"டமரு' - இசைக் கருவிகளின் சங்கமம்!
நடராஜப் பெருமானின் ஊழித்தாண்டவத்திலிருந்து அண்ட சராசரங்கள் உருவாகின என்பது நம்பிக்கை. அந்த ஊழித் தாண்டவத்தின்போது அவரது கையிலிருக்கும் உடுக்கையிலிருந்து எழும் ஒலியான "க்ளங்', "பூம்' தான் அண்ட சராசரங்களின் ஆதார ஸ்ருதி என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிதான் "டமரு' அல்லது தமிழில் சொல்வதாக இருந்தால் "உடுக்கை'!
முப்பதுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகள், முப்பது இசைக் கலைஞர்கள். இவர்களை ஒரே மேடையில் இசைக்க வைத்து பிரம்மாண்டமான இசைச் சங்கமத்தை வழங்கினார்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த "நுண்கலைகளின் ஆலயம்' (பங்ம்ல்ப்ங் ர்ச் ஊண்ய்ங் அழ்ற்ள்) என்கின்ற அமைப்பினர்.
1982-இல் சுவாமி சாந்தானந்த் சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட இந்த இசைக் குழுவின் குறிக்கோள் "கலை, அதன்மீதான காதலுக்காக மட்டும்' என்பதுதான். இசைக் கலையின்பால் கொண்ட அளப்பரிய காதலால் பல்வேறு இசைக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து வழங்கும் இசைச் சங்கமம்தான் "டமரு'!
"டமரு' அல்லது சர்வதேச இசையின் நாடித்துடிப்பு என்பது "உடுக்கை' என்கிற வாத்தியத்திலிருந்து எழும் நாதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட உலகப் பொது இசை என்று கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில் இந்திய வாத்தியக் கருவிகள் மட்டுமல்லாமல், மேலை நாட்டு, சீன, திபேத்திய, ஆப்பிரிக்க வாத்தியங்களும் பங்கு பெற்றதால்தான் "டமரு' உண்மையிலேயே சர்வதேச இசையின் சங்கமமாகப் பரிணாமம் எடுக்கிறது.
முப்பது கலைஞர்கள், முப்பதுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகள், தாள வாத்தியக் கருவிகள் மட்டுமல்லாமல், தந்தி வாத்தியக் கருவிகளும், காற்று வாத்தியக் கருவிகளும் டமருவின் தாள லயத்துடன் கலந்த இசைப் பிரவாகம்தான் இந்த நிகழ்ச்சி.
அடிப்படையில் தாள வாத்திய நிகழ்ச்சிதான் என்றாலும், வாய்ப்பாட்டும் ஏனைய இசைக் கருவிகளின் பங்களிப்பும் லயத்துடன் ஸ்ருதி சேர்ந்து, உடலும் உயிரும் இரண்டறக் கலந்து ஜீவாத்மா - பரமாத்மா தத்துவத்தின் உயர்ச்சியை வெளிச்சம் போடுகின்றன. தபேலா, மிருதங்கம் போன்ற இந்தியத் தாள வாத்தியக் கருவிகளுடன் தொடங்கும் "டமரு' நிகழ்ச்சியில், ஆப்பிரிக்கத் தாள வாத்தியங்களான டுண்டுண், ஜெம்பே, திஜிரிடோப்ளோர் போன்றவையும், செல்லோ, தைக்கோ போன்ற சீனத் தாள வாத்தியங்களும் லயத்தில் பிசிறு தட்டாமல் இரண்டறக் கலந்து புதியதொரு ஒலிப் பிரவாகத்தை உருவாக்குகின்றன.
இந்திய தாள வாத்திய அடிப்படையிலிருந்து ஆப்பிரிக்க இசைக்கு மெல்ல மெல்ல நகர்ந்து மீண்டும் இந்திய இசைக்கே திரும்பும்போது ஏற்படும் லய விந்நியாசம் ஆச்சரியமான தாள வேறுபாடுகளை வெளிக்கொணர்கிறது.
மேலைநாட்டு இசையிற்பாற்பட்ட டிரம்ஸ், பியானோ, சிந்தசைசர், செல்லோ, சீன வாத்தியங்களான தைக்கோ, டங்கா, இந்திய தாள வாத்தியங்களான மிருதங்கம், கஞ்சீரா, கடம், தபேலா, பக்வாஜ் உள்ளிட்ட ஏனைய இந்தியத் தாளவாத்தியக் கருவிகள், ஆப்பிரிக்க வாத்தியங்கள், இவையெல்லாம் போதாதென்று, சிதார், சாரங்கி, சரோட், பாசூரி, புல்லாங்குழல், வயலின், வீணை என எண்ணிலடங்காத வாத்தியங்களுடன் இசைக் கலைஞர்கள் மேடையை இசை அருவியாக்கிக் காட்டினார்கள்.
