மடி நெருப்பு, அந்தரங்கம், இரண்டாவது மரணம்
நாடக விமர்சனம் "ஸ்ரத்தா' நாடகக் குழு, என்றைக்கு வருடத்துக்கு நச்சென்று நாலே நாடகம் என்று மேடை நாடகப் புரட்சியில் இறங்கியதோ, அன்றிலிருந்து தமிழ் நாடக மேடை வயதுக்கு வந்துவிட்டது என்று தலை நிமிர்ந்து ச


நாடக விமர்சனம்
"ஸ்ரத்தா' நாடகக் குழு, என்றைக்கு வருடத்துக்கு நச்சென்று நாலே நாடகம் என்று மேடை நாடகப் புரட்சியில் இறங்கியதோ, அன்றிலிருந்து தமிழ் நாடக மேடை வயதுக்கு வந்துவிட்டது என்று தலை நிமிர்ந்து சொல்லலாம். நம்பும்படியான கதை, இயல்பான வசனம், மிகைப்படுத்தாத நடிப்பு மூன்றும் இருந்துவிட்டால் நாடகத்துக்கு "ஏ-1' என்று முத்திரை குத்திவிடலாம். ஒரு கதைக்கே இப்படி என்றால், மூன்று சிறுகதைகளை ஒரே மேடையில் நாடகமாக வழங்கியிருக்கும் "ஸ்ரத்தா'வை, இதுவரை விரல்களை மடக்கிக் குட்டிக்கொண்டிருந்த விமர்சகர்கள்கூட, வாழ்த்தி வரவேற்பார்கள். மூன்று நாடகங்களுக்குமே அடித்தளமாக இருப்பது - நம்பிக்கை.
அடுக்குமாடிக் கட்டடங்களாகக் கட்டி நகரின் அடையாளங்களையே அழித்து வரும் மாஃபியா, அதற்குத் தடையாக இருக்கும் முதியவர்கள் மூவரில் மாசிலாமணியைக் கொலை செய்துவிட்டு, மற்ற இருவரை அச்சுறுத்தியே காரியத்தைச் சாதிக்கும் நில அபகரிப்புச் சீண்டல்தான் "மடி நெருப்பு'. காத்தாடியும், டி.டி.எஸ்.ஸýம், ரமேஷும், முதியவர்கள். சிவாஜி சதுர்வேதி ரியல் எஸ்டேட்காரரின் தூதர். முப்பது நிமிடத்திலேயே, அனுபவம் எப்படி யதார்த்த நடிப்புக்குக் கைகொடுக்கும் என்று நிரூபிப்பதில் "மடி நெருப்பு' வெற்றி கண்டிருக்கிறது. இயக்கம்: காத்தாடி ராமமூர்த்தி. கன்னி முயற்சி என்பதால் "கங்கிராட்ஸ்' சொல்லலாம் தாராளமாக.
ஆங்கில நாடகங்களுக்கு இணையான நாசுக்கான அலங்காரத்துடன் இருக்கிறது இரண்டாவது நாடகம் "அந்தரங்கம்'. வேறு யாருக்கோ அனுப்ப வேண்டிய ஈ-மெயிலைத் தவறுதலாகக் கணவனின் ஐடிக்கு அனுப்பிவிட்டு, அதை "டெலீட்' செய்யக் கோரி அலுவலகத்தில் காத்திருக்கிறாள் மனைவி. "அதை நீக்கிவிடுகிறேன்..' என்று கணவன் உறுதி அளித்த பின்னும், அதைத் தன் கண்ணால் பார்த்துவிட்டே போவது என்று பிடிவாதத்தைக் காண்பிக்கிறாள் மனைவி. நடிப்பை மிஞ்சுகிறதா வசனம் அல்லது, வசனத்தை மிஞ்சுகிறதா நடிப்பு என்பது உண்மையிலேயே ஒரு புதிர். "நீயே செய்துவிடு..' என்று விட்டுக்கொடுக்கும் கணவன். செய்து முடித்த பின் இருவருமே "டெலீட்' செய்த ஈ-மெயிலை "டிராஷி'லிருந்து திரும்ப வரவழைத்துப் பார்க்க முடியுமா? என்று தனித்தனியே கணினி நிபுணரிடம் விசாரிப்பதுடன் நாடகம் முடிகிறது. சுவாமிநாதனுக்கும், கவிதாவுக்கும் நடிப்புக்கு மதிப்பெண்களை வாரி வழங்கலாம் என்றால், கூடவே வசனத்துக்கு ஆனந்த் ராகவுக்கும்!
கொஞ்சம் மனசைப் பிழியும் ரகம், மூன்றாவது நாடகமான "இரண்டாவது மரணம்'. அப்பாவை ஐசியுவில் சேர்த்துவிட்டு, ஆயிரக்கணக்கில் பில்லுக்குப் பணம் கட்டக் கையைப் பிசையும் மகன். ஆரம்பத்தில் உதவிக்கரம் நீட்ட ஓடோடி வரும் அலுவலக சக ஊழியர்கள் படிப்படியாக ஒதுங்கிவிடுகிற சோகம். அப்பா ஐசியுவில் இருக்க, அலுவலக நிர்ப்பந்தம் காரணமாக ஐதராபாத் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தும் மேலாளர். குருவி சேர்ப்பது போல் சேர்த்து வாங்கிய நிலத்தை விற்கத்தான் வேண்டும் என்று கணவன் தீர்மானிக்க, எதிர்ச்சொல் வீசும் மனைவி என்று நாடகம் முழுக்க சீரியஸ் சூழல். படு சீரியஸ் வசனம் டாக்டரின் விளக்கம். கடைசியில் அப்பாவின் மரணத்துக்கான காரணத்தை ஏற்று, செயற்கை சுவாசம் தரும் "வென்டிலேடரை' எடுத்துவிட மகன் முடிவு எடுக்கும் தருணம், அப்பாவின் இயற்கையான முடிவு நிகழ்கிறது. தவிக்கும் கிரிஷ், அமைதியாக இருந்து பின்னர் பொங்கிக் குமுறும் சுசித்ரா, படிப்படியாக விளக்கம் தரும் டாக்டராக ஆனந்த் ராகவ் என்று, அலைபாயும் சராசரி குடும்பத்தின் நிஜத்தை மேடைக்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஜி.கிருஷ்ணமூர்த்தி.
- ஏற்கெனவே ஆனந்த் ராகவ் பத்திரிகைகளில் எழுதி வெளியான மூன்று சிறுகதைகள்தாம் இவை. ஆனால் அப்போது படித்து மறந்துபோன இந்த மூன்று சிறுகதைகளிலும் மறைந்துகொண்டிருக்கும் பாத்திரங்களை மேடையில் பார்க்கும்போது, ஆனந்த் ராகவின் மேடைக்கான தேர்வு சரியாகத்தான் இருக்கிறது என்று ஆமோதிக்கத் தோன்றுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...