

அழகு, அற்புதம், அதிபயங்கரம், விநோதம், வேடிக்கை இவை அத்தனையும் நிரம்பியிருக்கிற ஒரு தனி உலகமே மன்னார் வளைகுடா கடல் பகுதி. அபூர்வ உயிரினங்கள் அதிகம் இருக்கிற அந்த அற்புதக் காட்சிசாலையில் வசிக்கும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களில் ஒன்றுதான் கிறிஸ்துமஸ் மரப்புழு. இதன் பெயர்க் காரணம் மற்றும் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார்
கூறியதாவது:
""கடலில் வாழும் பவளப் பாறைகளின் மேற்புறங்களில் துளையிட்டு அதனுள்ளே வாழும் இப்புழுக்களின் விலங்கியல் பெயர் ஸ்பைரோபிராங்கஸ். இப்புழுக்களுக்குக் கால்களுக்கு பதிலாக ஆயிரக்கணக்கான நுண் இழைகள் கொண்ட ஸ்பிரிங் போன்ற உணர்விழைகள் இதன் உடலின் மேற்புறத்தில் அமைந்துள்ளன. இந்த ஸ்பிரிங் அமைப்பு டார்ச் லைட் போல ஒளியை வீசி கண்களைக் கவரும் நிறமுடையது. பார்ப்பதற்கு கிறிஸ்துமஸ் மரத்தைப் போலவே தோற்றமளிப்பதால் இதை கிறிஸ்துமஸ் மரப் புழுக்கள்
என்கிறார்கள்.
பச்சை, நீலம், சிவப்பு, மஞ்சள் போன்ற பல்வேறு நிறங்களில் கண்களைக் கவரும் வண்ணங்களில் இருக்கும் இப்புழுக்கள், சில நேரங்களில் ஒரு கிரீடம் போலவும் காட்சியளிக்கும். இந்த ஸ்பிரிங் அல்லது கிரீடம் போன்ற அமைப்புக்கு நடுவே அதன் வாய் இருக்கிறது. உணர்விழைகளில் மாட்டும் நுண்ணிய உயிர்கள், வடிகட்டி உண்ணுதல் முறையில் வாய்க்குள் தள்ளப்பட்டு விடுகின்றன. ஸ்பிரிங் போன்ற வெளிப்புற நுண்ணிய இழைகள், சுவாச உறுப்பாகவும் செயல்பட்டு கடல் நீரில் உள்ள ஆக்சிஜனைப் பிரித்தெடுத்து மூச்சு விட்டுக் கொள்கின்றன. பல வளையங்களால் ஆக்கப்பட்டுள்ள இத் தசைப் புழுக்கள் உடலியல் மண்டலங்களான ரத்த ஓட்ட மண்டலம், நரம்பு மண்டலம், மூளை மற்றும் கழிவு நீக்க மண்டலம் ஆகியவற்றோடும் சிறப்பாக செயல்படுகிறது.
இதன் உணர்விழைகள் மூலம் உண்ணப்படும் உணவானது நேரடியாக புழுவின் ஜீரண மண்டலத்துக்குள்ளே செலுத்தப்பட்டுவிடும். இப்புழுக்கள் முட்டைகளைக் கடல்நீரில் வெளிவிடும்போது அவை மற்ற உயிரினங்களினூடே மிதந்து கொண்டேயிருக்கும். கடல் அலைகளால் அடித்துச் செல்லப்படும் முட்டைகள், கடலுக்கு அடியிலிருக்கிற உயிருள்ள பவளப் பாறைகளின் மீது பட்டவுடன் அதன் மேற்புறத்தில் ஒட்டிக்கொண்டு அதனை உடனே தனது கூர்மையான வால் மூலம் துளையிட்டு உள்ளே போய் தங்கிவிடும். பின்னர் கால்சியத்தால் ஆன குழாயைப் பாதுகாப்புக்காக தயார் செய்து அதனை ஒரு கூடாக உருவாக்கி அக்குழாய்க்குள் வாழ்கின்றன. தனது ஆயுள் உள்ளவரை அந்தக் குழாய்க்குள்ளேயே இருந்து, வாழ்ந்து இறந்தும் விடுகின்றன. வேறு எங்கும் போவதில்லை.
பெரும்பாலும் இரவில் மட்டும் தன் உடலை வெளியில் நீட்டி உணவைப் பிடிப்பது இதன் ஸ்பெஷாலிட்டி. இவை வசிக்கும் பவளப் பாறை குழாய்களுக்குள் சுருண்டு கொண்டே உள்ளே போவதும், பின் வெளியே வருவதும் இதன் வசீகர விளையாட்டு. தன் உடலை உள்ளே இழுத்துக் கொண்டவுடன் ஓபர்குலம் என்ற மூடியால், வீட்டுக் கதவை நாம் சாத்துவது போல வெளிப்புற திறப்பை மூடிவிடும் புத்திசாலி.
பார்ப்பதற்கு அழகாக காட்சியளிப்பதால் இதனை மீன் தொட்டிகளிலும் கடல் மீன் காட்சியகங்களிலும் வைத்து வளர்ப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல கடல் மீன் காட்சியகங்களில் இப்புழுக்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்கின்றன.
கடலுக்கு அடியில் உள்ள இவற்றை புகைப்படம் எடுப்பதற்காகவே ஸ்கூபா டைவர்கள் கடலடியில் பவளப் பாறைகளின் மீது காத்திருந்து அது உணர்விழைகளை விரிக்கும் நேரத்தில் படக்கென்று படம் பிடித்து திரும்புவதும் உண்டு.
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழவிருக்கும் நிலையில் கடல் நீரில் நீந்தவோ, நடக்கவோ முடியாத கடல் தாய் பெற்ற விநோத உயிரினங்களில் ஒன்றான கிறிஸ்துமஸ் மரப் புழுக்களையும் அறிந்து கொள்வோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.