

இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஆனால் இதற்கு நேர்எதிராக எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துவருகிறது. பெட்ரோல் இல்லாமல், பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் என்றால் பேட்டரியில் மின் சக்தியை சேமிக்க மின்சாரம் தேவை. இவை இரண்டுமே இல்லாமல் ஒரு வாகனம் கிடைத்தால் மனித சமூகத்திற்கு மகிழ்ச்சியானதாக இருக்குமே!
இந்த மகிழ்ச்சியை, அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தருவதற்கு முனைந்திருக்கிறார்கள். பெட்ரோல் இல்லாத, பேட்டரிக்கு சார்ஜ் போட மின்சாரத்தை நாடத் தேவையில்லாத அக்கல்லூரி மாணவர்களின் இரு சக்கர வாகனக் கண்டுபிடிப்பு புருவத்தை உயரச்செய்திருக்கிறது.
அண்மையில் கல்லூரியில் நடைபெற்ற "திறன் எனும் புதுமை கண்டுபிடிப்பு' குறித்து முன்னாள் மாணவர்கள் நடத்திய விழாவின்போது, சியாம்சுந்தர் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து உருவாக்கிய ஹைபிரிட்-1 மோட்டார் சைக்கிள் பலரது பாராட்டைப் பெற்றது. தங்களின் கண்டுபிடிப்பு குறித்து சியாம்சுந்தர் நம்மிடம் பேசியதிலிருந்து.....
""நம்நாட்டில் நாளுக்கு நாள் 2 சக்கர வாகனங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பெட்ரோலுக்கு மாற்றாக பலரும் பலவிதமாக முயற்சி செய்து பேட்டரி மூலமும் வாகனம் உருவாக்கி அதுவும் உலாவருகிறது. ஆனால் எல்லாவற்றிற்குமே எரிபொருள் அல்லது மின்சாரம் அடிப்படைத் தேவையாக உள்ளது. எளிதாக மனித ஆற்றலாலே சுழலச்செய்த இயந்திரத்தின் சக்தியைப்பெற்று அதனை சேமிக்க வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினேன்.
நானும் (சியாம் சுந்தர்) சோலையப்பனும் மோட்டார் எந்த வகையைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும் எனவும், சரவணனும், ராமச்சந்திரனும் மின் அமைப்புகளை கவனித்துக்கொள்வதெனவும், ஆசிப், விவேக் மனித ஆற்றலை மின் ஆற்றலாக்கி சேமிக்க என்ன செய்வது எனவும் ஆராய்ந்தோம். அதற்காக கருமமே கண்ணாக உழைத்தோம். அலைந்து திரிந்து பல பொருள்களைத் தேடிக் கண்டுபிடித்து எங்களது கூட்டுமுயற்சியால் இதனை
உருவாக்கினோம். "ஹைபிரிட்' என்பது மனித ஆற்றலும், மின் ஆற்றலும் இணைந்ததைக் குறிப்பதாகும்.
ஹைபிரிட்-1 செயல்பாடுகளைப் பொறுத்தவரை முதல் கட்டமாக நாங்கள் ஒரு சைக்கிளில்தான் இந்த ஆராய்ச்சியை தொடங்கியுள்ளோம். மெக்கானிக்கல் பிரின்சிபிள்தான். முன்புற சக்கரத்தை இயங்கச்செய்தவன் மூலம் கிடைக்கும் மின்சக்தியை சேமிக்கும் ஒரு தொழில்நுட்பம் அமைத்திருக்கிறோம். இந்த சக்தியே சிறிய அளவிலான மோட்டாரை சென்றடைந்து அது சுழலத்தொடங்கியதுமே நாம் ஆக்சிலேட்டரை இயக்கினால் வண்டி ஓடத்தொடங்கிவிடும். இப்போது சோதனை ஓட்டமாக 50 கிலோ எடையைக் கொண்டு 15 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுகிறது. இதில் தொடர்ந்து ஆராய்கிறோம். இதனை மேலும் மேம்படுத்தி எங்களது அடுத்த முயற்சியாக ஹைபிரிட்-2 என்பதை இலக்காக வைத்திருக்கிறோம். ஹைபிரிட்-1 ரூ. 27 ஆயிரம்வரை செலவிட்டுள்ளோம். இந்த மோட்டார் சைக்கிளை முழுமைப்படுத்தி சந்தைப்படுத்தி எளியவர்களும் வாங்கும் வகையில் ரூ. 13 ஆயிரத்தில் உருவாக்கி ஹைபிரிட்-2 வை வெளி சந்தைப்படுத்த முயற்சித்துள்ளோம். எங்களது முயற்சிக்கு காரைக்குடியைச்சேர்ந்த சித்திக் என்ற சைக்கிள் கடை உரிமையாளரும், மதினா மற்றும் விநாயகா கடைசல் நிறுவனத்தினரும் பெரிதும் உதவினர்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.