வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கண் மருத்துவமனை நூலுக்கு அமிதாப் பச்சன் அறிமுகம்!

சென்னை சங்கர நேத்ராலயா பற்றி அறியாதவர் அநேகமாக யாரும் இருக்க மாட்டார்கள்.  அமெரிக்காவில்

News image
Updated On :10 பிப்ரவரி 2013, 5:42 am

சாருகேசி

சென்னை சங்கர நேத்ராலயா பற்றி அறியாதவர் அநேகமாக யாரும் இருக்க மாட்டார்கள்.  அமெரிக்காவில் கண் மருத்துவக் கல்வி படித்துவிட்டு, சென்னை வந்து விஜயா மருத்துவ மனையில் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் தம் பணியைத் துவக்கினார். பின்னர் நுங்கம்பாக்கத்தில் இப்போது இருக்கும் பிரும்மாண்ட மருத்துவமனையைப் பலரின் நன்கொடை மூலம் கட்டி முடித்தார்.  இன்று சுமார் 1400 ஊழியர்களில், 82 பேர் கண் மருத்துவர்கள்.  ரெடினல் டிடாச்மென்ட் பிரிவில் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

சங்கர நேத்ராலயாவின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் சுவையாக எழுதி ஒரு நூலாக வெளியிட்ட நிகழ்ச்சி சென்ற வாரம் "சென்னை புத்தகச் சங்கம்' சார்பில் நடைபெற்றபோது, வாசகர்களின் சில கேள்விகளுக்கு டாக்டர் பத்ரிநாத் பதில் அளித்தார்.  நிகழ்ச்சிக்கு முன், ஒரு குறும்படம் திரையிட்டார்கள். அதில் அமிதாப்பச்சன் தமக்கே உரிய குரலில் அந்த நூலின் சிறப்பைப் பற்றி சுருக்கமாக விவரித்தார். (இது நல்ல உத்தி. இதைத் தமிழ்ப் பதிப்பாளர்கள் யாரேனும் செய்ய முன்வருவார்களா என்பது தெரியவில்லை.)

"ஆயிரக்கணக்கான கண் நோயாளிகள் உங்கள் மருத்துவ மனைக்கு தினமும் வந்து போகிறார்கள். வாசல் காவலாளி முதல் தலைமை மருத்துவர் வரை உங்களால் எப்படி எல்லோரையும் சிரித்த முகத்துடன் வரவேற்று சிகிச்சை அளிக்க முடிகிறது? அதற்கு எந்தவிதப் பயிற்சி அளிக்கிறீர்கள்?' என்று நிகழ்ச்சியில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

பத்ரிநாத் சிறிதும் யோசிக்கவில்லை. ""நாங்கள் அதற்காக எந்தவிதப் பயிற்சியும் அளிக்காததுதான் அதற்குக் காரணம்'' என்றார், பலத்த கைதட்டலுக்கு இடையே.

"காஞ்சிப் பெரியவருக்கு நீங்கள் "காட்ராக்ட்' அறுவைச் சிகிச்சை செய்தீர்கள். அவர் உங்கள் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்தாரா?' என்பது இன்னொருவர் எழுப்பிய கேள்வி.

நான் அவருக்குக் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்தேன் என்பது உண்மை. அதைத் தொடர்ந்து சந்திர கிரஹணம் வந்தது. சாதாரணமாக சந்நியாசிகள் அது முடிந்து ஸ்நானம் செய்ய வேண்டும். சுவாமிகள் அப்படிச் செய்தால் அறுவைச் சிகிச்சை செய்த கண் நிச்சயம் பாதிக்கப்படும். அதனால் நான் அவரிடம் என் கோரிக்கையை எடுத்துவைத்தேன். சுவாமிகள் "சரி' என்று ஒப்புக்கொண்டார்.  ஆனால் அவருக்கு நெருக்கமானவர்கள், "சுவாமிகள் அன்று குளிக்காமல் இருக்கலாமா?' என்ற கேள்வியை எழுப்பினார்கள். 

""என் கண்களுக்கு சிகிச்சை அளித்து குணமாக ஆபரேஷன் செய்திருக்கிறார் டாக்டர் பத்ரிநாத். நமக்கு ஓர் அனுஷ்டான தர்மம் இருப்பது போல அவருக்கு ஒரு "மெடிகல் தர்மம்' இருக்கிறது. அவர் பேச்சை மீறி நான் குளித்தால், என் கண்கள் பாதிக்கப்படும். பார்வை போய்விடும். அதனால் எனக்குப் பரவாயில்லை. ஆனால் "டாக்டர் பத்ரிநாத், சுவாமிக்கு ஆபரேஷன் செய்தார். அவருக்குக் கண் பார்வை போய்விட்டது' என்ற அவப்பெயர் அல்லவா அவருக்கு வந்து சேரும்? அப்புறம் அவரிடம் யார் மருத்துவத்துக்குப் போவார்கள்?  அதனால் நான் அவருடைய தர்மத்தை அனுசரித்து சந்திரகிரஹண ஸ்நானம் செய்யாமல் தவிர்த்தேன்'' என்று காஞ்சிப் பெரியவர் சொன்னதை, நினைவுகூர்ந்தார் பத்ரிநாத்.

  புகழ் பெற்ற சட்ட மேதை நானி பல்கிவாலா சங்கர நேத்ராலயாவுக்கு ஏராளமான நன்கொடை அளித்து உதவியதை நூலில் குறிப்பிட்டிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் சங்கர நேத்ராலயாவின் ஆதரவாளர்.  ஏவிஎம் சரவணன், இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் முதலியோர் இந்த மருத்துவமனையின் வளர்ச்சியில் ஆர்வம் மிக்கவர்கள்.

நூலின் முக்கியமான பகுதிகளை, புகழ் பெற்ற ஆங்கில நாடக மேடை நடிகர் பி.சி. ராமகிருஷ்ணா தமக்கே உரிய குரலில் வாசித்தார்.  கி.வா.ஜ. அவர்களின் மகள் உமா பாலசுப்பிரமணியன் ஆங்கிலத்தில் தமது அறிமுக உரையை வழங்கினார்.  நூலை எழுதிய ரங்கநாதன், நொய்டாவில் தமது பக்கத்து வீட்டுக்காரராக இருந்தார் என்ற செய்தியையும் வெளியிட்டார்.  

நூலின் விற்பனைத் தொகை முழுதும் சங்கர நேத்ராலயாவின் தர்ம சிகிச்சை செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றார் டாக்டர் பத்ரிநாத்.

"டாக்டர் பத்ரிநாத், சுவாமிக்கு ஆபரேஷன் செய்தார். அவருக்குக் கண் பார்வை போய்விட்டது' என்ற அவப்பெயர் அல்லவா அவருக்கு வந்து சேரும்? அப்புறம் அவரிடம் யார் மருத்துவத்துக்குப் போவார்கள்?  அதனால் நான் அவருடைய தர்மத்தை அனுசரித்து சந்திரகிரஹண ஸ்நானம் செய்யாமல் தவிர்த்தேன்''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.