/

புவிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் மருத்துவர்!

இன்றைக்குப் புவி வெப்பமயமாதல் பிரச்னை பற்றி உலகில் பேசாத நாடுகளே இல்லை. ஆனால், இது ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கும் பிரச்னை என்பதை நம்மில் உணர்வோர் எத்தனை பேர்? பூமியின் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:30 am

வே.சுந்தரேஸ்வரன்

இன்றைக்குப் புவி வெப்பமயமாதல் பிரச்னை பற்றி உலகில் பேசாத நாடுகளே இல்லை. ஆனால், இது ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கும் பிரச்னை என்பதை நம்மில் உணர்வோர் எத்தனை பேர்? பூமியின் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூழலில், பூமிப் பந்துக்கு வரப் போகும் ஆபத்தை உணர்ந்து, நாளைய தலைமுறையினரான மாணவர்கள் மூலம் மரக்கன்று நட்டு பூமியைப் பாதுகாக்கும் விழிப்புணர்வுப் பணியில் தன்னை ஈடுபடுத்தி ஓசையின்றி செயல்பட்டு வருகிறார் மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் பொது மருத்துவரான எம்.ஸ்ரீநிவாசன். மதுரையில் சமீபத்தில் 2011 மாணவர்களை ஒரே இடத்தில் கூடச் செய்து அவர்களது பெயர்களிலேயே மரக் கன்றுகளை நடச் செய்யும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் இவர். மேலும், ஆன்மிகத்தை அறிவியலுடன் ஒப்பிட்டு புராணங்கள், கதைகளில் கூறப்படும் அறிவியல் உண்மைகளை தனது "ஆகாயத் தாமரை' நூல் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

""கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். மதுரையில்ஏ.ஆர். மருத்துவனையை நடத்தி வருகிறோம். சிறுவயதில் இருந்தே மரங்களின் மீதும், இயற்கையின் மீதும் எனக்கு ஈர்ப்பு அதிகம்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் பொற்றாமரைக் குளத்தைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டேன்.

இந்த மரக்கன்று நடும் திட்டத்துக்குத் தொடக்கமாக விதையிட்டது மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய இரா. பாஸ்கரன்தான். கோவில் நிலத்தில் "நட்சத்திரத் தோட்டம்' என்ற பெயரில் 750 பேரின் பிறந்த நட்சத்திரத்தின் பெயரில் மரக்கன்றுகளை நடுவதற்கு 2006-ம் ஆண்டில் ஏற்பாடு செய்தோம்.

மீனாட்சி அம்மன் கோவில் தல விருட்சம் கடம்ப மரம் என்பதால், 1000 கடம்ப மரக்கன்றுகள் நடும் திட்டமும் மேற்கொள்ளப்பட்டது. இந்தாண்டு குடியரசு தினமான ஜனவரியில்

26-ம் தேதி எனது ஏ.ஆர். அறக்கட்டளை மூலம் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்துடன் இணைந்து அக் கோயில் நிலத்தில் 2011 மரக்கன்றுகளை நட்டோம்.

மரங்களை வளர்ப்பதில் அதிக ஆர்வத்துடன் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில், மாணவர்களின் பெயரிலேயே மரக்கன்று நடும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களை நேரில் அழைத்துச் சென்று அவர்களது பெயர், அவரது பிறந்த நாள், மரத்தின் வகை உள்ளிட்ட விவரங்களுடன் இந்த மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்பாடு செய்தோம்.

எலுமிச்சை, கொய்யா, மாதுளை, சப்போட்டா, மா, பலா, தென்னை உள்ளிட்ட 9 வகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 5 பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டு மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் இந்தத் திட்டத்தைத் தொடக்கி வைத்து ஊக்குவித்தார். 5 ஆண்டுகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் மரத்தின் வளர்ச்சி குறித்து மாணவர்களின் பிறந்த நாளின்போது பிறந்த நாள் வாழ்த்தாக மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

மருத்துவத் துறையில் இக்கட்டான நேரங்களில் நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறுவோம். அதேபோன்று, தற்போது பூமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், மரங்கள் வளர்ப்பையும் ஓர் அவசரச் சிகிச்சையாகத்தான் கருதுகிறேன். ஆம், கடந்த 60 ஆண்டுகளில் பூமிப்பந்தின் வெப்பம் 1 டிகிரி உயர்ந்துள்ளது.

