தேன் என்றால் நமக்குத் தெரிந்தது ஒரு வகைதான். மதுரையைச் சேர்ந்த ஜோசப்பின் செல்வராஜ் இஞ்சித் தேன், பூண்டுத் தேன், நெல்லிக்காய் தேன், அத்திப் பழத் தேன் என்று நாம் இதுவரை கேள்விப்படாத பல தேன் வகைகளைப் பற்றிச் சொல்கிறார். அவருடைய "விபிஸ் இயற்கை தேனீ வளர்ப்புப் பண்ணை'களில் தயாராகும் தேனை இப்படி பல வகைகளாக மாற்றி தமிழகம் முழுக்க, ஏன் சிங்கப்பூருக்கும் கூட விற்பனைக்காக அனுப்புகிறார். இத்தனைக்கும் அவர் படித்தது எம்.ஏ. வரலாறு. எப்படி வந்தார் தேனீ வளர்ப்புக்குள்? அவரே சொல்கிறார்:
""எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி. திருமணமானதும் மதுரைக்கு வந்துவிட்டேன். வேலைக்குப் போகாமல் ஹவுஸ் வொய்ஃபாக காலம் தள்ளிக் கொண்டிருந்தேன். குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்தவுடன் குடும்பத்துக்குப் பயன்படும் வகையில் ஏதாவது தொழில் செய்யலாம் என்ற எண்ணம் வந்தது. தேனீ வளர்ப்புப் பயிற்சி தருவதாக வேளாண்மைத் துறையினர் விளம்பரம் செய்திருந்தார்கள். அதைப் பார்த்துவிட்டு தேனீ வளர்ப்புப் பயிற்சி பெற்றேன்.
2006 இல் முதன் முதலாக எனது சொந்த ஊரான முத்துப்பட்டியில் பத்து பெட்டிகளை வைத்து தேனீக்களை வளர்க்க ஆரம்பித்தேன். அவற்றில் இருந்து கிடைத்த தேனை மதுரையில் உள்ள கடைகளில் விற்பனை செய்து கொண்டிருந்தேன். அதில் பெரிய அளவுக்கு வருவாய் இல்லை என்றாலும் ஓர் ஈடுபாட்டுடன் உழைத்து வந்தேன்.
இதைப் பற்றித் தெரிந்து கொண்ட தோட்டக் கலைத்துறையினர், பிறருக்குத் தேனீ வளர்ப்புப் பயிற்சி அளிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள்.
62 தேனீ வளர்ப்புப் பெட்டிகள் தயாரித்து அவற்றைப் பதினைந்து பேருக்குக் கொடுத்தேன். அவர்களுக்குத் தேனீ வளர்ப்பதற்கான பயிற்சிகளையும் கொடுத்தேன். அதற்குப் பிறகு, வேறு மாவட்டங்களிலும் இதுபோல தேனீ வளர்ப்பதற்குப் பயிற்சி தரும் திட்டம் இருக்கிறது என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டேன். நானே பல அதிகாரிகளை அணுகிப் பேசி, பலருக்கும் தேனீ வளர்ப்புப் பயிற்சி தர அனுமதி பெற்று பயிற்சி தந்தேன்.
தேனீ வளர்ப்பின் பல நுட்பங்கள் எனக்குப் பிடிபட ஆரம்பித்தன. தேன் என்று நாம் பொதுவாகச் சொன்னாலும், தேனின் நிறம், மணம், சுவை எல்லாமே வேறுபட்டு இருப்பதைத் தெரிந்து கொண்டேன். எந்தப் பூவிலிருந்து தேனீக்கள் தேனை எடுக்கின்றனவோ, அதற்கேற்ப அதன் நிறம், மணம், சுவை எல்லாம் ஏற்படுகின்றன.
நாவல் மரத்துப் பூக்களில் இருந்து தேனீக்கள் எடுக்கும் தேனில் சிறிது கசப்புச் சுவை இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்தத் தேனைப் பயன்படுத்துவது நல்லது.
இதுபோல வேம்புத்தேன், முருங்கைத் தேன் என முப்பதுக்கும் மேற்பட்ட தேன் வகைகள் உள்ளன.
ஜனவரி மாதத்தில் கிடைக்கின்ற தேன் தேங்காய் எண்ணெய் போன்ற வண்ணத்தில் இருக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இது கொஞ்சம் டார்க் ஆகும். மே மாதத்தில்தான் பழுப்பு நிறமான தேன் கிடைக்கும்.
இதுமட்டுமல்லாமல், பக்குவம் செய்யப்பட்ட சில பொருட்களைத் தேனில் சேர்த்து பலவிதமான தேன்களை நானே உருவாக்க ஆரம்பித்தேன். அதற்கும் ஒரு தேவை இருந்தது. நான் தயாரிக்கிற தேன் அதிக அளவில் விற்பனை ஆகாமல் கடைகளில் தேங்கிக் கிடந்தது. தேனின் விற்பனையை அதிகரிக்க, பக்குவம் செய்யப்பட்ட நெல்லிக்காயைத் தேனில் கலந்து நெல்லிக்காய்த் தேன் தயாரித்தேன். இதுபோல அத்திப் பழத்தேன், மாம்பழத் தேன், பலாப் பழத்தேன், பாதாம், பிஸ்தா தேன், முந்திரித் தேன் என்று நிறையத் தேன் வகைகளை உருவாக்கி விற்பனை செய்தேன். இதனால் தேன் அதிக அளவில் விற்பனை ஆனது. இப்போது 32 இடங்களில் எனது "விபிஸ் இயற்கை தேனீ வளர்ப்புப் பண்ணைகள்' செயல்படுகின்றன. சுமார் 3 ஆயிரம் தேனீ வளர்ப்புப் பெட்டிகளில் தேனீக்கள் வளர்கின்றன.
என்னைப் போலவே பலரும் தேனீ வளர்ப்புப் பண்ணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக, மாதத்தில் ஒருநாள் தேனீ வளர்ப்புப் பயிற்சியை எந்தக் கட்டணமும் வாங்காமல் அளித்து வருகிறேன். இதுவரை சுமார் 50 ஆயிரம் பேருக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறேன். என்னுடைய பணியைப் பாராட்டி சென்ற ஆண்டு ஜான்கி தேவி பஜாஜ் புரஸ்கார் விருது கொடுத்தார்கள்'' என்கிறார் இனிப்பாக ஜோஸப்பின் செல்வராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!

மதுரை கள்ளழகர் எழுந்தருளல்! அநகாரிக செயல்களில் ஈடுபடுவோர் உடனடி கைது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


