விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

2மாதங்கள்... சாதனைகள்!

இரண்டு மாதங்களுக்கு முன்பு, சென்னையில் ஓர் இளைஞர் 24 மணி நேரம் தொடர்ந்து ட்ரம்ஸ் வாசித்தார்.  இந்திய அளவில் நிகழ்த்தப்படும் சாதனைகளைப் பதியும் "இண்டியா புக் ஆஃப் ரிகார்ட்ஸ்' இல் இடம் பெறுவதற்காக. கடந்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:34 am

ந. ஜீவா

இரண்டு மாதங்களுக்கு முன்பு, சென்னையில் ஓர் இளைஞர் 24 மணி நேரம் தொடர்ந்து ட்ரம்ஸ் வாசித்தார்.

 இந்திய அளவில் நிகழ்த்தப்படும் சாதனைகளைப் பதியும் "இண்டியா புக் ஆஃப் ரிகார்ட்ஸ்' இல் இடம் பெறுவதற்காக. கடந்த ஜனவரி 7 காலை 9.30 மணிக்கு வாசிக்க ஆரம்பித்தவர், மறுநாள் 11.30 க்கு முடித்தார். 3 மணி நேரத்துக்கு ஒருமுறை 15 நிமிட இடைவெளி.

 அந்த இளைஞர் 31 வயதான ட்ரம்ஸ் ஸ்ரீதர்.

 இரண்டு மாதங்கள் கழித்து இப்போது அவருடைய பெயர் அதே "இன்டியா புக் ஆஃப் ரிகார்ட்ஸ்' இல் இடம் பெறப் போகிறது. ஆனால் இது வேறு ஒரு சாதனைக்காக. ஆயிரம் கண்ணாடிப் பாட்டில்களின் உட்புறத்தில் தலைவர்களின் படங்களை வரைந்ததுதான் அந்தச் சாதனை.

 இப்படி சாதனைக்குமேல் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதரை சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசினோம்.

 ""நான் 10ஆம் வகுப்பு வரை படித்தேன். எனக்குப் படிப்பில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர் வராத பீரியட்களில் டெஸ்கில் தாளம் போடுவேன். நண்பர்கள் மிக நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்கள். ஆனால் என் தாளத்தில் ரிதம் இருந்ததெல்லாம் எனக்கு அப்போது தெரியாது.

 பத்தாம் வகுப்பு முடித்தவுடன் என் அம்மா மீனாட்சி, ட்ரம்ஸ் வாசிப்பதில் எனக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து, அதைக் கற்றுக் கொள்ள கோபால் மாஸ்டரிடம் அனுப்பி வைத்தார். ஓராண்டு அல்ல, இரண்டு ஆண்டுகள் அல்ல, ஐந்தாண்டுகள் நான் ட்ரம்ஸ் மட்டும்தான் கற்றுக் கொண்டேன்.

 அதற்குப் பிறகு பல இசைக் குழுக்களில் ட்ரம்ஸ் வாசிக்க ஆரம்பித்தேன். சென்னையில் உள்ள எல்லாக் குழுக்களிலும் வாசித்திருப்பேன். தற்போது அபஸ்வரம் ராம்ஜி குழுவில் வாசித்துக் கொண்டிருக்கிறேன். பிறர் அழைத்தாலும் வாசிக்கப் போவேன்.

 இசைக் குழுக்களில் மட்டுமல்லாமல், கலப்பிசை நிகழ்ச்சிகளிலும் வாசிப்பேன். கீ போர்டு சத்தியநாராயணா, புல்லாங்குழல் நவீன், கடம் கார்த்தி, மிருதங்கம் டி.ஏ.ஸ்ரீநிவாசன் ஆகியோரின் நிகழ்ச்சிகளில் ட்ரம்ஸ் வாசித்திருக்கிறேன்.

