பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம் : ஆறுமுக அரவம்

பாரதி விழாவில் கிரேஸி மோகனின் வெண்பா தொகுதியைக் காலை நிகழ்ச்சியான "ஜதி பல்லக்கு'க்கு முன் வெளியிடும்போது, அறிமுகமான சில எழுத்தாளர்களில் ஒருவர் "பத்மன்'. (நன்றி: திருப்பூர் கிருஷ்ணன்) "பத்மன்'தான் ஆதிச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:37 am

சாருகேசி

பாரதி விழாவில் கிரேஸி மோகனின் வெண்பா தொகுதியைக் காலை நிகழ்ச்சியான "ஜதி பல்லக்கு'க்கு முன் வெளியிடும்போது, அறிமுகமான சில எழுத்தாளர்களில் ஒருவர் "பத்மன்'. (நன்றி: திருப்பூர் கிருஷ்ணன்)

"பத்மன்'தான் ஆதிசங்கரரின் "சுப்ரமண்யபுஜங்கம்' தோத்திரத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பதாகக் கூறி, "ஆறுமுக அரவம்' என்ற அந்தச் சிறு நூலையும் அளித்தார்.

திருச்செந்தூர் கடற்கரையில் கந்தமாதன மலை ஓரத்தில் முருகனை வணங்கி "சுப்ரமண்ய புஜங்கம்'என்ற சம்ஸ்கிருத பாமாலை புனைந்தார் ஆதி சங்கரர். (புஜங்கம் என்றால் பாம்பு என்று பொருளாம்.) சம்ஸ்கிருதத்தில், செய்யுட்களைப் புனையும் ஓசை நயங்களில் புஜங்கமும் ஒன்றாம். "பாடல் முழுவதுமே ஓர் அரவம் (பாம்பு) வளைந்து நெளிந்து சரசரவெனச் செல்வதைப் போன்ற அரவம் (ஓசை) கொண்டது'' என்கிறார் பத்மன்.

இதில் இரண்டாவது பாடல் இப்படி அமைந்திருக்கிறது:

ஓதலும் அறியேன், பொருளும் அறியேன்

பாடலும் அறியேன், உரைகளும் அறியேன்

அகத்தினில் ஓரொளி அறுமுகத்தே உதிக்க

வாக்கினில் சுரந்தது பாக்களின் அருவி

இதை அவையடக்கம் என்று பத்மன் குறிப்பிடுகிறார். யாருக்கு அவையடக்கம்? ஆதிசங்கரருக்காம்! "வேதம் முதலிய ஓதலுக்குரிய விஷயங்களையும் நான் அறிய மாட்டேன். ஓசை நயத்துடன் கூடிய இசை நுணுக்கங்களை நான் அறிய மாட்டேன் என்றும் ஓர் அர்த்தம் கொள்ளலாம். ஏனெனில், சப்தம் என்ற பதத்துக்கு இசை, ஸ்ருதி எனப்படும் வேதம் ஆகிய இரு பொருள்களும் பொருந்தும். அவற்றின் பொருளையும் அறியமாட்டேன். கடவுளைத் துதிக்கும் பாடல்களையோ, அவரது பெருமையை உரைக்கும் கட்டுரைகளையோ நான் அறியமாட்டேன். ஆனால் என் உள்ளத்தில், ஆறுமுகங்களுடன் கூடிய ஓர் ஒளி உதித்தவுடன், அதாவது சண்முகக் கடவுளை நினைத்த மாத்திரத்திலேயே, என் வாக்கில், பாடல்கள் அருவியைப் போல் கொட்டத் தொடங்கிவிட்டன!' என்றார் ஆதிசங்கரர் அடக்கத்துடன்.

பத்மனின் தமிழ் மொழிபெயர்ப்பு ஓசை நயத்துடன் மட்டுமல்ல, வெகு எளிமையாகவும், படித்தவுடன் புரிந்து கொண்டு ரசிக்கும்படியாகவும் இருக்கிறது.

பத்மன் என்ற அனந்த பத்மநாபன், கலைஞர் தொலைக்காட்சியின் இன்புட் எடிட்டர்களில் ஒருவர், "வணிகம் வசப்படும்' நிகழ்ச்சித் தொகுப்பாளர். "தினமணி'யில் பத்தாண்டுகள் பணியாற்றியவர். இணைய தள இதழ்களில் பணி புரிந்திருக்கிறார். "மூன்றாவது கண்' நூலுக்கு அரசின் பரிசு பெற்றவர். "திக்கெட்டும் திருமுருகன்', "அறுபடை அந்தாதி' நூல்களின் ஆசிரியர்.

உரைநடையில் இப்படி சக்கைப் போடு போடுகிறவர் கவிதையில் மட்டும் சோடை போவாரா என்ன!

