நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தில்லி டூ திருவையாறு சீதா கல்யாணம்!

பொருளாதாரத் தேடலுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் போக்கு மனித சமூகத்தில் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் ஓவியம், இசை, நுண் கலைகள் போன்ற மனித மனத்துக்கு ஆறுதலையும் அமைதியையும் அளிக்கும் விஷயங்க

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:54 pm

வே.சுந்தரேஸ்வரன்

பொருளாதாரத் தேடலுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் போக்கு மனித சமூகத்தில் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் ஓவியம், இசை, நுண் கலைகள் போன்ற மனித மனத்துக்கு ஆறுதலையும் அமைதியையும் அளிக்கும் விஷயங்களுக்கு இடமில்லாத சூழ்நிலை அதிகரித்துவருகிறது.

 மனத்தைப் பக்குவப்படுத்த ஆன்மிகம் தேவை என்பது ஆன்றோர்களின் கருத்து. ஆத்ம தரிசனம் பெற ஆன்மிகம்தான் வழி என்று லௌகீகக் கடமையுடன், ஆன்மிக விஷயங்களிலும் மனத்தைச் செலுத்த விழைவோரை இன்றைக்கு விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படிப்பட்ட ஒருவர்தான், தில்லி, வசுந்தரா என்கிளேவில் வசிக்கும் பி.சுப்பராமன் பாகவதர். தனது 80-ஆவது வயதில் அடியெடுத்துவைக்கும் இவர், நாம சங்கீர்த்தனம் செய்வதிலும், இசைக் கச்சேரிகளை நடத்துவதிலும் இன்றைக்கும் துடிப்போடு ஈடுபட்டுவருகிறார்.

 இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகள் உயிரோடு இருந்த காலங்களில் அனுதினமும் பூஜித்து வந்த ராமர் பட்டாபிஷேக விக்ரகத்திற்கு முதல் முறையாக சீதா கல்யாணம் நடத்தத் திட்டமிட்டுள்ளார் இவர்.

 திருவையாறில் வரும் ஜனவரியில் இதற்கான விழாவை நடத்த இருக்கிறார். தில்லியில் இருந்து திருவையாறு செல்லும் நாள்களை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவர், தன் வாழ்வின் இனிய அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டதிலிருந்து...

 ""எனது பெற்றோரின் பூர்வீகம் தஞ்சை மாவட்டம், திருவையாறு. எனது தந்தை ஏ.வி. பிரணதார்த்திஹர சாஸ்திரிகள், புரோகிதப் பணிக்காக 1953-ம் ஆண்டு தில்லிக்கு வந்தார். சென்னை மாகாண அரசில் பணியாற்றி வந்த நான் எனது வேலையை ராஜிநாமா செய்துவிட்டு 1954-ம் ஆண்டில் தில்லி வந்தேன்.

 மத்திய அரசின் சட்ட அமைச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சிறுவயதில் இருந்தே ஆன்மிகம், கலாசாரம், பண்பாடு விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு எனக்கு இருந்தது. ஆன்மிக நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்வேன். வேலைக்குத் தில்லி வந்த பிறகு விடுமுறை நாள்களில் பஜனை செய்வது, சீதா கல்யாணம் நடத்துவது ஆகிய ஆன்மிகப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன். தில்லியில் வீடுகளிலும், கோயில்களிலும் பாரம்பரிய சீதா கல்யாணம், ராதா கல்யாணம், ருக்மணி கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினேன்.

 சௌத் இந்தியா சமாஜம், தில்லி பஜனை சமாஜம் சார்பிலும் ராமநவமியின் போது சீதா கல்யாணம் நிகழ்ச்சியையும், பாரம்பரிய முறையில் அவ்வப்போது ராதா கல்யாணம் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறேன்.

 தொடக்கத்தில் தில்லியில் உள்ள கரோல்பாக், லட்சுமிபாய் நகர், திமர்பூரி ஆகிய இடங்களில் சீதா, ராதா கல்யாணங்களை நடத்தினேன். இதுவரை 1,000 கல்யாணம் நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடத்தியுள்ளேன். மார்கழி மாத அதிகாலைகளில் நடைபெறும் பஜனை, நகர சங்கீர்த்தனங்களில் தில்லியின் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பலரும் கலந்து கொள்வர்.

 இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று ஸ்ரீராதா கல்யாணத்தை நடத்திவைத்த முதல் நபர் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். நியூயார்க்கில் ராஜா என்பவர் வீட்டில்தான் இக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதுதவிர, லண்டன், மஸ்கட், துபை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களிலும் விநாயகர் கல்யாணம், ராதா கல்யாணம் நிகழ்ச்சிகளுக்காகவும், சிங்கப்பூரில் சிவராத்திரியின்போது மீனாட்சி கல்யாண நிகழ்ச்சிக்காகவும் சென்று வந்துள்ளேன்.

