திருப்பரங்குன்றத்தில் செம்மொழிக் கல்வெட்டுகள்!

 பதின்மூன்றாம் நூற்றாண்டில் மதுரையை தலைநகராய்க் கொண்டு ஆட்சி செய்த மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன். இவன் தனது ஏழாவது ஆட்சியாண்டில், அதாவது கி.பி. 1223-ல் பாண்டிய நாட்டின் பெருமையினை உலகுக்குப
திருப்பரங்குன்றத்தில் செம்மொழிக் கல்வெட்டுகள்!

 பதின்மூன்றாம் நூற்றாண்டில் மதுரையை தலைநகராய்க் கொண்டு ஆட்சி செய்த மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன். இவன் தனது ஏழாவது ஆட்சியாண்டில், அதாவது கி.பி. 1223-ல் பாண்டிய நாட்டின் பெருமையினை உலகுக்குப் பறைசாற்றும் வண்ணம் தொடுத்த படையெடுப்புகளும், செய்துமுடித்த கோவில் திருப்பணிகளும் எண்ணிலடங்காது. ஏட்டிலுமடங்காது.

 தொன்மை புகழ்மிக்க, முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குவது திருப்பரங்குன்றம். மிகப் பெரிய மலைக்குன்றாய் விண்ணளாவ உயர்ந்தெழுந்து நிற்பது. இம்மலையினை கிரிவலம் வருவோர், தெற்கு கிரி வீதியில், அதாவது மலையின் நேர் பின் பக்கத்தில், சங்க காலக் குடைவரை கோவிலை கண்ணாரக் கண்டு களிக்கலாம்.

 எந்தவிதமான விஞ்ஞான, தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத கி.பி.எட்டாம் நூற்றாண்டு கால கட்டத்திலேயே, அடர்ந்த சோலைகள் சூழ்ந்த, குளிர்ச்சி பொருந்திய இடத்தில், சிற்பக் கலைக்கு சிறந்த சான்றாக எடுத்துச் சொல்லும் விதத்தில், ஒரு குடைவரைக் கோவிலை அமைத்துள்ளனர் நம் முன்னோர்.

 மலைக்குன்றின் இக்கோவிலை தரிசிக்க, சிலபடிகள் மேலேறிச் சென்று, பிரம்மாண்ட வாசலை அடையலாம். அண்ணாந்து பார்த்தால் கழுத்து சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் கம்பீர, புராதன மலை. குடைவரைக் கோவில் வாசல் முகப்பின் இடப்பக்கம் சிதைந்த நிலையில் காணப்படும் விநாயகர் உருவச்சிலை. அதனை அடுத்து இருப்பது, தியான நிலையில், அமர்ந்த கோலத்தில் காணப்படும் சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள்.

 குடைவரைக் கோவிலின் வலப்பக்கம் புடைப்புச் சிற்பங்கள் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளன. கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரையும் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் சமணம் வேரூன்றி இருந்தது. அதனால்தான் சமண தீர்த்தங்கரர்களது சிற்பங்கள் மதுரை வட்டத்தில் திருவாதவூர், யானைமலை, மீனாட்சிபுரம், கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காணக் கிடைக்கின்றன.

 இதனைக் கண்டு களித்த பின் குடைவரைக் கோவிலுக்குள் செல்லலாம். கலை நயம் மிக்க மூன்று பெரிய தூண்கள் வாசல் போன்று பிரம்மாண்டமாய் நின்று வரவேற்பது மாதிரி அமைந்துள்ளன.

 அதனைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், இடப்புறம் அமைந்துள்ள தனிச் சந்நதியில் அழகான கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது.

 தெற்கு திசையைப் பார்த்த வண்ணம், மூலவரான தில்லைக் கூத்தனின் திருவுருவச் சிலை பாதி சிதைந்த நிலையில் காணப்படுகின்றது. இக்கோவில் அமைந்த காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு. கல்வெட்டுச் செய்திகளின்படி, இது உமையாண்டான் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

 நடராஜனின் உருவச் சிலைக்கு மேலே விநாயகர், சுப்பிரமணியர் சிற்பங்கள் எழிலுற விளங்குகின்றன. இடப்பக்கமாக, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரின் புடைப்புச் சிற்பம் விளங்குகிறது.

