நகர்வலம்: வெற்றிகரமான தலைவர் யார்?
உமேஷ் ராமகிருஷ்ணன், அமெரிக்கா வாழ் இந்தியர். க்ளீவ்லண்டில் வசிப்பவர். நிர்வாக இயல் குரு என்று இவரைப் புகழ்வார்கள். மிகப் பெரிய நிறுவனங்களுக்குத் தேவைப்படும் உயர் அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கு


உமேஷ் ராமகிருஷ்ணன், அமெரிக்கா வாழ் இந்தியர். க்ளீவ்லண்டில் வசிப்பவர். நிர்வாக இயல் குரு என்று இவரைப் புகழ்வார்கள். மிகப் பெரிய நிறுவனங்களுக்குத் தேவைப்படும் உயர் அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் சவாலான பணியைச் செய்பவர். உலக பிசினஸ் மீடியாவில் அதிகம் பேசப்பட்டவர். அவர் சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்: "தேர் ஈஸ் நோ எலிவேட்டர் டு த டாப்'. அதாவது "உங்களை உயரத்தில் கொண்டு போய் உட்கார்த்துபவர் யாரும் இல்லை'. சுருக்கமாகச் சொன்னால் "கை தூக்கிவிட யாருமில்லை'.
புத்தகம் முழுக்கப் பேட்டிகள்தாம். காட்பரி, கோகோ-கோலா, ஸ்டார்பக்ஸ், டெல், ஃபிடலிடி, பெப்சிகோ, லெனோவோ என்று தலைசிறந்த நிறுவனங்களின் தலைவர்களுடன் உமேஷ் நடத்திய பேட்டிகள். அவர்களுடைய உத்திகள், அவர்களுடைய தகுதிகள், அவர்களுடைய சிந்தனைகள் என்று அலசியிருக்கிறார். வேகமாக உச்சிக்குத் தாவி ஏறும் நிர்வாகத்துறை அதிகாரிகளின் வெற்றிக்குப் பின்னால் இருந்தது என்ன என்ற அலசல்-பேட்டிகள்.
யார் மிகச் சிறந்த கார்ப்பரேட் லீடர்? "ஒரு வேலையைச் செய்ய வேண்டாம் என்று தீர்மானமாக இருப்பவரை, கடைசியில் மகிழ்ச்சியுடன் செய்ய வைப்பவர்தான்' என்கிறார் உமேஷ்.
எதையும் காது கொடுத்துக் கேட்பவர், பிரமாதமான தலைவராக வருவாராம்.
சிக்கலான செய்தியைக்கூட, கீழ்மட்ட ஊழியரும் மேல்மட்ட அதிகாரிகளும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகச் சொல்லக்கூடிய திறமையுள்ளவர் சிறந்த தலைவர். டக்கென்று முடிவெடுக்கும் சாமர்த்தியம் இருக்க வேண்டுமாம். அதற்குப் பின்னணியாக தைரியமும், அலசலும் இருந்தாக வேண்டும். அப்புறம்?
கடினமான முடிவுகளை எடுக்கவும் தயங்கக்கூடாது. சிரமமான சூழ்நிலையில், வேண்டப்பட்ட ஒரு நபரை வீட்டுக்கு அனுப்ப வேண்டி வந்தால், அந்தத் தியாகத்தைச் செய்துதான் ஆக வேண்டும். அதாவது உங்களோடு பணியாற்றும் உங்கள் நெருங்கிய நண்பராக இருந்தாலும் சரி. அனுப்பித்தான் ஆக வேண்டும் என்றால் யோசனையே செய்யக்கூடாது. ("இது இந்தியாவுக்கும் பொருந்தும்' என்கிறார் உமேஷ்.)
நம்பகமான அனுபவம் அவசியம். தன் தலைவர் தம் துறையில் கெட்டிக்காரர் என்று அறிந்தால்தான் ஊழியர் அவரை மதிப்பார். ஒரு விற்பனைப் பிரிவை தலைமை ஏற்று நீங்கள் நடத்துவதாக இருந்தால், உங்களுக்கு 15-20 வருட அனுபவம் இருக்க வேண்டும். 30 வருடங்கள் மனிதவளத் துறையில், 2 வருடங்கள் விற்பனைப் பிரிவில் அனுபவம் இருந்து, பயனில்லை.
கடைசியாக உமேஷ் சொல்வது மிக முக்கியமாகப்படுகிறது. "பிஸினஸ் டிகிரிதான் வேண்டும் என்று இல்லை!' என்கிறார். அறிந்தவர்களிடமிருந்து அனுபவத்தைக் கற்றுக்கொண்டால் போதுமாம். (அப்புறம் எம்பிஏ-க்கள் எல்லாம் என்ன ஆவது?)
புகழ்பெற்ற பெங்களூர் நிறுவனம் பயோகான். இதன் தலைவி கிரன் மஜும்தார் ஷாவைப் பேட்டி காணக் காத்திருந்தபோது, அவருடைய உதவியாளர் உமேஷுடன் பேசிக் கொண்டிருந்தாராம். "என் உற்சாகத்தைத் தூண்டிவிட்டார் அவர்!' என்கிறார் உமேஷ் ராமகிருஷ்ணன்.
சரி, இந்திய நிர்வாகிகளை, அமெரிக்க -இங்கிலாந்து நிர்வாகிகளுடன் ஒப்பிட்டு எத்தனை மதிப்பெண் தருகிறார் உமேஷ்?
பத்துக்கு எட்டு!
