பழைய வாழ்க்கையை மறக்க கூடாது!
பிழைக்கச் சென்ற இடத்தில் நம்ம பிழைப்பைப் பார்க்கணும். நம்ம வேலையைப் பார்த்தோமா? நாலு காசு சம்பாதிச்சோமா ? என்று இருக்கணும். அங்கே போய் சமூக சேவை, அது இதுன்னு அலையக் கூடாது'' என்று சொல்பவர்களுக்கு மத்த


பிழைக்கச் சென்ற இடத்தில் நம்ம பிழைப்பைப் பார்க்கணும். நம்ம வேலையைப் பார்த்தோமா? நாலு காசு சம்பாதிச்சோமா ? என்று இருக்கணும். அங்கே போய் சமூக சேவை, அது இதுன்னு அலையக் கூடாது'' என்று சொல்பவர்களுக்கு மத்தியில் வித்தியாசமாக இருக்கிறார் ஒருவர்.
திருநெல்வேலி கோவைகுளம் என்ற ஊரைச் சேர்ந்த ஜான்சன் தனது சிறுவயதிலேயே மும்பைக்குப் பிழைப்பைத் தேடிச் சென்றவர். தான் வேலையில்லாமல் மும்பையில் கஷ்டப்பட்ட அந்த நாட்களில் அவர் ஒரு வேளை உணவுக்கும் வழியில்லாமல் பட்டினி கிடந்திருக்கிறார்.
அளவுகடந்த தன்னம்பிக்கையாலும், உழைப்பாலும், உண்மையாக நடந்து கொள்வதாலும் இன்று அவர் ஒரு தொழிலதிபராக இருக்கிறார். ஜேஜே கன்ஸ்ட்ரக்ஷன், ஜேஜே ட்ராவல்ஸ், ஜேஜே ஆட்டோ கேரேஜ் எனப் பல நிறுவனங்களின் சொந்தக்காரர் அவர். இருந்தும் தனது பழைய வறுமை நாட்களை அவர் இன்னும் மறக்கவில்லை.
இன்று தன்னைப் போல் மும்பைக்கு வந்து யாரும் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகத் தினம்தோறும் 50 பேருக்கு அவர் இலவசமாக உணவளித்து வருகிறார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசப் பாட புத்தகங்கள் வழங்கி வருகிறார். அதுமட்டுமல்ல, கட்டாயப்படுத்தி விபசாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட பெண்களை அங்கேயிருந்து காவல்துறையின் உதவியோடு விடுவித்து சொந்த ஊருக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.
தினமும் பலருக்கு உணவளித்து வருகிறீர்களே, என்ன காரணம்? என்று கேட்டோம்.
""எனக்கு கடவுள் பக்தி அதிகம். கடவுளுடைய ஆசிர்வாதம் இல்லையென்றால் எதையும் சாதித்திருக்க முடியாது. எனக்குப் பலர் உதவிகள் செய்து நான் முன்னேறியதால் நானும் பலருக்கும் உதவி செய்து வருகிறேன்.
நான் வேலைத் தேடித் திரிந்த போது ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். ஒரு வேளை சாப்பாட்டுக்கும் கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறேன். என்னைப் போல இன்று மும்பையில் எத்தனை பேர் இருக்கிறார்களோ? எனவே அப்படி உள்ளவர்களுக்குப் பசியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அதனால் எனது அலுவலகத்தில் தினமும் 30 - 50 பேருக்கு உணவளித்து வருகிறேன். இதற்காக எவ்வளவு செலவு ஆகிறதென்று கணக்குப் பார்ப்பதில்லை. எவ்வளவுதான் வாழ்க்கையில் உயர்ந்தாலும் பழைய வாழ்க்கையை மறக்கக் கூடாது'' என்கிறார் உணர்வு பொங்க.
கட்டாயப்படுத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு, மும்பையிலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தீர்களாமே? என்று கேட்டோம்.