 குடியரசு முன்னாள் தலைவர்களான மறைந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். புதுக்கோட்டை சஞ்சீவ் பாகவதர் தலைமையில் நடைபெற்ற இப்பஜனையை டாக்டர் ராதாகிருஷ்ணன் மெய்மறந்து ரசித்துக் கேட்டார்.

 இசை மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகள் சமாதி அடைந்த 165-ம் ஆண்டு ஆராதனை விழா திருவையாறில் வரும் ஜனவரி நடைபெறுகிறது. சுவாமி அவர்கள் வாழ்ந்தபோது சீதா கல்யாண கீர்த்தனைகள் பல பாடியுள்ளார். அதன்படி பார்த்தால் அவர் சீதா கல்யாண நிகழ்ச்சியை நடத்தியிருப்பார் என்பது எனது நம்பிக்கை. அவர் பூஜித்த ஸ்ரீ ராமர், ஸ்ரீ சீதா, பரதன், சத்ருகன், ஆஞ்சனேயர் உருவம் தாங்கிய "ராம பஞ்சாயத்தனம்' எனும் விக்ரகம் தஞ்சாவூரில் உள்ள வரகப்பையர் வீதியிலுள்ள தியாகராஜன் என்பவரது இல்லத்தில் உள்ளது. இதற்கு முதல் முறையாக சீதா கல்யாணம் நடத்தத் திட்டமிட்டுள்ளேன்.

 தஞ்சாவூர் வரகப்பையர் வீதியில் ஜனவரி 9,10-ம் தேதியும், திருவையாறில் கோயம்புத்தூர் தெலுகு பிராமண சபா சார்பில் ஜனவரி 11-ம் தேதியும், தியாகராஜர் ஆராதனை நடைபெறும் நாளுக்கு மறுநாளான ஜனவரி 14-ம் தேதி காலையில் தியாகராஜரின் சமாதி சந்நிதியிலும் இந்த சீதா கல்யாணத்தை நடத்த உள்ளேன். இதை என் வாழ்நாள் பாக்கியமாகவே கருதுகிறேன்.

 இதுபோன்ற பஜனை, நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகளில் நான் மட்டுமின்றி எனது வாரிசுகளையும் ஈடுபடுத்தி வருகிறேன். சகோதரர்கள் பி.எஸ்.எஸ். மணியன், வெங்கட்ராமன், மகன் ரமேஷ், பேரன்கள் அபிஷேக், அபினவ், யஷ்வந்த் உள்ளிட்டோரும் பஜனைகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

 நாம சங்கீர்த்தனம் மானுட வாழ்க்கையை விமோசனம் பெறச் செய்கிறது. மனத்தை சாந்தப்படுத்துகிறது. பூரண நிம்மதிக்கு வழிகோலுகிறது. தற்போதைய தலைமுறையினரை நாம சங்கீர்த்தனங்களில் அதிகம் பங்கேற்கச் செய்யவேண்டும். இது, அவர்களின் வாழ்க்கை மேம்பட உதவுவது மட்டுமின்றி அடுத்துவரும் சந்ததியினரையும் சிறந்தவர்களாக்கும்!

 எனது வாழ்வில் மற்றொரு மறக்க முடியாத சம்பவம் நடந்திருக்கிறது. அது இதுதான்,

 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் சுட்டுக்கொல்லப்பட்டபோது, அவரது இறுதிச் சடங்கை ஐதீக முறைப்படி நடத்துவதற்கு அவரது மகன் ராஜீவ் காந்தி விரும்பினார்!

 எனக்கு தமிழ், தெலுங்கு புரோகிதம் தெரியும் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும்படி தொலைபேசி வழியாக என்னைக் கேட்டுக் கொண்டனர்.

 கிரிதாரிலால் கோஸ்வாமி என்பவரது தலைமையில் அனைத்து மதத்தைச் சேர்ந்த 20 பேர் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடத்துவதற்காகச் சென்றோம். அந்த அம்மையாரின் தகன மேடையில் என்னை ஏற்றிவிட்டனர். பூஜைகளை முறைப்படி செய்தேன். இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய என அனைத்து மதத்தினரும் அந்த இடத்தில் பிரார்த்தித்தனர். அந்த நிகழ்ச்சியை இப்போது நினைத்தாலும் என் கண்களில் நீர் கோர்க்கிறது'' என்று நெகிழ்கிறார் சுப்பராமன் பாகவதர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.