வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அரசுப் பணியில் வேலை அரசுத் தேர்வுக்குப் பயிற்சி!

 ஏழை மாணவர்கள் படிப்பதற்காக பலரும் பல வகைகளில் உதவி செய்து வருகின்றனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் உதவி செய்து வருகின்றன.  திருநெல்வேலி மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியான சங்க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:29 am

மு. ஈஸ்​வ​ர​மூர்த்தி

 ஏழை மாணவர்கள் படிப்பதற்காக பலரும் பல வகைகளில் உதவி செய்து வருகின்றனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் உதவி செய்து வருகின்றன.

 திருநெல்வேலி மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியான சங்கரன்கோவிலைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் அரசுப் பணிக்காக கஷ்டப்பட்டு படித்தனர். அவர்களது கனவு நிறைவேறியது. கோயில் துணை ஆணையர், தமிழக அரசின் தகவல் ஆணைய ஆய்வாளர், தலைமைச் செயலக ஊழியர் என அவர்கள் பல்வேறு அரசுப் பணியில் சேர்ந்தனர்.

 தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தேர்வுக்காக அவர்கள் கற்றதையும் தேர்வுக்காகப் படித்த புத்தகங்களையும் பாதுகாத்து, தங்களைப் போலவே கஷ்டப்படும் இளைஞர்களுக்கு இலவசமாக அரசுத் தேர்வுக்கானப் பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

 யாரிடமும் எந்த உதவியும் பெறாமல் தங்கள் கை காசைப் போட்டு பயிற்சி அளித்து வரும் அந்த இளைஞர்கள், சங்கரன்கோவிலைச் சேர்ந்த கோமதி அம்பாள் மெட்ரிக்குலேசன் பள்ளி தலைமையாசிரியர் ந.பழனிச்செல்வம், தொழிலாளர் நலத் துறை அலுவலர் முத்துசிவா, தமிழக அரசு தகவல் ஆணைய ஆய்வாளர் கருப்பசாமி, கிராம நிர்வாக அதிகாரி ராமர், கூட்டுறவுத் துறை இளைநிலை உதவியாளர் மோகன், கோவில் துணை ஆணையர் செல்லத்துரை, ஆசிரியர்கள் ரகுமான், பசுபதி, தமிழ்செல்வன், கணபதி உள்ளிட்ட பலர்.

 இவர்கள் அளித்த பயிற்சி மூலம் கடந்த ஆண்டு கார்த்திகா, அமுதா, ராஜலெட்சுமி, மல்லிகா உள்ளிட்ட 13 பேர் கிராம நிர்வாக அதிகாரி தேர்வில் வென்று பணியில் உள்ளனர். அவர்களும் தற்போது மே மாதம் தொடங்கிய இலவச பயிற்சிக்கு வந்து தாங்கள் கற்றதைப் பயிற்றுவிக்கின்றனர். அரசுப் பணி நேரம் போக மற்ற நேரங்களில் இங்கு வந்து வகுப்புகள் எடுக்கின்றனர்.

 இந்த இலவச சிறப்பு வகுப்பில் கடந்த ஆண்டு 40 இளைஞர்கள் படித்தனர். இந்த ஆண்டு சுமார் 170 பேர் படிக்கின்றனர். இதில் பெரும்பாலோர் வானம் பார்த்த பூமியில் வசிக்கும் கிராமத்து இளைஞர்கள். சத்தமில்லாமல் சாதனை நிகழ்த்தும் இந்த இளைஞர்களின் ஒருவரான முத்துசிவா கூறியது:

 ""நானும் நண்பர்களும் அரசு வேலை பெற வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு படித்தோம். புத்தகம் வாங்குவதற்குக்கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டோம். பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க வேண்டுமென்றால் சில ஆயிரங்கள் தேவைப்படும். இதனால் நாங்கள் ஒருவருக்கொருவர் வாங்கிய புத்தகங்களைப் பரிமாறிக்கொண்டு படித்தோம். இதனால் செலவும் மிச்சமானது. சந்தேகம் ஏற்பட்டால் ஒருவருக்கொருவர் கேட்டுத் தெரிந்து கொள்வோம். அல்லது நூலகங்களில் தேடுவோம். கடுமையாக

 முயற்சி செய்து உழைத்ததால் எங்களுக்கு அரசு வேலை கிடைத்தது.

 எங்களைப் போல அரசுத் தேர்வு எழுத கஷ்டப்படும் இளைஞர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக நண்பர்களாக சேர்ந்து கடந்த ஆண்டு இலவச பயிற்சி வகுப்பு நடத்தினோம். அதில் 13 பேருக்கு வி.ஏ.ஓ. பணி கிடைத்தது. அவர்களும் இப்போது தாங்களாகவே வந்து இப்போதுள்ள மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கின்றனர்.

 கோமதி அம்பாள் மெட்ரிக்குலேசன் பள்ளியில் வைத்து வகுப்புகள் நடத்துவதற்கு அதன் தலைமையாசிரியரும் எங்கள் குழுவைச் சேர்ந்த நண்பருமான ந.பழனிச்செல்வம் உதவி செய்வதோடு, அவரும் வகுப்புகள் எடுக்கிறார். இதுதவிர கணேசன், சங்கர், மாரியப்பன், உள்ளிட்ட நண்பர்களும் உதவுகின்றனர்'' என்றார்.

 தலைமையாசிரியர் ந.பழனிச்செல்வம் கூறியது:

 ""டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, குரூப் 4 தவிர ரயில்வே தேர்வுக்கும் வகுப்புகள் நடத்துகிறோம். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் தவிர வேறு எங்கும் இதுபோல இலவச வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. படிப்பதற்குத் தேவையான கையேடுகள், புத்தகங்கள், வினா-விடைகள் என நபர் ஒருவருக்கு ரூ.500 மதிப்பில் கல்வி உபகரணங்களை வழங்குகிறோம். கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் படித்து வருகின்றனர். அடுத்ததாக வங்கித் தேர்வு, ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் இலவசமாக வகுப்புகளை நடத்த எண்ணியுள்ளோம்'' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.