"டமரு' இசை நிகழ்ச்சி உடுக்கை ஒலியுடன் தாள லயத்துடன் உலகம் உருவான ஊழிக்கூத்தை நினைவுபடுத்தும் ஒலியுடன் தொடங்கியது. தொடர்ந்து "டமருவின் ஆன்மா' என்கிற இரண்டாவது உருப்படி.
கலைஞர்களுக்கும் வாத்தியத்திற்கும் இடையே உள்ள நேசத்தை, காதலை வெளிப்படுத்தும் இந்த உருப்படியில், வாத்தியம் கலைஞருடன் பேசுகிறது. அவரது விரலசைப்புக்கும், ஸ்பரிசத்துக்கும் தகுந்தாற்போல மகிழ்ச்சியையும், துக்கத்தையும் சிணுங்கலையும் வெளிப்படுத்தும் வாத்தியக் கருவிகளின் ஒலிகள் காதலனுக்கும் காதலிக்கும் இடையே உள்ள சரச விளையாட்டுக்களின் கிளுகிளுப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்துகின்றன.
எப்படி உடுக்கை என்கிற டமரு, டோலக், மிருதங்கம், தபேலா போன்ற கருவிகளாகப் பரிணாமம் எடுத்தது என்பதை விளக்கியது மூன்றாவது உருப்படி. "தாண்டவம்' என்கிற நான்காவது உருப்படி ஆடல்வல்லான் ஒரு யுகத்திலிருந்து இன்னொரு யுகத்திற்கான மாற்றத்தின்போது ஆடும் தாண்டவத்தின் வெளிப்பாட்டைக் கற்பனை செய்கிறது.
தொடர்ந்து, ஒவ்வொரு ரசிகனின் இயத் துடிப்பிலும், ரத்த ஓட்டத்திலும் கலந்திருக்கும் தாள லயத்தை "பம் பம் போல் போல்' என்று சொல்லச் சொல்ல எடுத்துச் சொல்ல, அத்தனை இசைக் கருவிகளையும் வாய்ப்பாட்டுடன் இணைந்து இசைச் சங்கமம் ஏற்படுத்தி நிகழ்ச்சியை நிறைவு
செய்கிறார்கள்.
சென்னை ஸ்ரீகிருஷ்ணகான சபாவின் யக்ஞராமன் விழாவின் பகுதியாக நடைபெற்ற "டமரு' நிகழ்ச்சி சென்னைக்குத்தான் புதிதே தவிர, உலகின் பல்வேறு பகுதி ரசிகர்களின் அமோக வரவேற்பை ஏற்கெனவே பெற்றிருக்கிறது.
சிங்கப்பூர் "நுண்கலைகளின் ஆலயம்' அமைப்பால் 2009-இல் முதலில் ஆரம்பிக்கப்பட்ட "டமரு' நிகழ்ச்சி, மலேசியா, ஆஸ்திரேலியா என்று பல நாடுகளில் ரசிகர்களை மகிழ்வித்துவிட்டு இப்போது இந்தியாவில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இசை என்பது இனத்தையும் தேசத்தையும் கடந்தது என்பதையும், எல்லாவித வாத்தியக் கருவிகளிலும் எல்லாவித இசைகளையும் வெளிக்கொணர முடியும் என்பதையும் நிரூபிக்கிறது "டமரு' நிகழ்ச்சி.
கண்கொள்ளாக் காட்சி; மயங்க வைத்த இசை; எல்லாவற்றையும்விட, ஆன்மாவின் ராகம். இப்படியெல்லாம் எண்ணத் தோன்றுகிறது சிங்கப்பூர் "நுண்கலைகளின் ஆலயம்' அமைப்பினர் நடத்திய "டமரு' நிகழ்ச்சி. "இசை கேட்டால் புவி அசைந்தாடும்' என்பார்கள். "டமரு' நிகழ்ச்சியைக் கேட்டவர்கள் அசைந்தார்கள் என்பதைவிட அந்த இசையின் பிரவாகத்தில் கரைந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
சிறப்பு நிருபர்: ஜுன்ஜுன்
படங்கள்: யோகா,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
