பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: பரதத்தில் பாரதம்

நகைச்சுவை வசனம் எழுதுவதற்கென்றே திரைப்படத் துறையில் ஒருவர் மதிக்கப்பட்டார். அவர் பெயர் ஏ.வீரப்பன். அவர் கலைவாணர் காலமான அதே தினம் (ஆகஸ்ட் 30) காலமானார். "தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜீவநதி' என்று அவர்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:39 am

சாருகேசி

நகைச்சுவை வசனம் எழுதுவதற்கென்றே திரைப்படத் துறையில் ஒருவர் மதிக்கப்பட்டார். அவர் பெயர் ஏ.வீரப்பன். அவர் கலைவாணர் காலமான அதே தினம் (ஆகஸ்ட் 30) காலமானார்.

"தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜீவநதி' என்று அவர் நினைவாக ஒரு நூலை அவர் துணைவி பொற்கொடி வீரப்பன் வெளியிட்டிருக்கிறார். (அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் இயக்குநர் விசு, வீரப்பனை தேசிய கலைஞர் என்று புகழ்ந்து பாராட்டினார்.) கட்டுரைத் தொகுப்பில் பல கட்டுரைகளுக்கு வீரப்பன் கார்ட்டூன் போலப் படம் வரைந்திருக்கிறார்.

ஏவி.எம். செட்டியார் அவர்களைச் சந்திக்கும்போது அவர் "சுகர்' இல்லாத காபியும், இவர் சர்க்கரை போட்ட காபியும் சாப்பிட வீரப்பன் அடித்த ஜோக்:

""சுகர்ங்கிறது எல்லாருக்குமே உண்டுங்க. ஒரே ஒருத்தருக்குத்தான் சுகர் கிடையாது''

""அது யாரப்பா?''

""பழைய இந்தோனேசிய அதிபர் சுகர்னோ!''

எம்.ஜி.ஆர். சொல்லித்தான் வீரப்பன் திரைப்படங்களில் நகைச்சுவைப் பகுதி எழுத வந்தாராம். அதில் அவருடன் நடிக்க, தன் நண்பர் நாகேஷை ஒரு வாடகை சைக்கிளில் பின்னால் உட்கார வைத்து அவரை எம்ஜிஆருக்கு அறிமுகப்படுத்தி "பணத்தோட்டம்' படத்தில் நடிக்க வைத்தாராம்.

""எந்த இடத்திலும் உட்கார்ந்து நகைச்சுவைப் பகுதியை எழுதும் ஆற்றல் மிக்கவர் ஏ. வீரப்பன். அதற்குக் காரணம் இயற்கையாகவே அவர் நகைச்சுவை உணர்வு கொண்டவர். சேவா ஸ்டேஜ் எஸ்.வி. சகஸ்ரநாமம் அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். பி.எஸ். ராமையா, தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன் போன்ற இலக்கிய மேதைகளின் பாராட்டைப் பெற்றவர். கர்நாடக சங்கீதத்தை நன்றாகப் பாடும் திறமை அவருக்கு உண்டு. மாயவரம் ராஜகோபால் அவர்களிடம் பாட்டு கற்றுக் கொண்டார்'' என்கிறார் அவருடன் நெருங்கிப் பழகியவரும் அவர் நினைவு தினத்தை நடத்தி வருபவருமான பி.ஆர்.துரை.

நகைச்சுவையில் ஆபாசம் கூடாது. இரட்டை அர்த்தத்துடன் கூடிய ஆபாசமான நகைச்சுவைக் காட்சியைப் பெண்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் என்ற கருத்து உடையவராம் வீரப்பன்.

""நாகேஷ், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், ஜனகராஜ், கவுண்டமணி, எஸ்.எஸ்.சந்திரன், செந்தில், விவேக், வடிவேலு போன்ற அத்தனை நகைச்சுவை நடிகர்களுக்கும் காமெடி ட்ராக் எழுதியிருக்கிறார்'' வீரப்பன் என்று பிரமிக்க வைக்கிறார் துரை.

