வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: ஒரே பொட்டலத்தில் இசை-நடனம்-ஓவியம்

காபி பிரியரான தமிழறிஞர் "கஜாரண்ய திராவிடக் கவிமணி' வே.முத்துசாமி ஐயர், தம் நண்பர் ராமகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்றபோது, அவர் இரண்டாம் முறையாக இன்னொரு காபி சாப்பிடுகிறீர்களா? என்று கேட்டாராம். உடனே முத்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:49 pm

சாருகேசி

காபி பிரியரான தமிழறிஞர் "கஜாரண்ய திராவிடக் கவிமணி' வே.முத்துசாமி ஐயர், தம் நண்பர் ராமகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்றபோது, அவர் இரண்டாம் முறையாக இன்னொரு காபி சாப்பிடுகிறீர்களா? என்று கேட்டாராம்.

உடனே முத்துசாமி ஐயர் தன் பதிலை ஒரு வெண்பா மூலம் தெரிவித்தாராம்: முக்கனியும் சர்க்கரையும் மொய்ம்மலர்போல் தோசைகளும் தக்கமிள காய்ப்பொடியும் சட்னியும் -ஒக்க அன்பால்

சாப்பிடுங்கள் என்றதரு ராமகிருஷ்ண அன்ப!

காப்பிக்கும் உண்டோ கணக்கு.

யார் இந்த கஜாரண்ய திராவிடக் கவிமணி வே முத்துசாமி ஐயர்?

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் மாணாக்கர். கி.வா.ஜகன்னாதனின் நண்பர். அமரரான அவரது   125வது பிறந்ததினத்தையொட்டி சர்.சிவி.ராமன் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் இதற்கான விழா நடைபெறுகிறது.

முத்துசாமி ஐயர் அரங்கநாதபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இது திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே இருக்கிறது. ""1920ல் என் தாத்தா சங்கர சத்குரு ஆற்றுப்படை பாடியபோது, காஞ்சிப் பெரியவர் அவரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்தினார். மற்றொரு முறை அவர் பெரியவருக்குப் பாத பூஜை செய்து, சமஸ்கிருதத்தில் இருந்த பரமேசுவர தோத்திரத்தை, தமிழில் தெளிவாகப் பாடியதற்காக "கஜாரண்ய திராவிடக் கவிமணி' என்ற பட்டத்தைப் பெரியவர் கொடுத்தார்!'' என்கிறார் அவர் பேரனும், ஓய்வுபெற்ற அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியருமான முத்துகிருஷ்ணன்.

இந்த ஆற்றுப்படைக்கு ராவ்பகதூர் வ.சு.செங்கல்வராய பிள்ளை அவர்கள் முன்னுரை அளித்திருக்கிறார். தொல்காப்பியம் பொருளதிகார ஆராய்ச்சி, தனிப்பாக் கோவை, விநாயகர் -முருகன் துதிப்பாக்கோவை, மயூரநாதர் அந்தாதி, "பத்மினி' என்ற புனைகதை என ஏராளமான நூல்களின் ஆசிரியர் முத்துசாமி அய்யர். இவர் சென்னையில் ஆசிரியர் பயிற்சி பெற்றபோது, இவருடைய அறைத் தோழராக டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் இருந்தாராம். இவருடைய அறுபதாம் ஆண்டு விழாவை ஒட்டி, தஞ்சை வெற்றிவேல் பதிப்பகம் வெளியிட்ட  சிறப்பு மலர் ஒன்றில் தேசிகவினாயகம் பிள்ளை,  சுத்தானந்த பாரதியார், சோமசுந்தர பாரதியார், நாவலாசிரியர் கா.சி.வேங்கடரமணி, "திருப்புகழ்மணி' கிருஷ்ணசாமி அய்யர், ராமநாதபுரம் மன்னர் ராஜராஜேசுவர சேதுபதி, சி.பி.ராமசாமி அய்யர், அ.கி.பரந்தாமனார், எழுத்தாளர் எஸ்.வி.வி., பெ.நா.அப்புசாமி ஆகியோரின் வாழ்த்துப் பாக்களும், வாழ்த்துச் செய்திகளும் தமிழில் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் மறைமலை அடிகள் மட்டும் ஆங்கிலத்தில் வாழ்த்துக் கடிதம் எழுதியிருப்பது வியப்பைத் தருகிறது!

