அரங்கம்  ராமு மாறிவிட்டான்

ராமு பள்ளியிலிருந்து ஆட்டோவில் வீட்டிற்கு வருகிறான். பக்கத்து வீட்டில் சாவி வாங்கி, வீட்டைத் திறந்து உள்ளே வருகிறான்.
அரங்கம்  ராமு மாறிவிட்டான்


காட்சி  1
இடம் : ராமு வீடு.
நேரம் : மாலை
பாத்திரங்கள்: ராமு, அம்மா, அப்பா.

(ராமு பள்ளியிலிருந்து ஆட்டோவில் வீட்டிற்கு வருகிறான். பக்கத்து வீட்டில் சாவி வாங்கி, வீட்டைத் திறந்து உள்ளே வருகிறான். பையைப் போட்டுவிட்டு சோபாவில் படுக்கிறான். வெகு நேரம் கழித்து அவன் அம்மா, அப்பா வருகின்றனர்.)
அம்மா: ராமு செல்லம்... என்னடா கண்ணா என்ன ஆச்சு?  ஷு, யூனிபாம் எல்லாம்  கழட்டல,  லைட்கூடப் போடலை.
அப்பா: முடியலையா ராஜா?
அம்மா: உடம்பு சரியில்லையா கண்ணா? (தலை, கழுத்தில் கை வைத்துப் பார்க்கிறாள்)
ராமு: (வெறுப்பாக) உடம்புக்கு ஒண்ணுமில்லை. எப்பப் பாரு நானே கதவத் திறந்து உள்ள வந்து... எனக்குப் பிடிக்கவேயில்லை. எங்க ஸ்கூல்ல எல்லாருக்கும் அப்பா அல்லது அம்மா வந்து கூட்டிகிட்டுப்  போறாங்க. நீங்க வீட்டு வாசல்லகூட வந்து கூட்டிக்க மாட்டீங்க.
அப்பா: ராமு உனக்குத் தெரியாதா? அம்மாவும் அப்பாவும் வெளியூர்ல வேலை பார்க்கிறோம். ஆறு மணிக்குத்தான் வருவோம். 4 மணிக்கு ஸ்கூல் முடிஞ்சு நீ வீட்டுக்கு வர ஆட்டோ ஏற்பாடு பண்ணிருக்கோம். 
அம்மா: ராமு செல்லம், வாடா கண்ணா. கைகால் கழுவிட்டு சாப்பிடலாம்.
அப்பா: ஆமாடா செல்லம் உனக்கு வச்ச பழம், பலகாரமெல்லாம் அப்படியே இருக்கே. எப்பவும் சாப்பிட்டு விளையாடுவ. நாங்க வரும்போது ஹோம்வொர்க் பண்ணுவ...
ராமு: இல்ல... இனிமே நீங்க வீட்ல இருந்தாதான் வீட்டுக்குள்ள வருவேன்.
அம்மா: சரி ராமுகண்ணா. 
      

காட்சி 2
இடம் வீடு 
நேரம் இரவு
பாத்திரங்கள்: ராமு, அம்மா.
(இரவு படுத்தவுடன்)

ராமு: அம்மா, நாளைக்கு நான் ஸ்கூல்ல இருந்து வரும்போது வீட்டில இருப்பியா?
அம்மா: அதைக் காலையில பார்ப்போம். இப்பத் தூங்குப்பா.
ராமு: இல்லம்மா.. நீ இருக்கணும்.
அம்மா: சரி ராமு இருக்கேன்.

காட்சி 3
இடம் வீடு
நேரம்  மாலை

பாத்திரங்கள்: ராமு, அம்மா, பக்கத்து வீட்டுப் பாட்டி, எதிர் வீட்டு அத்தை, அடுத்த வீட்டு அக்கா, ராமுவின் நண்பர்கள்.

(ராமு பள்ளியில் இருந்து ஆட்டோவில் வந்து இறங்குகிறான். அவன் அம்மா வாசலில்  நிற்கிறாள். ராமுவின் பையை வாங்கிக் கொள்கிறாள். ராமு மகிழ்ச்சியோடு குதித்தபடி, அம்மா கையைப் பிடித்துக் கொண்டு வருகிறான்)
ராமு: (அக்கம் பக்கத்தாரிடம்) பாட்டி எங்கம்மா இன்னைக்கு வீட்டிலே இருக்காங்க. அத்தை, அக்கா இங்க பாருங்க எங்கம்மா வீட்டிலே இருக்காங்க. ஜாலி... ஜாலி... ( உற்சாகம் பொங்க அம்மாவுடன் வீட்டிற்குள் போகிறான்)
அம்மா: ராமு செல்லம், இங்கப் பாரு. உனக்காக என்ன செய்திருக்கேன் தெரியுமா?

ராமு:  ஐ.. வாழக்கா பஜ்ஜி, கேசரி... சூப்பர்மா!

அம்மா: சரி சாப்பிட்டு விளையாடப் போ. அப்புறம் வந்து ஹோம் வொர்க் பண்ணலாம்.

ராமு: சரிம்மா. என் செல்ல அம்மா. நீங்க சொல்றதக் கேட்பேன். ஆனா தினமும் நான் வரும்போது நீங்க வீட்டிலே இருக்கணும் சரியா? 

