சினிமா விநியோகத்தில் எம்.பி.ஏ. மாணவர்கள்!
பி.யு.சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர் காலம் முதல் இன்று வரை சினிமாவைத் தொழில்... தொழில்... என்று பலர் குறிப்பிட்டு வந்தாலும், உண்மையில் ஒரு தொழில் நிறுவனத்துக்கான நிர்வாக முறைகளோ, சந்தைப்படுத்தும்


பி.யு.சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர் காலம் முதல் இன்று வரை சினிமாவைத் தொழில்... தொழில்... என்று பலர் குறிப்பிட்டு வந்தாலும், உண்மையில் ஒரு தொழில் நிறுவனத்துக்கான நிர்வாக முறைகளோ, சந்தைப்படுத்தும் முறைகளோ இதுவரை தமிழ்த் திரைப்படத்துறையில் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததா? என்று கேட்டால் கொஞ்சம் அல்ல, நிறையவே யோசிக்க வேண்டியிருக்கிறது.
அண்மையில் சென்னையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் 103 மாணவ, மாணவிகள் பங்குகொண்ட பயிற்சி முகாம் நடந்தது. எல்லாரும் எம்பிஏ படிப்பவர்கள். திரைப்படங்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது? என்பதை ஆராய தமிழ்நாடு முழுக்க இந்த மாணவர்கள் செல்ல இருக்கிறார்கள். அதற்கான பயிற்சி முகாம்தான் இது.
பயிற்சி முகாமை நடத்தியவர் "கிருஷ்ணவேணி பஞ்சாலை' திரைப்படத்தின் இயக்குநரும்,
தயாரிப்பாளருமான தனபால் பத்மநாபன். அவரிடம் பேசியதிலிருந்து...
தலில் எல்லாம் திரைப்படங்கள் நூறு நாட்களைத் தாண்டி திரையரங்குகளில் ஓடும். இப்போது ஒரு வாரம் ஓடினாலே பெரிய விஷயமாகிவிட்டது. முதல் மூன்று நாட்களுக்குள் ரசிகர்களின் கவனத்தை ஒரு படம் ஈர்க்கவில்லையென்றால், அந்தப் படத்தைத் தியேட்டரிலிருந்தே தூக்கிவிடுகிறார்கள்.
மிகப் பெரிய நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் மட்டுமே படம் திரையிடப்படுவதற்கு முன்பே மக்களின் ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்றன. புதுமுகங்கள், சாதாரண நடிகர்கள் நடிக்கும் திரைப்படம் எவ்வளவுதான் சிறந்தவையாக இருந்தாலும் மக்களின் கவனத்தைப் பெற முடியாமற் போகிறது.
இந்த நிலையை மாற்ற என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். மேலும், யுடிவி, ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் போன்ற நிறுவனங்கள் ஊடகத்துறையில் நுழைந்த பின்பு, இதர தொழில் நிறுவனங்களைப் போலவே திரைப்படத்துறையும் தொழில் நிறுவனங்களுக்குரிய நிர்வாக முறைகளையும், மார்க்கெட்டிங் முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. ஆம். தமிழ்த் திரையுலகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே பெரும் தொழிலகங்களின் சந்தைப்படுத்தும் முறைகளைத் திரைப்படத்துறைக்குப் பயன்படுத்திப் பார்த்தால் என்ன? என்று எனக்குத் தோன்றியது.
உடனே தமிழகமெங்கும் உள்ள கல்லூரிகளில் எம்.பி.ஏ. பயிலும் மாணவர்கள் பங்கும் கொள்ளும்விதமான அறிவிப்பு ஒன்றை அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பி வைத்தேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதாகத் தெரிவித்திருந்தார்கள். அவர்களுடன் தொலைபேசியில் பேசி இன்டர்வியூ நடத்தி 103 பேரை மட்டும் தேர்ந்தெடுத்தோம்.
நான் தயாரித்து இயக்கும் "கிருஷ்ணவேணி பஞ்சாலை'த் திரைப்படத்தை சந்தைப்படுத்த புதிய முறைகளைக் கண்டறிந்து இந்த மாணவர்கள் கூறுவார்கள். இந்த 103 பேரும் 103 திரையரங்குகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கள் வேலையைத் தொடங்குவார்கள்.
திரையரங்குகளில் வந்து படம் பார்க்கும் பழக்கம் ஏன் குறைந்துவிட்டது? அதிகக் கட்டணத்தாலா? திரையரங்குகளைச் சரியாகப் பராமரிக்காததாலா? அல்லது திருட்டு விசிடி காரணமா? தொலைக்காட்சியின் ஆதிக்கத்தாலா? என்பன போன்ற விஷயங்களை இந்த மாணவர்கள் பல்வேறு பகுதி மக்களைச் சந்தித்துக் கேட்டு, ஆய்வு செய்வார்கள். அதன் மூலம் அதிக அளவில் மக்கள் திரையரங்குகளுக்கு வர, என்ன செய்ய வேண்டும்? என்று கண்டு
பிடிப்பார்கள்.
அது தவிர, படம் திரையிடப்படுவதற்கு முன்பாகவே எனது திரைப்படத்தின் பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். செல்போன் ரிங்டோன் மூலமாக, தேநீர் கடைகளில் கேட்கும் பாடல்களின் மூலமாகக் கொண்டு சேர்ப்பார்கள்.
அதுபோல சாலைகளில் ஓடும் ஆட்டோக்களில் படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டுவார்கள். பெரிய தொழிற்சாலைகளுக்குச் சென்று அங்குள்ள மேலாளர்களைப் பார்த்துப் பேசி இந்தப் படத்தைத் தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தும்படி கேட்டுக் கொள்வார்கள்.
புகழ்பெற்ற நடிகர்கள், நடிகைகள் நடிக்காத, அதேசமயம் மிகுந்த சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட ஒரு தமிழ்த் திரைப்படத்தைப் பெருமளவு மக்கள் பார்க்க, இப்படிப்பட்ட சந்தைப்படுத்தும் உத்திகள் எந்த அளவுக்கு உதவும் என்று கண்டறிவார்கள்.
பல்வேறு புதிய சந்தை உத்திகளைக் கையில் எடுத்துக் கொண்டு, படம் திரையிடப்படுவதற்கு முன்பும், திரையிடப்பட்ட பின்பும் படத்தைப் பெருமளவிலான மக்களிடம் கொண்டு சேர்க்க என்ன செய்வது என்பதைக் கண்டறியவே மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இதில் அவர்கள் பெற்ற பயிற்சிகளின் மூலம் வருங்காலத்தில் மிகப் பெரிய நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் பல புதிய சவாலான பணிகளை எடுத்துக் கொண்டு, அதில் அவர்கள் வெற்றிகரமாகப் பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...