பட்டாம்பூச்சி!

மரங்களும், மலர்ச் செடிகளும் நிறைந்த தோட்டம் அது. வெள்ளை, சிவப்பு, மஞ்சள், நீலம் போன்ற பல வண்ணங்களில் பூக்கள் சிரித்துக் கொண்டிருந்தன.
பட்டாம்பூச்சி!


மரங்களும், மலர்ச் செடிகளும் நிறைந்த தோட்டம் அது. வெள்ளை, சிவப்பு, மஞ்சள், நீலம் போன்ற பல வண்ணங்களில் பூக்கள் சிரித்துக் கொண்டிருந்தன. அவற்றில் சில நறுமணத்துடன் இருந்தன. அவற்றில் பட்டாம்பூச்சிகள் அமர்வதும் பறப்பதுமாய் இருந்தன. கந்தனுக்கு அவற்றைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருந்தது. அந்தப் பட்டாம் பூச்சிகளில் ஒன்றையாவது பிடித்துவிட வேண்டும் என்ற ஆவல் அவனுள் எழுந்தது. 

மெல்ல ஒரு பட்டாம்பூச்சியின் அருகே சென்றான். சிவப்பு வண்ணத்தில் கருமை நிறக் கோடுகளும், மஞ்சள் புள்ளிகளுடனும் அது இருந்தது. கட்டை விரலையும் ஆள்காட்டிவிரலையும் குவித்துக்கொண்டு அருகே சென்றான் கந்தன். ம்ஹூம்.... அது பறந்து விட்டது!

அடுத்து ஒரு மஞ்சள் நிறப் பட்டாம்பூச்சி! அது சிவப்பு மலரில் அமர்ந்தது! அதைப் பிடிக்க அருகே சென்றான் கந்தன். இவன் பிடிக்கப் போகும் சமயம் பார்த்து அதுவும் பறந்து தப்பித்துவிட்டது!

மற்றும் ஒரு நீல நிறப் பட்டாம்பூச்சி! அதைப் பிடிக்கப் போனான். அதுவும் தப்பித்துச் சிறகடித்தது. அவற்றின் சுறுசுறுப்பும் கந்தனை வெகுவாகக் கவர்ந்தது. எனினும் மனதை சமாதானப்படுத்திக்கொண்டு அங்குள்ள இயற்கையை ரசிக்க ஆரம்பித்தான். அவன் அந்தப் பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டான்.

உயர்ந்த மரங்களையும் அவற்றிலிருந்து உதிரும் பூக்களையும் ரசித்தான்! பறவைகளின் அழகையும், அவை ஏற்படுத்தும் இனிமையான ஒலிகளையும் ரசித்தான். மலர்களின் வண்ணங்களையும், அவை வீசும் நறுமணத்தையும் ரசித்தான். அவற்றைச் சுற்றிச் சுற்றி வரும் பட்டாம்பூச்சிகளையும் ரசித்தான்! அவன் உள்ளம் பரவசத்தில் ஆழ்ந்தது. 

இப்போது அவற்றைப் பிடிக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. அவற்றின் மகிழ்ச்சியிலும், சுதந்திரத்திலும் நாம் ஏன் தலையிட வேண்டும் என்று நினைத்தான்! 

இரு கைகளின் விரல்களையும் கோர்த்துக் கொண்டான். கண்களை சற்று நேரம் மூடிக்கொண்டான். அவன் முகத்தில் ஓர் ஆனந்தப்  புன்னகை! 

சிறிது நேரம் ஆயிற்று! மெல்ல கண்களைத் திறந்தான். விரல்கள் கோர்த்து இருந்த அவன் கைகளில் பட்டாம்பூச்சி வந்து அமர்ந்திருந்தது! அது அவனிடம் பேசுவது போல் இருந்தது. அந்த மொழியில் அன்பு இருந்தது. 

அவன் அந்தப் பட்டாம்பூச்சிக்கு இடைஞ்சல் ஏற்படாதவாறு கைகளை அசையாது வைத்திருந்தான். சற்று நேரத்தில் அது பறந்து ஒரு சிறு வட்டம் அடித்து அவனது தோளில் அமர்ந்து கொண்டது!  

அவன் அந்தப் பட்டாம்பூச்சிக்கு நன்றி சொன்னான்.  அந்தப் பட்டாம்பூச்சி சிரித்துக்கொண்டே விடைபெற்றுக்கொண்டது.

இப்போது கந்தன் உயிர்களின் மொழி அன்பு என்பதை  உணர்ந்தவன் ஆகிவிட்டான்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com