புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமா?

பிளஸ் டூ தேர்வு வரும் மார்ச் 1 இல் ஆரம்பம். இரவும் பகலும் கண் விழித்து, எப்போது தூங்குகிறார்கள், எப்போது விழித்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாதபடி உங்கள் வீட்டில் ஒரு பிளஸ் டூ மாணவன் அல்லது மாணவி படித்துக் கொண்டிருக்கக் கூடும்.

News image
Updated On :15 பிப்ரவரி 2013, 5:08 am

ந. ஜீவா

பிளஸ் டூ தேர்வு வரும் மார்ச் 1 இல் ஆரம்பம். இரவும் பகலும் கண் விழித்து, எப்போது தூங்குகிறார்கள், எப்போது விழித்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாதபடி உங்கள் வீட்டில் ஒரு பிளஸ் டூ மாணவன் அல்லது மாணவி படித்துக் கொண்டிருக்கக் கூடும். இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும் என்ற வெறியோடு மாணவர்கள் படித்துக் கொண்டிருக்க, எடுக்காவிட்டால்

அவ்வளவுதான் என்பது போல பெற்றோர்கள் முறைத்திருக்க...

இந்த வாழ்க்கைப் பந்தயத்தில் எப்படி வெல்வது? என்று சில

மாணவர்கள் பயந்து நிற்கிறார்கள்.

""அப்படியெல்லாம் தேர்வைக் கண்டு மாணவர்கள் பயப்படத் தேவையில்லை'' என்கிறார் சித்தாரா விக்ரம்.

கோவையிலும், ஈரோட்டிலும் சிஎஸ் அகாதெமி என்ற பெயரில் நடந்துவரும் கல்விக் கூடங்களின் இயக்குநரான அவர், ஒரு மனநல

மருத்துவரும் கூட.

""தேர்வுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கின்றன. பெரும்பாலான மாணவர்கள் பதற்றத்துடன் படித்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப் படிக்கக் கூடாது. பதற்றத்துடன் படிக்கும்போது பாடங்களைச் சரியாக உள் வாங்க முடியாது. எனவே நம்மால் முடிந்தவரை முயற்சி செய்வோம். முயற்சிக்குத் தகுந்த மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு படிக்க வேண்டும்.

தேர்வு நேரத்தில் அவசர அவசரமாகப் படித்தால் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாது. கல்வியாண்டின் ஆரம்பத்தில் இருந்தே மாணவர்கள் மிகவும் திட்டமிட்டுப் படிக்க வேண்டும். அதற்குப் பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும். சில பெற்றோர்கள், பிளஸ் டூ படிக்கும் மாணவனை ஒரு திருமணத்துக்காக வெளியூருக்கு அழைத்துச் சென்று, கல்வியாண்டின் ஆரம்பத்தில் அவனுடைய மூன்று நாட்களை வீணாக்கிவிடுவார்கள். அப்படி வீணாக்கிய நாட்கள் திரும்பவும் வரப் போவதில்லை.

எனவே ஆரம்பத்திலிருந்தே படிப்பதற்காக ஒரு கால அட்டவணையைத் தயாரித்துக் கொண்டு திட்டமிட்டுப் படித்திருந்தால், தேர்வு நேரத்தில் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் இப்போதும் கூட, ஒன்றும் கெட்டுப் போகவில்லை. இப்போதும் திட்டமிடலாம்.

தேர்வுக்கு எவ்வளவு நாட்கள் உள்ளன? எந்த எந்தப் பாடங்களை நன்றாகப் படித்திருக்கிறோம்? எவற்றைப் படிக்கவில்லை? என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, இருக்கிற நாட்களுக்குள் அடங்கும்படி ஒரு கால அட்டவணையை மாணவர்கள் உடனே தயாரித்துக் கொண்டு, திட்டமிட்டுப் படித்தால், அதிக மதிப்பெண்களை எடுக்க முடியும்.

அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்றால் பாடங்களை நன்றாக மனப்பாடம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. அப்படி மனப்பாடம் செய்யும்போது பாடங்களைப் புரியாமல் படித்திருந்தால், தேர்வில் பதில் எழுதும்போது ஏதோ ஓர் இடத்தில் மறந்துபோனால் அந்தக் கேள்விக்கான பதில் முழுவதும் மறந்துபோய்விடும். அதுமட்டுமல்ல, அந்தக் கேள்விக்கான பதிலைச் சரியாக எழுத முடியவில்லை என்பதால் ஏற்படும் டென்ஷனில் அதற்குப் பிறகு எழுதும் நன்றாகத் தெரிந்த கேள்விக்கான பதில்களும் மறந்து போய்விடும். இது அந்தத் தேர்வை மட்டுமல்ல, அடுத்த தேர்வையும் பாதிக்கும். எனவே படித்த பாடங்களை மறந்துவிடாமல் இருக்க, பாடங்களை முதலில் புரிந்து, அதன் பின்பு மனப்பாடம் செய்ய வேண்டும்.

அடுத்து, ஒரு பதிலில் இடம் பெற்றுள்ள பாயிண்ட்களை ஒரு பார்வையிலேயே நினைவுபடுத்தும் விதமாக சிறுசிறு தொடர்ச்சியான குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். அந்தச் சிறு குறிப்புகளைப் பார்த்த உடனேயே முழுப் பதிலும் நினைவுக்கு வரும்படி அதைத் தயாரிக்க வேண்டும். இந்தக் குறிப்புகளை மாணவர்கள் அவர்களுடைய வசதிக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம்.

இப்போது நிறையப் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து மருத்துவம் படித்து டாக்டராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காகவே மாணவர்களிடம் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று எப்போது பார்த்தாலும் வற்புறுத்துகிறார்கள். அதுபோல பள்ளியிலும் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களைக் கசக்கிப் பிழிகிறார்கள்.

மருத்துவம் படிப்பதற்காக அதிக மதிப்பெண்கள் எடுக்க மாணவர்கள் முயற்சி செய்யட்டும். ஒருவேளை மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லை என்றால் வேறு என்ன படிக்க வேண்டும் என்பதையும் மாணவர்களும் பெற்றோரும் யோசித்து வைத்திருக்க வேண்டும். மருத்துவம் படிப்பது மட்டுமே வாழ்க்கை அல்ல. அப்படி வேறு படிப்புகளைப் பற்றியும் முன்னமே திட்டமிட்டு இருந்தால், மாணவர்களுக்கும் டென்ஷனில்லை. பெற்றோருக்கும் டென்ஷனில்லை. முடிந்தவரை மாணவர்கள் முயற்சி செய்யட்டும் என்று பெற்றோர் டென்ஷனாகமாட்டார்கள்.

இதற்கு மாணவர்கள் பிளஸ் டூ முடித்தவுடன் என்னவெல்லாம் படிக்கலாம் என்பதற்கான ஆலோசனை நிகழ்ச்சிகளை பள்ளிகளே நடத்தலாம். அதனால் பெற்றோர்கள், மாணவர்களின் மன அழுத்தத்தைப் பெருமளவில் குறைக்க முடியும்.

தேர்வு நெருங்க நெருங்க மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வே வாழ்க்கையில்லை. தேர்வு வாழ்க்கையில் ஒரு படி. அவ்வளவுதான். எனவே தேர்வு பற்றிய பயம் சிறிதும் இருக்கக் கூடாது.

எல்லாவற்றையும்விட முக்கியமானது. தேர்வு எழுதப் போகும் மாணவர்கள் உடல் நலனில் அக்கறையுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியம் தரும் உணவுகளை உண்பது அவசியம். யோகாசனம், பிராணாயமம் போன்றவற்றை தேர்வு நடக்கும் நாளில் கூட, ஓர் இருபது நிமிடம் செய்தால் போதும், மனம் அமைதியாகிவிடும். உடல் புத்துணர்ச்சி பெற்றுவிடும். மனம் அமைதியாக இருந்தால் படிப்பது நன்றாக மனதில் பதியும். தேர்வை நன்றாக எழுத முடியும். நிறைய மதிப்பெண்களை அள்ள முடியும். ஆல் தி பெஸ்ட்! '' என்கிறார் சித்தாரா விக்ரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.