் செய்வேன்! பலனும் அளிப்பேன்!'' 
பத்மபாதர் வேடனின் முகத்தைப் பார்த்தார்! மெய் சிலிர்த்தது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com