தன்னம்பிக்கை!

ஓர் ஆற்றின் கரை அருகே ஒரு வேப்பமரம் இருந்தது. அந்த வேப்பமரத்தில் சுஸ்வரூபி என்று ஒரு குருவி.
தன்னம்பிக்கை!

ஓர் ஆற்றின் கரை அருகே ஒரு வேப்பமரம் இருந்தது. அந்த வேப்பமரத்தில் சுஸ்வரூபி என்று ஒரு குருவி. அது அந்த மரத்தில் கூடுகட்டி முட்டைகள் இட்டு குஞ்சுகள் பொறித்து இருந்தது. தன் குஞ்சுகளை பாசமாக பராமரித்து வந்தது.

ஒருநாள் பலத்த காற்றுடன் மழை வேகமாகப் பெய்தது. இதனால் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது! சுஸ்வரூபியின் கூடு சேதமடையத் தொடங்கியது.

குஞ்சுகளுக்கு பயம் கவ்விக்கொண்டது. அம்மா!.... இப்போ என்னம்மா செய்யறது!.... நாங்களெல்லாம் கீழே ஓடும் ஆற்றில் விழுந்துடுவோமா?...எங்களுக்குப் பறக்கக்கூடத் தெரியாதே..... இப்படி மழை பெய்கிறதே..... அம்மா!.... நீ எங்கேயாவது போய்விடும்மா!.... உன்னால் பறக்க முடியும்! எங்களைப் பற்றிக் கவலைப்படாதே.... நீ நினைத்தால் மேலும் முட்டைகள் இட்டுக் குஞ்சு பொறித்துக் கொள்ளலாம்.... இந்த மழையில் எங்களைத் தூக்கிக்கொண்டு உன்னால் பறக்க முடியாது!.... எங்களைக் கடவுள் காப்பாற்றுவார்!'' என்றன.

சுஸ்வரூபிக்கு அழுகையே வந்துவிட்டது!.... குழந்தைகளின் பேச்சு அவளது நெஞ்சைக் கரைத்துவிட்டது. எவ்வளவு அறிவாய் பேசுதுங்க என் குஞ்சுகள்! இவைகளையா விட்டுவிட முடியும்?.... கண்ணீர் முட்டியது. கடவுளைப் பிரார்த்தித்தது.

இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ""கண்மணிகளா!.... அப்படிச் சொல்லாதீங்க.....

நம்மகிட்டே தன்னம்பிக்கை இருக்கிறது.... எந்தத் தடங்கல் வந்தாலும் சமாளிப்போம்!..... கவலைப்படாதீங்க....''என்றது சுஸ்வரூபி.

அப்போது அந்த மரத்தில் ஒரு பொந்து இருப்பதை சுஸ்வரூபி கவனித்துவிட்டது! பொந்தின் உள் சென்று பார்த்தது. பொந்து பாதுகாப்பாகத்தான் இருந்தது.

உடனே சுறுசுறுப்பாக ஒவ்வொரு குஞ்சாகத் தூக்கி வந்து பொந்துக்குள் விட்டது. குஞ்சுகள் பத்திரமாக கணகணப்புடன் இருந்தன. இறக்கைகளைச் சிலுப்பிக்கொண்டு மழை நிற்கும்வரை காத்திருந்தது சுஸ்வரூபி!

மழையும் நின்றது. உடனே பறந்து சென்று குழந்தைகளுக்கு உணவை எங்கேயோ தேடிச் சென்று கொண்டுவந்தது. குஞ்சுகளும் வயிறார உண்டன.

மறுபடியும் பறந்து சென்ற சுஸ்வரூபி, குச்சிகளைச் சேகரித்துக்கொண்டு வந்து மளமளவென்று கூட்டை சிறப்பாகக் கட்டிவிட்டது!

""புது வீடு ரொம்ப அழகா இருக்கு!'' என்றது ஒரு குஞ்சு.

""அம்மான்னா அம்மாதான்.... எவ்வளவு தைரியமா இருக்காங்க...'' என்றது ஒரு குஞ்சு.

""வயிறார சாப்பாடும் தந்தாங்களே!... பத்திரமா இருக்க, கூடும் கட்டிட்டாங்களே...'' என்றது இன்னொரு குஞ்சு.

"" எப்பவும் நம்பிக்கையை இழக்கக்கூடாது....

அப்படி இருந்தால் நமக்கு கடவுள் உதவி செய்வார்.... சமயத்துக்கு உதவறதுக்கு இந்த வேப்பமரத்திலே ஒரு பொந்து இருந்ததே.... '' என்றது சுஸ்வரூபி.

""நீதாம்மா எங்களுக்குக் கடவுள்!'' என்றன அந்த அறிவு மிகுந்த குஞ்சுகள்!

""சந்தோஷமாய் குழந்தைகளைக் கொஞ்சியது சுஸ்வரூபி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com