வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பொய் மெய்..

மகன் கௌதம், ரெஸ்டாரன்ட்காரரான அப்பா சுந்தரவதனத்துக்கும்

News image
Updated On :21 அக்டோபர் 2012, 12:52 pm

சாருகேசி

மகன் கௌதம், ரெஸ்டாரன்ட்காரரான அப்பா சுந்தரவதனத்துக்கும் பெண்கள் பத்திரிகை ஆசிரியை அம்மா நந்தினிக்கும் செல்லப் பையன். ஆனால் இருவரும் பிரிந்து தனித்தனியே வாழுகிறவர்கள். அப்பாவிடம் போகக்கூடாது என்று கண்டிப்புக் காட்டும் அம்மா. "அவள் என்ன சொல்வது?' என்று அலட்சியப்படுத்தும் அப்பா. இரண்டு பேருக்கும் இடையே சிக்கிக் கொண்ட கௌதமுக்கு, நடனப் போட்டியில் மாடர்ன் டான்சுக்கு முதல் பரிசு கிடைக்க, சுப்ரியாவுக்கு பரதநாட்டியத்தில் இரண்டாவது பரிசு கிடைக்கிறது. பரிசை ஏற்காத சுப்ரியாவின் வீட்டுக்குச் சென்று பரிசையும் மலர்க்கொத்தையும் கொடுக்கிறான் கௌதம். மோதலில் துவங்குகிறது காதல்.

தாயின் பத்திரிகையிலேயே சுப்ரியாவைப் பேட்டி எடுத்து மகன் கவர் ஸ்டோரி எழுதுகிறான். மகனுக்கு இன்னொரு பத்திரிகை நடத்தத் துணை செய்வதாக அம்மாவும், ரெஸ்டாரன்டை நடத்த வேண்டும் என்று அப்பாவும் திட்டமிடுகிறார்கள். இடையே, இணைந்து வாழாத தம்பதியின் பையனுக்குப் பேத்தியைத் திருமணம் செய்துகொடுக்க யோசிக்கிறார் நட்டுவனார் தாத்தா. அம்மாவையும் அப்பாவையும் சேர்த்து வைக்க கௌதம் முயன்று வெற்றி பெறுவது மீதிக் கதை. பெற்றோர் ஏன் பிரிந்து வாழ வேண்டும் என்பதற்குக் காரணம் சொல்லப்பட்டாலும், வலுவான காரணமாக இல்லாமல், வழவழா கொழகொழா காரணம் சொல்கிறார் நாடகாசிரியர்.

கதை எப்படியோ போகட்டும், நடிக்கிறவர்கள் ஒழுங்காக நடித்துவிட்டால் நாடகம் தப்பித்துக்கொண்டுவிடும் அல்லவா? அதுதான் "பொய்-மெய்' நாடகத்தில் மெய்யாக நடந்திருக்கிறது.

கோமலின் குழுவில் இருந்த பண்பட்ட நடிகர் ராஜ்மதன், அப்பா பாத்திரத்தை அனாயாசமாகச் செய்திருக்கிறார். பத்திரிகை ஆசிரியர் அம்மா நந்தினி (சுசித்ரா ரவி) கணவரை நேருக்கு நேர் சந்திக்கும் காட்சியை இயல்பாகக் கையாண்டிருக்கிறார். கதாநாயகன் கௌதம் பாத்திரத்தை ஏற்கக் கிடைத்த முதல் வாய்ப்பைக் கோட்டைவிட்டுவிடாமல், சூரஜ் கச்சிதமாக நடித்திருக்கிறார். சுப்ரியாவாக பிரீத்திக்கு அதிக வேலை இல்லாவிட்டாலும் குறை சொல்லும்படி இல்லை. தாத்தாவாக வரும் சந்துருவுக்கு நடிப்பு என்பது இயற்கையாகவே உடலில் ஊறியது. செயற்கையான வசனத்தைச் சொல்லும்போதுகூட அது இயற்கையாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்.

நிகழ்ச்சிகளை ஒழுங்காகத் தமிழில் தொகுத்து வழங்குவதில் கெட்டிக்காரரான சி.வி. சந்திரமோகன், நாடகம் என்று வரும்போது மட்டும் ஆங்கிலத்தை ஆரத் தழுவிக் கொள்கிறார். இந்த நாடகத்தின் வசனங்களில் அவர் ஆங்கிலத்தை வாரிக் கொட்டியிருப்பதைப் பார்த்தால், கூடிய விரைவில் முழுசாக ஓர் ஆங்கில நாடகமே எழுதி மேடை ஏற்றிவிடுவார் போல் தோன்றுகிறது.       

நாடக-இசை உலகின் நட்சத்திரங்களுக்குப் பொதுமக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் பி.எஸ். ராஜா இப்போது நல்ல கதாநாயகனைத் தந்திருக்கிறார். நல்ல நாடகம் தருவதற்குக் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.