மேற்கத்திய தலைமை நிர்வாகிகளைவிட நம் இந்தியத் தலைமை நிர்வாகிகள் கெட்டிக்காரர்கள். "நம்மவர்கள் சிக்கனச் சூழ்நிலையில் வதைக்கப்பட்டு, அதிகபட்ச பலன்களைத் தருபவர்கள்' என்கிறார் உமேஷ். உலகளவில் உயர்ந்த பதவிகளுக்குத் தகுந்த நபர்களைத் தேர்ந்தெடுக்கும் நிர்வாகவியல் குரு, இதைவிடப் பெரிய பாராட்டை இந்திய நிர்வாகிகளுக்குக் கொடுக்க முடியாது!
கிருஷ்ண கான சபா செயலர் யக்ஞராமன் நினைவாக நடந்து வரும் இசை -நடன நிகழ்ச்சியில், நகைச்சுவைக்கும் கொஞ்சம் இடம் இருந்தது.
முதல்முறையாக கர்நாடக இசையில் ஜுகல்பந்தி கச்சேரி செய்தனர் டி.எம்.கிருஷ்ணாவும், விஜய் சிவாவும். விஜய் சிவா, டி.கே.ஜெயராமனின் சீடர். டி.எம்.கிருஷ்ணா சீதாராம சர்மாவிடமும், செம்மங்குடியாரிடமும் கற்றவர். (அறிவிப்பாளர் தவறாக, காலஞ்சென்ற செம்மங்குடியிடமும் தொடர்ந்து கற்றுக்கொண்டு வருகிறார் என்று குறிப்பிட்டது சிரிப்பலையைத் தோற்றுவித்தது!)
ஜுகல்பந்தி என்றால் எப்படி இரண்டு பேரும் ஒரே பாட்டைப் பாடுவார்கள்? பாடினார்கள்: பாதி அவர். பாதி இவர். ஆலாபனையிலும் அப்படியே. நிரவலிலும், சுவரம் பாடும்போதும்கூட அப்படியே. (ஒரு கட்டத்தில் விஜய் சிவாவின் மைக் ஸ்ட்ரைக் செய்தது. கிருஷ்ணா கை கொடுத்தார்) விரிபோணி வர்ணம், ராமநன்னு ப்ரோவரா, ரகுவர நன்னு, ஸ்ரீரங்கநாயகம், வினராதன என்று மாற்றிமாற்றிப் பாடிய பிறகு, தோடியில், சியாமா சாஸ்திரியின் "நின்னே நம்மினானு'வை முக்கியப் பாடலாகத் தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனமான தேர்வு. பக்தி பூர்வமாக தியாகராஜரையோ அறிவுபூர்வமாக திட்சீதரையோ எடுத்துக் கொள்வதைவிட, அத்தனை ரசிகர்களின் நெஞ்சையும் உணர்ச்சிபூர்வமாகத் தொட்டுவிட ஒரு சியாமா சாஸ்திரி கீர்த்தனைதான் சரி என்று கிருஷ்ணாவும் விஜய்யும் ஒருவேளை நினைத்திருக்கலாம். காமாட்சியிடம் வேண்டும் அந்தப் பாடலுக்கு, உள்ளத்தை உருக்குகிற மாதிரி அப்படி ஒரு சக்தி. ("அவராகவா அந்தப் பாட்டை எல்லாம் எழுதினார்? அந்தக் காமாட்சியே அல்லவா, "என்னைப் பாடு என்னைப் பாடு' என்று அவரைக் கெஞ்சினாள்!'' என்பார் மணிக்கொடி கால மூத்த எழுத்தாளரும், தி.ஜானகிராமனின் பால்யகால சிநேகிதருமான பெரியவர் ஸ்வாமிநாத ஆத்ரேயர்.)
கச்சேரியில் நகைச்சுவை, கடைசியில் வந்தது. கிருஷ்ண கர்ணாமிருதம் பாடல் ஒன்று. வெண்ணெய் திருட வந்த கிருஷ்ணனுக்கும், உள்ளே கதவைச் சாத்திக்கொண்டு இருக்கும் கோபிகைக்கும் நடக்கும் வேடிக்கையான உரையாடல். அதை இருவரும் தமிழில் விளக்கியதுதான் அந்த நகைச்சுவையின் சுவாரசியத்தை எடுத்துக் காட்டியது! கோபிகையின் ஒவ்வொரு கேள்விக்கும், கிருஷ்ணர் பதில் சொல்ல, அந்தப் பதிலில் ஒளிந்திருக்கும் இன்னோர் அர்த்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, "ஓகோ, குயவனா?' "இரண்டு நாக்குள்ள பாம்பா?' "ஓகோகோ கருடனா?' "இல்லையா, குரங்குகள் தலைவனா?' என்று கிருஷ்ணரைக் கிட்டத்தட்ட கடுப்படிக்க வைக்கிற மாதிரி கோபிகைகள் கிண்டலடிக்கிற பாடலை சிரிக்கச் சிரிக்கப் பாடினார்கள். தொடர்ந்து ஜெயதேவரின் அஷ்டபதி.
ஆண்களின் இரட்டையர் சங்கீதம் என்றாலே, ஆபத்து காதுக்குத்தான். அதிலும் சிலர் அதட்டுகிற மாதிரியும், விரட்டுகிற மாதிரியும் பாடுவார்கள். மைக் வேறு உச்சத்தில் இருக்கும். இசை தரும் சுகானுபவம், முற்றாக அங்கிருந்து விடை பெற்றுக் கொண்டுவிடும். ஆனால் விஜய்யும் கிருஷ்ணாவும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, விட்டுக் கொடுத்து, நினைவில் சில நாள் நிற்கிற நிகழ்வாக இந்தக் கச்சேரியை வழங்கினார்கள். (பாராட்டில் ஒரு பங்கு செயலர் பிரபுவுக்கும் சேர வேண்டும்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...