சிறுவர் நூல் அரங்கம்
கண்டுபிடிப்புகள்: கேள்வியும் பதிலும் வள்ளிதாசன் ரூ. 90

கண்டுபிடிப்புகள்: கேள்வியும் பதிலும் வள்ளிதாசன் ரூ. 90
ஒரு கண்டுபிடிப்பாளனின் மிகச்சிறந்த கருவி அவனுடைய கற்பனை. அதனால்தான், 'கற்பனையானது அறிவை விட முக்கியமானது. அறிவு வரையறுக்கப்பட்டது; கற்பனையோ உலகையே வலம் வரும்' என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியிருக்கிறார்.
வீட்டில் உள்ள பொருள்களே ஒரு கண்டுபிடிப்பின் பிறப்பிடம். உலகின் மாபெரும் கண்டுபிடிப்பாளர்களும் ஒரு காலத்தில் சாதாரணமானவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். எனவே உங்களின் 'ஏன்?' என்ற கேள்வியே பின்னால் பெரிய கண்டுபிடிப்புக்கு பதிலாக அமையும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், இந்நூலில் ஏராளமான கண்டுபிடிப்புகளின் பின்னணி எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளது.
இது தவிர, 'இந்தியாவில் இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்க என்னென்ன திட்டங்கள் உள்ளன? அதன் மூலம் பயன் பெறுவது எப்படி?' என்பது குறித்தும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
(பட்டர்பிளை புக்ஸ் வெளியீடு, சென்னை -600 004. ✆ 96003 98660)
முளைக்கும் விதைகள் பானு லட்சுமி ராமராஜ் ரூ.100
குழந்தைகளுக்கான கதைகள் என்பது வெறும் பொழுதுபோக்குச் சாதனங்கள் மட்டுமல்ல; அறிவு, உணர்வு மற்றும் சமூகத் திறன்களை வளர்க்கும் வல்லமை படைத்தவை. ஒரு கதையை குழந்தைகள் படிக்கும் போது புதிய சொற்கள், வாக்கிய அமைப்புகள், உச்சரிப்புகளைக் கற்றுக்கொள்கிறார்கள். நேர்மை, அன்பு, பொறுமை, தைரியம் போன்ற நற்பண்புகளை அது அவர்களின் மனதுக்குள் விதைக்கின்றன.
இந்தத் தொகுப்பில் உள்ள ஆறு கதைகளும் பன்முக வளர்ச்சிக்குத் தேவையான, அத்தியாவசியமான திறன்களைப் பேசுகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் வெற்றிகரமாக, சுதந்திரமாக, தன்னம்பிக்கையுடன் வாழத் தகுதியான அடிப்படைகளைக் கற்பிக்கின்றன.
மேலும் ஒவ்வொரு கதையோடும் 'உங்கள் சிந்தனைக்கு' மற்றும் 'பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்' என இரு பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது குழந்தைகளுடன் அர்த்தமுள்ள உரையாடல்களை பெரியவர்கள் தொடங்க வழிகாட்டுகின்றன.
(விங்ஸ் வெளியீடு, சென்னை - 600 083. ✆ 96003 98660)
சிரிக்க சிந்திக்க தெனாலிராமன் கதைகள் ஆசிரியர் குழு ரூ. 200
விஜயநகரப் பேரரசை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையில் இருந்த புகழ்பெற்ற கவிஞர், அறிஞர், விகடகவி தெனாலிராமன். அறிவாற்றலினால் அரசவைக்கு வரும் வழக்குகளில் சிக்கல் ஏற்படும்போது மிகத் திறமையாகத் தீர்ப்புகளை நகைச்சுவையோடு கூறுவான். தெனாலிராமனின் ஒவ்வொரு பேச்சும் செயலும் சிரிப்பை மட்டுமல்ல; சிந்தனையையும் தூண்டும்.
இவனது கூர்மையான புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு கொண்ட கதைகள் மிகவும் பிரபலம். பெரும்பாலான இந்திய மொழிகளில் இவனைப் பற்றிய பாடக் குறிப்புகள் உள்ளன. இவனது நகைச்சுவை உலகப் புகழ்பெற்றவை.
இந்நூலில், தெனாலிராமன் பிறந்தது முதல் அவனது இறுதிக் காலம் வரை 49 அத்தியாயங்களாகக் கூறப்பட்டுள்ளன. இதில் அவன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் சுவையாகவும் அறிவாற்றலை வளர்க்கும் வகையிலும் சொல்லப்பட்டுள்ளன.
(மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017. ✆ 91764 51934)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