மறைந்த கர்நாடக இசைப் பாடகர் கே.வி. நாராயணசாமிக்குப் பக்க வாத்தியமாக வயலின் வாசித்தவர் இளைஞர் ஸ்ரீவத்சன். அமெரிக்காவில் வசித்து வருகிறார். கே.வி.என்.னிடமே இசையும் கற்றுக் கொண்டவர். சென்ற வாரம், குறிப்பிட்ட அழைப்பாளர்களிடையே ஒரு கச்சேரி செய்தார். கே.வி.என்.னின் முத்திரை தாங்கிய "எவரி மாட', "இரக்கம் வராமல் போனதென்ன காரணம்?', "சாகர சயன விபோ' பாடல்களைப் பாடி குருவை நினைக்க வைத்தார் ஸ்ரீவத்சன். (பாணி மட்டும்தான் கே.வி.என். மாதிரி என்றால் மானரிஸம்கூட குருவிடம் இருந்து கற்றுக் கொண்டது மாதிரி இருந்தது!)

மிருதங்கக் கலைஞரான டி.சியாம் சுந்தர் இப்போது பாடவும் ஆரம்பித்திருக்கிறார். ஏற்கெனவே இசையில் இருந்த ஆர்வம் காரணமாக வைரமங்கலம் லட்சுமி நாராயணனிடம் அவர் மறையும் வரை இசை கற்றுக் கொண்டவர் சியாம் சுந்தர். ராகசுதாவில் அவர் பாடியபோது, கர்ணரஞ்சனி ராகத்தில் முத்தையா பாகவதர் படைத்த "வாஞ்ச தோனுனா'வை அதன் கரடு முரடான சிட்ட சுவரத்துடன் வழங்கினார். தோடி ராக ஆலாபனையில் முழுக் கவனம் செலுத்திப் பாடினார். வெறும் வடிவத்தை மட்டும் வரையாமல் கொஞ்சம் உழைத்து அந்த ராகத்துக்கே உரிய சில "பிடி'களைப் பாடினார். தொடர்ந்தது முத்துசாமி தீட்சிதரின் "கிருஷ்ணம் பஜ மானஸ'. சியாம் சுந்தர் இன்னும் கவனத்துடன் சாகித்தியத்தை உச்சரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சில வார்த்தைகள் முழுமை பெறாமல் கேட்பது போல் இருந்ததாலேயே இந்தச் சின்ன அட்வைஸ். வயலின் வாசித்த எம்.ஆர். கோபிநாத் இனிமையைப் பொழிந்தார். திருவனந்தபுரம் பாலாஜி மிருதங்கமும் கோவிந்தராஜன் கடமும் சியாம் சுந்தருக்குத் துணையாக இருந்தன.

சில மாதங்களுக்கு முன்பு க்ளீவ்லேண்ட் தியாகராஜர் ஆராதனைக் குழு சென்னையில் இசைக் கலைஞர் பி. கிருஷ்ணமூர்த்திக்கு (அவர் க்ளீவ் லேண்ட் வர இயலாததால்) ஒரு பாராட்டு விழா நடத்தியபோது, அமெரிக்க கான்சல் ஜெனரல் தலைமை தாங்கினார். அப்போது மேடையில் இருந்த இன்னோர் அமெரிக்கர், தம் பேச்சை முழுக்க முழுக்கத் தமிழிலேயே பேசி, கான்சல் ஜெனரல் உட்பட அனைவரையும் திகைக்க வைத்தார், அவர்.

பேராசிரியர் ரிச்சர்ட் உல்ஃப் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இசைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். மதுரைக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கும் ரிச்சர்ட் உல்ஃப் தமிழ் பயின்றது கே.பரமசிவம் என்பவரிடம்.

நீலகிரி மலைவாழ் மக்களின் இசையைப் பதிவு செய்து ஆய்வு செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக, கர்நாடக இசையை முறையாக 1982 முதல் கற்று, வீணை வாசித்து வருகிறார். முதல்குரு காரைக்குடி லஷ்மி அம்மாள். அவர் மறைவுக்குப் பிறகு, அதாவது 1985க்கு பிறகு, வீணைக் கலைஞர் ரங்கநாயகி ராஜகோபாலனிடம் இன்று வரை கற்றுக் கொண்டு வருகிறார். மதுரையில் தமிழும் வீணையும் கற்கும் போதே கமலா ராமமூர்த்தி என்பவரிடம் ஒரு வருடத்துக்கு மேல் வாய்ப்பாட்டும் கற்றுக் கொண்டாராம். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் மேடையேறி வீணை வாசித்ததுதான் இவருடைய அரங்கேற்ற நிகழ்ச்சி என்று சொல்லலாம்.