பூமி தோன்றி 4.5 மில்லியன் ஆண்டுகள் ஆன நிலையில், தற்போதுதான் இந்த காய்ச்சல் (வெப்பம்) ஏற்பட்டுள்ளது. குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்படும்போது அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் ஜன்னி வந்துவிடுவது போல், பூமியின் சூட்டைத் தணிக்காமல் போனால் சுனாமி, வெள்ளம், எரிமலைச் சீற்றம் போன்ற பேரழிவுகளை தொடர்ந்து நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதைத் தடுப்பதற்கு இதுபோன்ற மரம் வளர்ப்புத் திட்டம் பேருதவியாக இருக்கும்.

தமிழகத்தில் பயன்படாமல் ஏராளமான தரிசு நிலக் காடுகள் உள்ளன. அவற்றை மரம் வளர்ப்புக்குப் பயன்படுத்தலாம். அதற்கான விழிப்புணர்வு முயற்சியாகத்தான் இத் திட்டத்தை நான் மேற்கொண்டு வருகிறேன்.

மாணவர்கள் மூலம் 40 லட்சம் மரக்கன்றுகளை நடச் செய்வதே எனது லட்சியமாகும். இதன் மூலம் 10 ஆண்டுகளில் பூமியின் வெப்பத்தை சமநிலைக்குக் கொண்டு வர முடியும். அதேபோன்று கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க, சூரிய சக்தி ஆற்றலைப் பயன்படுத்தச் செய்யும் வகையில் மாணவர் விஞ்ஞானித் திட்டத்தைச் செயல்படுத்திட உள்ளோம்.

இந்தியாவில் 13 வயதுக்கு மேற்பட்டோர் 30 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு சூரிய ஒளியின் பயன்பாட்டை பாடத் திட்டத்தின் மூலம் அறிவிக்கலாம்.

"போட்டோவோல்டிக் பேனல்'களைத் தயாரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் பயிற்சி அளிக்க உள்ளோம்.

இதற்காக பல்வேறு நாடுகளில் சென்று அந்த தொழில்நுட்பப் பயன்பாடு பற்றி அறிந்து வருகிறேன்.

சோலார் எனர்ஜி சொûஸட்டி ஃஆப் இந்தியா அமைப்பில் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருப்பதால், அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறேன். ஏ.ஆர். சோலார் எனர்ஜி யூனிட்டையும் தொடங்கியுள்ளேன்.

இதுதவிர, விளையாட்டுத் திறன்கூடிய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்கள் பரிணமிக்கும் வகையிலான விளையாட்டில் பயிற்சி அளிக்கும் வகையில் ஒரு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

மீனாட்சி அம்மன் கோவில் அமைப்பானது மனிதனின் உடம்பு அமைப்பைப் போன்று கட்டப்பட்டுள்ளது. இதில், பலவித அறிவியல் உண்மைகள் பொதிந்துள்ளன.

வாழும் கலையையும் வளரும் கலைகளையும் கட்டிக் காக்கும் அறிவுப் பெட்டகம்தான் இக் கோயில். அதுபற்றிய அளப்பரிய தகவல்களை விஞ்ஞான அடிப்படையில் ஒப்பிட்டு "ஆகாயத்தாமரை' எனும் நூலை எழுதியுள்ளேன். இது பதினைந்து ஆண்டுகால முயற்சியாகும்.

சமயம் என்பது அறிவியல் பூர்வமான உண்மைகளை ஒளித்துவைத்துள்ள பெட்டகம். மனிதர்களுக்கு வாழ்வில் பயன்படும் பல விஷயங்களும் திருமூலர் அருளிய திருமந்திரத்தில் உள்ளன.

இதேபோன்று, பிற மதங்களின் கதைகளிலும் பல்வேறு அறிவியல் உண்மைகள் பொதிந்துள்ளன. அதை ஆழப் படித்தால் புரியும் '' என்கிறார் டாக்டர் ஸ்ரீநிவாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.