மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காளை மாட்டுக்குக் கோவில்!

மதுரை மாவட்டத்தை சேர்ந்த அலங்காநல்லூர், பாலமேடு போன்ற ஊர்கள் ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டுக்கு பெயர் பெற்றவை. 

News image
Updated On :7 டிசம்பர் 2013, 10:26 am

சி.வ.சு.ஜெக​ஜோதி​

மதுரை மாவட்டத்தை சேர்ந்த அலங்காநல்லூர், பாலமேடு போன்ற ஊர்கள் ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டுக்கு பெயர் பெற்றவை. 

 இதே போல ராமநாதபுரம்,சிவகங்கை,விருதுநகர் பகுதிகளில் பல கிராமங்களில் இன்றும் கோவில் திருவிழாக்களின் போது நடந்து வரும் விழாக்களில் ஒன்று தான் எருதுகட்டு விழா. எண்ணெய் தடவிய கூர்மையான கொம்புகளை உடைய காளையை மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில் அவிழ்த்து விடுவார்கள். அதிக நீளமுள்ள வடக்கயிற்றின் ஒரு நுனியை காளையின் கழுத்திலும்,கயிற்றின் மற்றொரு நுனியை சற்று தூரத்தில் காளையின் உரிமையாளரும் கையில் வைத்திருப்பார்கள்.

காளைமாடு மேளச்சத்தத்துக்கும்,கூடியிருக்கும் கூட்டத்தையும் பார்த்தும் மிரண்டு ஓடும் போது அதை யார் சென்று அடக்குகிறார்கள் என்று பார்ப்பார்கள். இந்தக் காளைகளை ஒரு தனி நபரோ அல்லது பலரோ சேர்ந்தும் பிடித்து அடக்கலாம்.அவ்வாறு மிரண்டு ஓடும் காளைகளை பெரும்பாலும் யாரும் சட்டென்று பிடித்து விட முடியாது. நீண்ட நேரம் பிடிக்க முடியாமல் உள்ள காளைகளுக்கு விழாவை நடத்தும் கிராமத்தினர் சம்பந்தப்பட்ட காளை மாட்டின் உரிமையாளரை அழைத்து சன்மானம் வழங்கிக் கௌரவிப்பார்கள். இது இன்றும் தென்மாவட்டங்களில் பல கிராமங்களில் நடந்து வருகிறது.

இது போன்ற எருதுகட்டு விழாக்களில் ஊருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்ததுதான் ராமநாதபுரத்தில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள மூவலூர் கிராமத்தைச் சேர்ந்த காளை. அதற்கு இப்போது நினைவாலயம் அமைத்து வழிபாடுகள் செய்து வருகின்றனர். 

இக்கிராமத்தை சேர்ந்த முத்துச்சாமித் தேவர் என்பவரால் வளர்க்கப்பட்ட காளை தான் அது.  அக்கிராமத்துக்கு பெருமை சேர்த்த அந்தக் காளை கடந்த 1931 இல் உயிரிழந்தது. இதனை வளர்த்த முத்துச்சாமித் தேவர் 1968 இல் மறைந்துவிட இவரது இரண்டாவது பேரன் குண்டுமலைத்தேவர் என்பவர் தான் காளையின் நினைவாக 1992 இல் காளை மாட்டினை நல்லடக்கம் செய்த இடத்திலேயே நினைவாலயம் எழுப்பி கும்பாபிஷேகமும் நடத்தியிருக்கிறார்.

குண்டுமலைத் தேவரின் தம்பி தண்டலிடம் இதைப் பற்றிக் கேட்டோம்:

""எங்க தாத்தா முத்துச்சாமி தேவரு தான் காளையை வாங்கி வந்து வளர்த்தவரு. மூவலூரை சுத்தி இருக்கிற 18 பட்டி கிராமங்களுக்கும் காளையை எருதுகட்டுக்கு கூட்டிக்கிட்டு போவாரு.  எங்க மூவலூர் காளையை மட்டும் சட்டுன்னு புடிச்சுப்புட முடியாது. ரொம்ப நேரம் ஆகும். கொம்பும் ரொம்ப கூர்மை. அதிலே வழு,வழுன்னு எண்ணெயும் தடவியிருக்கும். கிட்ட வந்தால் முட்டிப்புடும். யாரும் பயந்துக்கிட்டு பக்கத்திலே போக மாட்டாங்க. மூவலூர் காளை எருதுகட்டுக்கு வருதுன்னு தெரிஞ்சாலே கோவில் திருவிழாவுக்கு வேடிக்கை பார்க்க ஜனங்களும் அதிகமா வரும். இதெல்லாம் நடந்தது 1920 கால கட்டங்களில் தான் நடந்துச்சு.

காளையை வளர்த்த எங்க தாத்தா முத்துச்சாமித் தேவர்  தனது அஞ்சு மகன்களுக்கு சொத்தைப் பிரிச்சு பாகப்பிரிவினை செய்யும் போது இந்த மாட்டைப் பராமரிக்கிறதுக்காக காளையையும் ஒரு மகனா நினைச்சு, அதுக்குன்னு ஒரு பத்தாயிரத்தையும் ஒதுக்குனாரு. 1931 இல் மாடு சுகமில்லாம செத்துப் போச்சு.

மாட்டை அடக்கம் செய்யும் போது அந்தக் காளையோட ரெண்டு கொம்புகளையும் பிரித்து எடுத்து உடலை மட்டும் புதைச்சுட்டோம். கொம்புகளை மட்டும் வீட்டில வச்சு சாமி கும்பிட்டுகிட்டு வந்தோம். 1968 இல்  முத்துச்சாமித்தேவர் இறந்துட்டாரு. ஆனா அவரு ஒதுக்கி வைத்திருந்த பத்தாயிரம் மட்டும் அப்படியே இருந்துச்சு. எங்க அண்ணன் குண்டுமலைத் தேவரு தான் அந்தப் பத்தாயிரத்தை வைச்சு 1962இல் (காளை இறந்து 31 வருடங்களுக்கு பிறகு) இந்தக் காளைக்கு ஒரு கோவில் கட்டினாரு.

 கும்பாபிஷேகத்துக்கு பக்கத்துல இருக்குற கிராமத்து ஜனமெல்லாம் வந்தாங்க. கரகாட்டம்,சிலம்பாட்டம்,ஒயிலாட்டமெல்லாம் வச்சிருந்தோம். காளை மாடு போலவே சிலை செஞ்சு,அதுல ஏற்கனவே பாதுகாத்து வச்சிருந்த கொம்புகளைப் பொருத்தி, சிலைக்கு வச்சு,வர்ணம் பூசி,மண்டபம் எழுப்பினோம். இன்னைக்கி அது ஒரு கோவிலா நிக்குது. இப்ப நீங்க பாத்துக்கிட்டு இருக்குறது அந்தக் காளையோட உண்மையான கொம்புகள்.

வருஷா வருஷம் மாட்டுப் பொங்கல் வரும் போது கோவிலைச் சுத்தம் பண்ணி, பெயிண்ட் அடிச்சு அபிஷேகம், பூஜையெல்லாம் செஞ்சுக்கிட்டு வர்றோம்.

தீபாவளி,கார்த்திகை மாதிரி பண்டிகை வரும் போதெல்லாம் காளையை குளிப்பாட்டி, கொம்புத்துணி கட்டி சாமியாவே கும்பிட்டு வர்றோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.