 கோவிலின் கிழக்குப் பக்க சுவர் முழுவதும் விரிந்து, பரந்த இரு அழகிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவைகள்தாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தியை எடுத்துச் சொல்லும் அழகிய செம்மொழிக் கல்வெட்டுகள். இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று, மன்னனின் புகழை எளிய நடையில் தெளிந்த நீரோடை பாய்ந்து செல்வது மாதிரி உரைத்து நிற்கிறது.

 மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழநாட்டின் மீது படையெடுத்து, அந்நாட்டை வென்று பாண்டிய நாட்டு ஆட்சி எல்லையை விரிவுபடுத்தியதைக் குறிக்கும் விதமாக, அந்த மெய்க்கீர்த்தி கல்வெட்டு பின்வருமாறு அமைந்துள்ளது.

 ""ஸ்வஸ்திஸ்ரீ பூமருவிய திருமந்தையும் புவிமடந்தையும் புயத்திருப்ப, நாமருவிய கலைமடந்தையும் நலம் சிறப்பக் கோளார்ந்த இனப்புலியும் கொடுஞ்சிலையும் குலைந்தொளிப்ப, வாளார்ந்த பொற்கிரி மேல் வரிக்கயல்கள் விளையாட, இருங்கடல் வளையத்து இனிது அறம் பெருகக், கருங்கலி கடிந்து செங்கோல் நடப்ப, ஒரு குடை நிழலில் இரு நிலம் குளிர, மூவகைத் தமிழும் முறைமையில் விளங்க, நால்வகை வேதமும் நவின்றுடன் வளர, ஐவகை வேள்வியும் செய்வினை இயற்ற, அறுவகை சமயமும் அழகுடன் திகழ, எழுவகைப்பாடலும் இயலுடன் பரவ, எண் திசை அளவும் சக்கரம் செல்லக், கொங்கணர், கலிங்கர், கோசலர், மாளுவர், சிங்களர், தெலுங்கர், சீனர், குச்சரர், வில்லவர், மகதர், விக்கலர், செம்பியர், பல்லவர், முதலியர், பார்த்திபர் எல்லாம் உறைவிடம் அருளென ஒருவர் முன் ஒருவர் முறை முறை கடவ, தந்திறை குணந்திறைஞ்ச, இலங்கொளி மணி முடி இந்திரன் பூட்டிய புரைகதிர் ஆர மார்பினில் பொலியப், பனி மலர் தாமரை திசைமுகன் படைத்த, மனு நெறி தழைப்ப, மணி முடி சூடிப் பொன்னி சூழ் நாட்டில், புலி ஆணை போய் அகலக், கன்னி சூழ் நாட்டில் கயல் ஆணை கை வளர, வெஞ்சின விவுளியம் வேழமும் பரப்பி, தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக், காவியும் நீலமும் நின்று கவினிழப்ப, வாவியுமாறு மணி நீர் நலனழித்துக், கூடமும், மாமதிலும், கோபுரமும், ஆடரங்கு மாடமும், மாளிகையும் மண்டபமும் பல இடித்துத், தொழுது வந்தடையார் நிருபதந்தோகையர் அழுத கண்ணீர் ஆறு பரப்பிக் கழுதை கொண்டு ழுது கவடி வித்திச், செம்பியனை சினிமரியப் பொருது கரம்புக வோட்டிப், பைம்பொன் பறித்துப் பாணனுக்குக் குடுத்தருளிப், பாடருஞ் சிறப்பிற் பரிதிவான் தோய, ஆடகப் புரிசை ஆயிரத் தளியில், சோழவளவன் அபிஷேக மண்டபத்து வீராபிஷேகம் செய்து, உலகமுழுதுடையாரோடும் வீற்றிருந்தருளிய ஸ்ரீ கோபாற பன்மரான திருபுவன சக்கரவர்த்திகள், சோணாடு வழங்கியவருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு ஏழாவது..''

 - என்று முடிகிறது. சங்கத் தமிழின் அழகும் எளிமையும் கொள்ளை கொள்ளுகிறது அல்லவா! அற்புதமான குடைவரைக் கோவிலும் பக்கத்தில் அமைந்துள்ள பொழுதுபோக்குப் பூங்காவும் சிறியோர் முதல் பெரியோர் வரை மனதை மயக்கும் விஷயங்களாக அமைந்துள்ள திருப்பரங்குன்றத்தை ஒருமுறை குடும்பத்தோடு சென்று கண்டு களித்து வரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com