இயந்திரம் இல்லாத விமானத்தை (கிளைடர்) தனியாக இயக்கி, 'ஆசியாவின் மிக இளம் வயது சோலோ கிளைடர் பைலட்' என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த பதினான்கு வயதுச் சிறுவர் அபினவ் சுஜித் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் கென்ட் எனும் பகுதியில் 2025 அக்டோபர் 6-இல் தனியாக இயந்திரம் இல்லா விமானத்தை இயக்கி வானில் பறந்தார். மூன்று ஆண்டுகளாக வார இறுதி நாள்களில் மட்டும் மேற்கொண்ட பயிற்சியின் பலனாக அமைந்த இந்த சாகச நிகழ்வு அபினவை சாதனையாளராக மாற்றியுள்ளது.
வானில் பரந்த அனுபவம் குறித்து அபினவ் கூறியது:
' எனக்கு எட்டு வயதாக இருக்கும்போது, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடற்கரையோரத்தில் செய்த சிறிய பாராகிளைடர் பயணம் என் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது. பறவை போல வானத்தில் பறந்து மேலிருந்து கடற்கரையைப் பார்த்தபோது, மேகங்களைப் பார்க்கும் வகையில் இன்னும் உயரே பறக்க வேண்டும் என்று பயிற்சியாளரிடம் சொன்னேன்.

சென்னையில் இருந்தபோதே, விமானங்கள், கிளைடர்கள் வானில் பறப்பது தொடர்பான காணொலிகள், ஆவணப்படங்களைப் பார்ப்பதில் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவேன். 2021 நவம்பரில் எனது அப்பாவின் வேலை நிமித்தமாக நாங்கள் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தோம். இந்த இடமாற்றம், சென்னையில் எனக்குக் கிடைக்காத பல வாய்ப்புகளை வழங்கியது.
கென்ட் பகுதியில் உள்ள ஓர் உள்ளூர் கிளைடிங் கிளப்பில், இருவர் அமரக்கூடிய கிளைடர் விமானத்தில் பறந்த சோதனைப் பயணம் மேலும் ஆர்வத்தை என்னுள் விதைத்தது. இயந்திரம் இல்லா கிளைடர் விமானத்தில் பறக்கமுடியும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை.
ஒருமுறை விமானப் பயணத்தின்போது, கயிறு அறுந்ததால், அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கவனம், பொறுப்புணர்வைப் பற்றிய ஒரு பாடமாக அந்தச் சம்பவம் அமைந்தது. பறக்கும்போது பயிற்சியாளரிடம் பல கேள்விகளைக் கேட்டு ஒவ்வொரு சந்தேகத்தையும் தெளிவாக்கிக் கொண்டேன். 9-ஆம் வகுப்பில் படிக்கும் நான், பெரும்பாலான விமானப் பயணங்கள் வார இறுதி நாள்களில் இருப்பதாய்ப் பார்த்துக் கொள்கிறேன்.
மூன்று ஆண்டுகள் பயிற்சியில், விமானத்தை மேலே உயர்த்துதல், தரையிறக்குதல், அவசரக்கால நடைமுறைகள், வானிலை நிலவரங்களை அறிந்துகொள்ளுதல் ஆகியவற்றில் நான் தேர்ச்சி பெற்றேன். 2025 அக்டோபர் 6-இல், அதாவது எனக்கு 14 வயது பூர்த்தியானபோது, முதல் தனி விமானப் பயணத்தை மேற்கொள்ள அனுமதி கிடைத்தது. வானத்தில் பறந்து, நிதானமாகத் தரையிறங்கியபோது, என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் நிகழ்வாக அது அமைந்தது.
'ஏரோ கிளப் ஆஃப் இந்தியா' என்னை ஆசியாவிலேயே மிக இளம் வயது தனி கிளைடர் விமானியாக அங்கீகரித்தது. அதிகாரபூர்வ கிளைடிங் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கும் சர்வதேச விமான விளையாட்டுக் கூட்டமைப்பு விளையாட்டு உரிமத்தை எனக்கு வழங்கியது. வானத்தில் பறக்கும்போது அச்சுறுத்தும் தருணங்களை எப்படி நிதானமாகக் கையாளுவது என்பதைக் கற்றேன். சர்வதேச அளவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்
படுத்துவதுதான் எனது லட்சியம். அதற்கு விமானப் பயண அனுபவத்தை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விமானப் பயணமும் எனக்குப் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொடுக்கிறது'' என்கிறார் அபினவ் சுஜித்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாக சென்ற பெண்ணிடம் நகைப்பறிப்பு! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

இளம் வயது கா்ப்பம் தொடா்பான வழக்குகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

கல்வி அமைப்பு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்: அபினவ் பிந்த்ரா

இளம் வயதில் கால்பந்து உலகக்கோப்பை வென்ற வீரர்கள்!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