""நான் மும்பையில் பாண்டூப் பகுதியில் இருக்கிறேன். இங்குள்ள தமிழ்ச்சங்கத்தில் நான் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
மும்பையில் தாராப்பூர் தமிழ்ச்சங்கமும் உள்ளது. அந்தச் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் என்னைச் சந்தித்தார். தனக்குத் தெரிந்த ஒருவரின் தங்கை பாண்டூப் பகுதியில் உள்ள சோனாப்பூர் பகுதியில் உள்ள விபசார விடுதியொன்றில் கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அவளை அங்கிருந்து எப்படியாவது மீட்க வேண்டும் என்றும் என்னிடம் சொன்னார். சோனாப்பூர் பகுதியில் விபசார விடுதிகள் அதிகம். அங்கிருந்து ஒருவரை மீட்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
இரண்டு வண்டி நிறைய ஆட்களை ஏற்றிக் கொண்டு போய் சண்டை போட்டு அந்தப் பெண்ணை மீட்டு வந்தோம்.
இதைக் கேள்விப்பட்ட டீக்கடையில் வேலை செய்யும் ஒரு தமிழ்ப் பையன் ஒரு பெண் மட்டும் இப்படிக் கட்டாயப்படுத்தி விபசார விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருக்கவில்லை. நூற்றுக்கணக்கான பெண்கள் இப்படித் தங்க வைக்கப்பட்டிருப்பதாக என்னிடம் சொன்னான்.
நான் கடுமையான முயற்சி செய்து தமிழ்நாடு காவல்துறை, மும்பைக் காவல்துறை, மும்பையிலுள்ள "செüதான் இயக்கம்' போன்றவற்றின் துணையோடு கிட்டத்தட்ட 300 பெண்களை அங்கிருந்த விபசார விடுதிகளில் இருந்து மீட்டோம்.
இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். சேலம் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக மும்பைக்கு அழைத்து வந்து ஏமாற்றியிருக்கிறார்கள். விபசாரத் தொழிலில் ஈடுபடமாட்டோம் என்று எதிர்த்த பெண்களுக்குச் சூடு போட்டுத் துன்புறுத்தியிருக்கிறார்கள். இந்தப் பெண்களை மீட்டுத் தனி ரயிலில் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தோம். இது நடந்தது 2005 இல்.
ஆனால் அதோடு நின்றுவிடவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் சொந்த ஊரில் எப்படி வாழ்கிறார்கள் என்று பார்த்து வந்தேன். சிலர் பூ விற்றுப் பிழைக்கிறார்கள். சேலம் பகுதியில் சிலர் கம்பெனிகளில் வேலை செய்கிறார்கள்'' என்கிறார் பெருமையுடன்.
வேறு என்ன சேவை செய்திருக்கிறீர்கள்? என்று கேட்டோம்.
""மும்பையில் உள்ள சில பள்ளிகளில் அதிலும் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் உள்ளன. பாண்டூப் பகுதியில் பிரைட் உயர்நிலைப் பள்ளி இருக்கிறது. அங்கு வேலை செய்யும் ஆசிரியர் ஒருவர் அங்கு தமிழ் வழியில் படிக்கும் பிள்ளைகளுக்கு வரலாறு, புவியியல், அறிவியல், தமிழ்ப் பாட புத்தகங்கள் கிடைக்கவில்லை என்று என்னிடம் சொன்னார்.
விசாரித்துப் பார்த்ததில் நிறையப் பள்ளிகளில் இதே நிலைமை என்று தெரிந்தது.
உடனே தமிழ், வரலாறு, புவியியல், அறிவியல் பாடப் புத்தங்கள் ஒவ்வொன்றிலும் 2 ஆயிரம் பிரதிகள் அச்சடித்து இலவசமாக வழங்கினேன். தமிழ்நாட்டில் படிக்கும் பிள்ளைகளுக்குப் புத்தகங்கள் எளிதாகக் கிடைத்துவிடும். பிற மாநிலங்களில் உள்ள தமிழ்ப் பிள்ளைகளுக்குக் கிடைப்பது சிரமம் என்றார்''.
குடும்பத்தினர் உங்களுடைய சேவைகளுக்கு ஒத்துழைக்கிறார்களா? என்று கேட்டதற்கு,
""எனது குடும்பத்தினர் எனது சேவைகளுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கின்றனர். மனைவி ஜான்ஸி, மகன் ஹென்சன், மகள் ஹெனிட்டா சோனி எல்லாரும் எனக்கு உதவியாக இருக்கிறார்கள். இல்லையென்றால் என்னால் எதுவுமே செய்திருக்க முடியாது'' என்கிறார் தெளிவாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...