(ராமு நண்பர்களிடம் இன்று அம்மா வீட்ல இருக்காங்கனு பெருமையாச் சொன்னான். விளையாட்டுக்கு இடையிடையே அம்மா வீட்லதான் இருக்காங்களானு வந்து பார்த்தான்)

காட்சி    4
இடம்  வீடு
நேரம்  காலை

பாத்திரங்கள்: ராமு, அம்மா, அப்பா.
ராமு: அம்மா... இன்னைக்கு சாய்ந்திரமும் நான் வரும்போது நீங்க வீட்ல இருக்கணும்.
அப்பா: ராமு, நீ இன்னைக்கு அம்மாகூட ஒரு இடத்துக்குப்  போகப் போற.
ராமு: எனக்கு இன்னைக்கு ஸ்கூல் உண்டே...
அம்மா: உங்க மிஸ்ஸூக்கு போன் பண்ணி லீவ் சொல்லிட்டேன்.
ராமு:  ஓ... ஜாலி. எங்கம்மா போகப்போறோம்?
அம்மா: போகும்போது தெரியும்.

காட்சி  5
இடம்: ராமு, அம்மா ஆசிரியையாக வேலை பார்க்கும் மாற்றுத் 
திறனாளிகள் பள்ளி.

நேரம்  காலை
பாத்திரங்கள்: ராமு, அம்மா, மாற்றுத் திறனாளி மாணவர்கள்.
(ராமுவும் அவன் அம்மாவும் பஸ்ûஸ விட்டு இறங்கி, பள்ளி வாசலில் கால் வைத்தவுடன், வாயில் எச்சில் ஒழுக, தலையைச் சாய்த்தபடி ஒரு சிறுமி ஓடி வருகிறாள்)
சிறுமி: டீச்சர்... டீச்சர்... நேத்து ஏன் வரலை? என்னைப் பிடிக்கலையா? இனிமே நீங்க சொன்ன மாதிரி எழுதறேன் டீச்சர் (என்று கூறியபடி அழத் தொடங்கினாள்)
அம்மா: அழக்கூடாது ராணி. நான்தான் வந்துட்டேனே... எங்க சிரி பார்க்கலாம்.
(மரத்தடியில் உட்கார்ந்திருந்த சிவா என்ற சிறுவன் டீச்சர் குரலைக் கேட்டதும் எழுந்து வந்தான்)
சிவா: டீச்சர் வந்துட்டீங்களா? நேத்து "ஒளி படைத்த கண்ணினாய் ..' பாட்டு சொல்லித் தரேன்னு சொன்னீங்க. எனக்குத்தான் கண்ணிலே ஒளியில்லையே... அதனால சொல்லித் தராம போயிட்டீங்கனு நினைச்சேன்.
அம்மா: இல்ல ராஜா, நா எங்கையும் போகல. இன்றைக்கு நிச்சயம் சொல்லித் தரேன்.
(காலை இழுத்து இழுத்து நடந்தபடி நிலா என்ற சிறுமி வந்தாள்)
நிலா: நேற்று ஏன் வரலை டீச்சர்? காய்ச்சலா? (கழுத்தில் கை வைத்துப் பார்த்தாள்)
அம்மா: இல்லை நிலா. நல்லா இருக்கேன்.
நிலா: இந்தத் தம்பி யாரு?
அம்மா: இவன் ராமு... என் மகன்.
ராஜா: ராமு எங்ககூட விளையாடுவியா?
ராமு: ஓ.... விளையாடுவேனே...

(நாள் முழுவதும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் இருபது பேரும் அம்மாவிடம் காட்டும் அன்பையும், அவர்களை அம்மா அக்கறையுடன் கவனித்துச் சொல்லிக் கொடுப்பதையும் ராமு வியப்போடு பார்த்தான்)

அம்மா: குழந்தைகளா மணி அடிச்சிடுச்சு. வாங்க விடுதிக்குப் போகலாம்.
(குழந்தைகளை விடுதிக் காப்பாளரிடம் ஒப்படைத்தார் ராமுவின் அம்மா. ராமுவும் அம்மாவும் வீட்டிற்குச் செல்ல பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தனர்)
அம்மா: என்ன ராமு பேசாம இருக்க. உனக்கு எங்கப் பள்ளிக்கூடம் பிடிச்சிருக்கா?
ராமு:  ம்.. பிடிச்சிருக்கு.  என்னை மன்னிச்சிடும்மா. நீ கொஞ்ச நேரம் லேட்டா வரதுக்கு நான் கோபப்பட்டேன். ஆனா இங்க எத்தனை குழந்தைகள் எப்படி எல்லாம் கவலைப்பட்டிருக்காங்க. உன்கிட்ட எப்படிப் பாசமா இருக்காங்க.
இனி நீ வரதுக்குள்ள ஹோம் வொர்க் செய்துட்டு விளையாடிக்கிட்டிருக்கேன். நீ இனிமே லீவே போடாதம்மா. பாவம் அந்தப் பசங்க. உன்னை வரவேற்க இனி நான் மகிழ்ச்சியோட காத்துக்கிட்டு இருப்பேன்.
அம்மா:  ராமு நான் நினைச்சபடியே நீ சரியாப் புரிஞ்சுக்கிட்டடா செல்லம். 

திரை  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com