மரங்களின் வரங்கள்!: பழத்தில் இருக்கு சத்து - முருகல் மரம்
நான் முருகல் மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் கார்சினியா இண்டிகா என்பதாகும். நான் குலுசியேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.


குழந்தைகளே நலமா?
நான் முருகல் மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் கார்சினியா இண்டிகா என்பதாகும். நான் குலுசியேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். என் இலைகள் நீள்சதுரம் அல்லது ஈட்டி வடிவில் இருக்கும். என் இலைகளின் மேற்பகுதி பச்சை நிறைமாகவும், அடிப்பகுதி வெளிர்நிறமாகவும் இருக்கும். நான் நவம்பர், பிப்ரவரி மாதங்களில் அழகிய பூக்களைப் பூப்பேன். என் கனிகள் ஏப்ரல் மாதங்களில் பழுக்கும். பழங்கள் உருண்டையாக இருக்கும். காய்கள் பழுத்து, அடர் ஊதா நிறத்திலிருக்கும், ஒவ்வொரு பழத்திலும் 5 முதல் 8 பெரிய விதைகள் இருக்கும்.
குழந்தைகளே, என் மரத்தின் பழங்கள் இனிய நறுமணமுடையவை, இனிப்புக் கலந்த புளிப்புச் சுவை கொண்டவை. என் பழத்தின் மேல் தோலை உலர்த்தி, கனிச்சாறில் அமிழ்த்து எடுத்து, மீண்டும் சூரிய ஒளியில் உலர்த்திக் "கோகம்' எனும் பொருள் தயாரிக்கிறாங்க. இது எதுக்கு பயன்படும் தெரியுமா குழந்தைகளே, புழுக்களைக் கொல்ல. என் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயத்திற்கு நல்லது. மேலும், மூலநோய், சீதபேதி, கட்டி, உடல்வலி போன்ற நோய்களையும் தீர்க்கும். என் இலைகளை அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால், அக்கட்டிகள் இருந்த இடம் தெரியாது. இது காயங்களுக்கும், உதடு, கைகளில் ஏற்படும் புண்களுக்கும் அருமருந்தாகும்.
குழந்தைகளே, மனிதர்களின் நாகரிக வளர்ச்சிக்கு மரங்களின் பங்கு மகத்தானது. உங்களுக்குத் தெரியுமா, ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்கு சமமான நன்மைகளை உங்களுக்குக் கொடுக்குது. உங்கள் நன்மைக்காக, நீங்கள் உயிர் வாழ ரூ.5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை நாங்கள் வெளியிடுகிறோம். ரூ. 6.40 லட்சம் மதிப்பு மண் அரிப்பை தடுக்கிறோம். நீங்கள் உண்டு களிக்க ரூ.10 லட்சம் மதிப்புள்ள உணவு பொருள்களைத் தருகிறோம். காற்றினால் தான் பலவிதமான நோய்கள் பரவுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? நீங்கள் நோயினால் வாடக் கூடாது என்பதற்காக ரூ.10.30 லட்சம் மதிப்பு காற்று மாசுப்பாட்டை தடுக்கிறோம். ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டை ஆக்சைடின் அளவு ஆயிரம் கிலோ.
குழந்தைகளே, நாங்கள் வேர்கள் மூலம் எங்கள் தாய் மண் தரும் நீரையும், இதர சத்துகளை உறிஞ்சியும், எங்கள் தந்தை விண்ணிலிருந்து வீசும் சூரிய ஒளி மூலம் கொடுக்கும் சத்துகளை உண்டும், நாங்கள் என்றும் பசுமையாக இருக்க எங்கள் சகோதரர் காற்றின் துணையோடு உங்களுக்கும், பல்வேறு உயிரினங்களுக்கும் என்றும் உதவ தயாராகக் காத்திருக்கிறோம்.
அதாவது குழந்தைகளே, பூமியிலிருந்து 93 மில்லியன் மைல்களுக்கு அப்பாலுள்ள எங்கள் தந்தை சூரியன் அள்ளித் தெளிக்கும் ஒளிக்கதிர்கள் மூலம், எங்களுக்குத் தேவையான ஆற்றலையும், எங்கள் தாய் மண்ணிலிருந்து பல்வேறு வகையான ஊட்டச் சத்துகளையும், அண்டவெளியிலுள்ள கரியமில வாயு, கடலிலிருந்து மேகமாக உருமாறி, திரும்ப உங்களுக்கே கிடைத்திடும் மழைநீர், இவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, அனைத்து உயிரினங்களுக்கும் உணவாகவும், உடையாகவும், இருப்பிடமாகவும், இதர பொருட்களையும் உருவாக்க உதவியும் இந்த உலகிற்கு நாங்கள் செய்யும் சமுதாயப் பணி அளப்பரியது என்பதை நீங்கள் உணர வேண்டும். எங்களை உருவாக்கிய தாய் மண்ணிற்கு நாங்கள் எங்களையே தந்து விட்டு செல்கிறோம். இறைவன் மனிதனுக்கு தந்த வரம் மரம் என்பதை மறந்துடாதீங்க. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...