 எனக்குச் சிறுவயதில் இருந்தே எதையாவது சாதிக்க வேண்டும் என்ற நினைப்பு இருந்து வந்தது. பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்று இருக்காமல் உலக அளவில் தெரியும்விதமாக ஏதேனும் சாதனை செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

 1999 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் 19 வயதான ஒருவர் தொடர்ந்து 19 மணி நேரம் ட்ரம்ஸ் வாசித்துச் சாதனை புரிந்தார். அதை டிவியில் பார்த்த எனக்கு, அதை மிஞ்சும் வகையில் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

 அப்போதே "இன்டியா புக் ஆஃப் ரிகார்ட்ஸில்' இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நிகழ்ச்சி நடத்துவதற்கு என்னிடம் வசதியில்லை. சிலர் ஸ்பான்சர் செய்ய முன்வந்தார்கள். கடைசி நேரங்களில் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. என்னுடைய கனவு, கனவாகவே இருந்தது.

 இந்த ஆண்டுதான் சிஎஸ்எஸ் ஸ்கார்ப் நிறுவனத்தின் உதவியுடன், இந்த சாதனை நிகழ்ச்சியை நடத்த முடிந்தது. இந்த 24 மணி நேர சாதனை இசை நிகழ்ச்சியில், ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் ஒவ்வொருவிதமான கச்சேரிகளுக்கு ட்ரம்ஸ் வாசித்தேன். முதலில் வெஸ்டர்ன் பாண்ட், அப்புறம் ஃப்யூசன் பாண்ட், லைட் மியூசிக், கிளாசிக் என எல்லாவற்றுக்கும் வாசித்தேன். அந்த மூன்று மணி நேரத்தில் அரை மணி நேரம் தனியாக ட்ரம்ஸ் வாசித்தேன். இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்காக ஹரியானா மாநிலத்திலிருந்து வெங்கடாச்சாரி வந்திருந்தார். அவர் இண்டியா புக் ஆஃப் ரிகார்ட்ஸின் தென்பிராந்திய ஒருங்கிணைப்பாளர் ஆவார். நான் ஒருபுறம் ட்ரம்ஸ் வாசித்துச் சாதனை செய்து கொண்டிருக்க, அவர் அதைத் தொடர்ந்து 24 மணி நேரங்கள் கவனித்து வேறொரு சாதனை புரிந்து

 கொண்டிருந்தார்.

 என் சிறுவயதிலிருந்தே இசையில் எனக்குப் பைத்தியம் பிடித்து இருந்ததைப் போல, கண்ணாடி பாட்டில்களின் உட்புறத்தில் படங்கள் வரைவதிலும் ஆர்வம் இருந்து வந்தது. பத்தாவது படிக்கும்போது பள்ளியில் ஓவியப் போட்டி ஒன்று நடந்தது. எல்லாரும் காகிதத்தில் படம் வரைந்த போது, நான் கண்ணாடி டம்ளரில் படம் வரைந்து காட்டினேன். கண்ணாடி டம்ளரில் படம் வரைந்தால் பரிசு கிடையாது என்றாலும், என் முயற்சியைப் பாராட்டிப் பரிசளித்தார்கள்.

 கண்ணாடி டம்ளரில் நான் படம் வரைந்து பிறரிடம் காட்டினேன். இதென்ன பிரமாதம்? கண்ணாடி டம்ளர் வாய் அகன்று உள்ளது. இதில் சிறிது முயற்சி செய்தால் யாரும் படம் வரைந்து விடலாம் என்றார்கள். உடனே ஹார்லிக்ஸ் பாட்டில்களின் உட்புறத்தில் படங்களை வரைய ஆரம்பித்தேன். கண்ணாடி டம்ளர்களில் போல் அல்லாமல், ஹார்லிக்ஸ் பாட்டில்களில் படம் வரையும் போது தலைகீழாக வரைய

 வேண்டும்.

 சிறிது நாட்களில் அதைவிடக் கடினமாகப் படம் வரைய வேண்டும் என்பதற்காக, குறுகிய வாய்ப் பகுதியுள்ள கண்ணாடிப் பாட்டில்களின் உட்புறத்தில் படங்களை வரைய ஆரம்பித்தேன். ஆயிரம் பாட்டில்களுக்கும் மேல் வரைந்துவிட்டேன். ஒரே பாட்டிலின் உட்புறத்தில் 181 தலைவர்களின் படங்களை வரைந்து சாதனை செய்திருக்கிறேன். இந்தச் சாதனையை இண்டியா புக் ஆஃப் ரிகார்ட்ஸ்ஸýக்கு அனுப்பி வைத்தேன். இப்போது அவர்கள் இதையும் சாதனையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.