சென்ற வாரம் தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் உள்ள ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் இவருடைய வீணைக் கச்சேரி. அதற்காக உமையாள்புரம் மாலி மிருதங்கம் வாசிக்க, சாதகம் செய்து கொண்டிருந்தபோது தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் ரிச்சர்ட் உல்ஃப். (இங்கேயே நிரந்தரமாகத் தன் வீணை ஒன்றை வைத்துவிடுவாராம்.) வாசிப்பில் உழைப்பும் அசாத்திய கவனமும் தெரிகிறது.

"த பிளாக் கௌஸ் ஃபுட் பிரிண்ட்' என்ற நூலுக்காக இவருக்குப் பரிசு கிடைத்திருக்கிறது. "தி யரைஸிங் த லோக்கல்' என்ற புதிய நூல் ஒன்றைத் தொகுத்திருக்கிறார். தெற்காசிய இசை பற்றிய புத்தகம் இது. வெளியிடத் தயாராக இருக்கிறது.

நாரத கான சபாவின் நாட்டியரங்கம், இந்த ஆண்டு நடனவிழாவில் மகாபாரதப் பாத்திரங்களை (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 2 வரை) ஒவ்வொரு நாளும் வழங்கவிருக்கிறது.

முதல்நாள் துவக்க நிகழ்ச்சிக்குப் பிறகு, தனஞ்சயன் பீஷ்மர் பாத்திரத்தை நடனத்தில் வழங்குவார்.

இரண்டாம் நாள் முதல் இரண்டு நிகழ்ச்சிகள். முதல் நாற்பது நிமிடம் நம் பாரம்பரிய நாட்டுப்புற கலை வடிவத்தில் இருக்கும். அடுத்த 75 நிமிடங்கள் அதே பாத்திரத்தை நடனக் கலைஞர் பரதநாட்டிய வடிவில் வழங்குவார்.

மங்கை எழுதிய பனித் தீ இசை நாடகத்தில்  ராணி அம்பை பாத்திரத்தை உஷா தெருக்கூத்து பாணியில் வழங்க, ப்ரியா முரளி பரத நாட்டியத்தில் வழங்குவார்.

குந்தி பற்றி டாக்டர் சுதா சேஷய்யன் உரை. பின்னர் சித்ரா தாசரதி சந்திரசேகர் நடனம்.

நடிகர் நாசர் கர்ணனாக மேடையில் தோன்றி நடிக்கிறார். தொடர்ந்து அனுராதா ஸ்ரீதர் நடனம்.

நடிகை ரோகிணி பாஞ்சாலி சபதத்தின் பகுதிகளைப் படித்து நடிப்பார். அதை தொடர்ந்து ஸ்ரீலதா வினோதின் நடனம்.

கொத்தமங்கலம் விசு அர்ஜுனன் பற்றிய வில்லுப் பாட்டு நிகழ்ச்சி நடத்தி முடித்தவுடன் ஸ்ரீகாந்த் அர்ஜுனனை நடனவடிவில் தருவார்.

இறுதி நாள் நிகழ்ச்சியாக கிரிஜா ராமசாமி கிருஷ்ணர் பற்றி ஹரிகதை நிகழ்த்துகிறார். கலாட்சேத்திராவைச் சேர்ந்த ஷீஜித் கிருஷ்ணா, கிருஷ்ணராக நடனம் வழங்குகிறார்.

இது புது முயற்சி என்பதோடு சிரமமான நிகழ்ச்சி. எல்லா பாத்திரங்களுக்கும் விவரங்கள் சேகரித்து உதவியவர் ஆங்கில- தமிழ் எழுத்தாளர், விமர்சகர்- பேராசிரியர் பிரேமா நந்தகுமார் அவர்கள்.

நடனக் கலைஞர்களுக்கும் சவாலான நிகழ்ச்சிகள்தாம். ஆனால் கலைஞர்கள் லேசுப்பட்டவர்கள் அல்லவே. ரசிகர்களுக்கு விருந்தே வைக்கிறோம் என்கிறார்கள். (விருப்பமுள்ள கலை ரசிகர்களுக்காகத் தனி வரிசைகளில் 200 நாற்காலிகள் மட்டும் 500 ரூபாய் சீஸன் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.