சென்னையில் இசை மழை பரவலாகத் தொடங்குமுன் நாரத கான சிற்றரங்கில் கோவிலடி மாதவபிரசாத் இசை நிகழ்ச்சியைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. நல்ல காத்திரமான சாரீர வளம். ஆலாபனைகளில் அனாயாசம். வயலின் வாசித்த வெங்கடசுப்பிரமணியனின் பங்கு இனிமையாக இருந்தது. ஆனால் மிருதங்கம் வாசித்தவரின் (பெயர் வேண்டாமே!) அதிரடி வாசிப்பு, செவிட்டில் அறைவது போலிருந்தாலும், நேரில் பார்க்க சுவையாக இருந்தது. அவ்வப்போது இடக் கையை போக்குவரத்து போலீஸ்காரர் போல் உயர்த்தி "டொம்' என்று அறைவதும், கழுத்திலிருந்து அவர் தலை கழன்று விழுந்து விடுமோ என்று பயப்படுகிற அளவுக்கு ஆட்டோ ஆட்டு என்று ஆட்டியதும், வாசிப்புக்குத் தகுந்த மாதிரி உடலையே குலுக்குக் குலுக்கு என்று குலுக்கியதும் பார்த்து ரசிக்கும்படியாக இருந்தன. ரசிகர்கள் கோவிலடி மாதவபிரசாதின் இசையை, இவர் எழுப்பிய அசுர ஒலியையும் மீறி ஏதாவது கேட்டு ரசித்திருந்தால் அது அவர்கள் பாக்கியம்! பாடுகிறவருக்கு இடைஞ்சல் செய்யாமல் வாசிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கேட்க வந்திருக்கிற ரசிகர்களை, ஏதோ தம் மிருதங்க வாசிப்பைக் கேட்க மட்டுமே வந்திருப்பதாக நினைத்துக் கொண்டு இந்த அடி அடித்தால், நஷ்டம் பாடகருக்குத்தான் என்பதை இந்த மிருதங்கக் கலைஞர் என்றைக்கு அறிவாரோ!

ஓவியர் மணியம் அவர்களின் வண்ண ஓவியங்கள், அவர் மகன் மணியம் செல்வன், ம.செ.யின்

புதல்விகள் சுபாஷிணி பாலசுப்பிரமணியன், தாரிணி பால

கிருஷ்ணன் ஆகியோர் வரைந்த ஓவியங்கள் இம்மாதம்

26-ந்தேதி வரை சென்னை, ஸ்ரீ பார்வதி ஆர்ட் காலரியில்

பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

காட்சிக்குத் தலைப்பு "வாழையடி வாழை'. சிற்பங்களின் அழகை மணியம் தன் ஓவியங்களில் பிரதிபலித்தவர். மணியம் செல்வனோ அந்தப் புராதன அழகையும் இன்றைய நவீன அழகியலையும் இணைத்த ஓவியர். தாத்தாவும், தகப்பனாரும் ஓவியர்களாக இருக்கையில் மகள்களும் ஓவியக் கலையில் தங்கள் தடத்தை மட்டுமல்ல, முத்திரையையும் பதித்திருப்பது வியப்புக்குரிய விஷயமல்ல. ஆனால் மூத்தவர்களின் உன்னதத்தை உள்வாங்கிக் கொண்டதுதான் வியக்க வைக்கிறது. ஓவிய மேதை கோபுலு வாயாரப் பாராட்டியதில் அவர்களுக்கு அத்தனை பெருமை!

"காங்கிரசுக்குத் தெரியுமா கர்நாடக சங்கீதம்' என்று இனி யாரும் கேட்டுவிட முடியாது. 1927-ல் சென்னை நகரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற போது, அடுத்த ஆண்டே, இசையை வளர்க்க ஒரு நிறுவனம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நிறுவப்பட்டதுதான் மியூசிக் அகடமி.

இதன் வளர்ச்சியை, அதன் சரிவுகள், எழுச்சிகள், விவாதங்கள், வேற்றுமைகள் அத்தனையும் உள்ளடக்கிய நூல்தான் "நாலு இருபதுகளும் இன்னும் கொஞ்சமும்' என்ற பொருள்படும் தலைப்பில் வி.ஸ்ரீராமும் மாலதி ரங்கசாமியும் எழுதிய மியூசிக் அகடமியின் வரலாற்று நூல்.

உறுப்பினர்களுக்கு 1200 ரூபாய் விலையிலும், அல்லாதவர்க்கு 1700 ரூபாய் விலையிலும் சங்கீத சீஸனில் இந்தப் புத்தகம் கிடைக்கும் என அறிவித்தார்கள், வெளியீட்டு விழாவில். பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.தியாகராஜன் நூலை வெளியிட்டு, இசையை ரசிக்க வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற யோசனையை வழங்கினார். புத்தகத்தின் விலையை, எல்லோரும் வாங்குகிற மாதிரி வைக்க வேண்டும் என்று அந்தப் பொருளாதார நிபுணர் ஏனோ சொல்லாமல் விட்டுவிட்டார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.