முத்துசாமி அய்யர் பள்ளித் துணை ஆய்வாளராகப் பணி புரிந்தவர். அரங்கநாதபுரத்தில் சிவன் கோயில் கட்டிக் கொடுத்து, பராமரிப்புக்காக நாலு ஏக்கர் நிலத்தையும் எழுதி வைத்திருக்கிறார். பல கோயில்களுக்கு அன்றாடப்

பூஜைக்கு நிதியுதவி செய்திருக்கிறார். பல இடங்களில் குளங்கள் வெட்டிக் கொடுத்து, குளங்களில் மக்கள் இறங்கித் தண்ணீர் எடுக்க வசதியாகப் படிக்கட்டுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

"சிவராத்திரி தினத்தன்று காலையில் புறப்பட்டு, தஞ்சாவூர் சென்று மூன்று காலப் பூஜைகளில் மூன்று

வெவ்வேறு சிவன் கோயில்களில் பங்கு கொண்டு விட்டு, இரவு அரங்கநாதபுரம் வந்து சிவன் கோயில் பூஜையில் கலந்து கொள்வாராம். திருவண்ணாமலை சென்றிருந்தபோது, பகவான் ரமணரை தரிசனம் செய்திருக்கிறார்.  முத்துசாமி அய்யரின் மகன் பாலகவி மு.கோதண்டராமன் 70 வயதைக் கடந்தவர். ஓலைச் சுவடிகளைப் படித்துப் பாதுகாத்துப் பதிப்பிக்கும் பணியில் அயராது உழைத்தவர். உ.வே.சாமிநாதய்யர் நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஆசிய விவகாரங்கள்

நிறுவனம் ஆகியவற்றில் இவர் பணி புரிந்தபோது, ஏராளமான ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்துப் பதிவு செய்திருக்கிறார். இதற்கான பயிற்சி அளிக்கும் துறை ஒன்றை நிறுவப் பாடுபட்டிருக்கிறார். "மலையாள் மகாகவி ஜி.சங்கர குரூப் நினைவு ஓடக்குழல்' பரிசு, நாராயணீயத்தை இவர் தமிழில் மொழிபெயர்த்ததற்காக வழங்கப் பட்டது. இவரது பணிகள் பற்றி, "தமிழ்ச்சுவடிகளும் பதிப்பும்' என்ற நூலை சென்னையில் உள்ள சேகர் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

செம்மங்குடி சீனிவாசய்யர் அறக்கட்டளை அவருடைய நினைவு தினத்தை இந்த ஆண்டு மிக வித்தியாசமாகக் கொண்டாடத் திட்டம் தீட்டியிருக்கிறது. அவருடைய மூத்த சீடர்கள் பி.எஸ்.நாராயணசாமி, வி.சுப்பிரமணியம், எம்.கே.விசாலாட்சி ஆகியோர் தம் மாணவ-மாணவிகளுடன் இசை வழங்க, நடனக் கலைஞர் ரோஜா கண்ணன் அதற்கு நடனமாட, அதையெல்லாம் ஓவியர்கள் ஏ.வி.இளங்கோ, லக்ஷ்மி ஸ்ரீநாத் மற்றும் தேஜோ மேனன் ஓவியங்களாக வடிக்கப் போகிறார்கள். மூன்று கலைகளை ஒருங்கிணைத்து வழங்குவது சிரமமான வேலைதான். (ஒரு முறை பங்களாதேஷில் சார்க் மாநாடு நடைபெற்றபோது, பிரதிநிதிகளுக்கு வழங்க வேண்டிய கலைநிகழ்ச்சி ஒன்றில், ஒரு பிரபல வயலின் கலைஞர் வயலின் வாசித்துக் கொண்டே இருக்க, ஓவியர் ஒருவர் அவர் கற்பனை  தூண்டப்பட்ட வகையில் வரைந்து தள்ளிக் கொண்டிருந்தார்!)

செம்மங்குடி விழாவில் எப்படி அமைகிறது என்று பார்ப்போம்.

தாம் பார்த்த நிகழ்ச்சிகளை நுட்பமான உணர்ச்சி வெளிப்பட எழுதுவதில் கெட்டிக்காரர் பிஷ்வநாத் கோஷ். சமீபத்தில் அவர் எழுதிய "சாய்சாய்' என்ற நூலை மெட்ராஸ் புக் கிளப்பில் வெளியிட்டபோது, தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் பிஷ்வநாத் கோஷ். முதல் சராய், இட்டார்ஸி, கடப்பா, ஷோரனூர் என்று ஏழு ரயில்வே சந்திப்புகளில் இறங்கி, அந்த ஊர்களுக்கு உள்ளே சென்று பார்த்த பயண அனுபவம்தான் "சாய்சாய்'.

சென்னை புக் கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆங்கில தியேட்டர் நடிகர் பி.சி.ராமகிருஷ்ணா, நூலிலிருந்து சில பகுதிகளைப் படித்துக் காட்டினார். குறிப்பாக கடப்பா ஸ்டேஷன் மாஸ்டரிடம் பிஷ்வநாத் சில விவரங்களுக்காகக் கேள்விகள் கேட்கக் கேட்க, ""என்னை எதுவும் கேட்காதீர்கள். எல்லாம் டிவிஷனல் ரயில்வே மானேஜரைக் கேளுங்கள். அவர்  அ  முதல்  ஃ  வரை உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்வார்!''

என்கிறார். ஆனால் ஒவ்வொரு பதிலையும் சொல்லிவிட்டுத்தான் இப்படிச் சொன்னதால், பிஷ்வநாத்துக்குத் தேவையான விவரங்கள் எல்லாம் டி.ஆர்.எம்.மைப் பார்க்காமலே கிடைத்துவிட்டதாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.