கலையழகு சொட்டும் கைவினைப் பொருட்கள்!

கோவையை அடுத்துள்ள ஈஷா மையத்தில் இருபத்தொரு மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநிலங்களுக்கே உரித்தான கைவினைக் கலைஞர்களின்
கலையழகு சொட்டும் கைவினைப் பொருட்கள்!
Updated on
2 min read

கோவையை அடுத்துள்ள ஈஷா மையத்தில் இருபத்தொரு மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநிலங்களுக்கே உரித்தான கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளையும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
 கைவினைக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை விற்பனை செய்வது ஒருபுறம் இருக்கட்டும். பயிற்சி பெற விரும்புபவர்களுக்குப் பயிற்சிப் பட்டறையும் நடத்துகிறார்கள் என்பதுதான் இன்னும் சிறப்பான செய்தி. அதிலும் காதி, கைத்தறி தவிர எம்ப்ராய்டரிப் பொருட்கள் ஏராளம். குஜராத்தின் கட்ச் மாவட்டக் கைவினைப் பொருட்களில் ஒரு தனித்துவம் தெரியும். நாட்டின் நுண்கலை சார்ந்த கலாசாரத்தை மட்டும் எடுத்துக்காட்டினால் போதுமா? அதனால்தான் கைவினைப் பொருட்களின் கண்கவர் அழகையும் பார்வையாளர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வழியாக இந்தக் கலையின் கைவண்ண விழா.தினசரி நடக்கும் இசை-நாட்டிய நிகழ்ச்சி அரங்குக்கு வெளியே தனித் தனியாகக் கொட்டகை போடப்பட்டு, எல்லாரும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
 ""காணாமல் போய்க்கொண்டிருக்கும் கைவினைக் கலைகள் சிலவற்றையாவது மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள்'' என்கிறார்கள், ஈஷா அமைப்பினர். கைத்தறி நெசவுகள் தவிர, பட்டுத் துகில்களும், பாரம்பரிய அச்சுக் கலையான பிளாக் பிரின்டிங் மற்றும் எம்பிராய்டரி துணி வகைகளும், மூங்கில் மற்றும் இயற்கை இழையால் உருவான வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களும் மாநிலம் மாநிலமாக இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால் அவற்றின் வண்ணங்களின் வீச்சு நம்மை பிரமிக்க
 வைக்கிறது.
 ""ஒரு துணி நெய்யப்பட்டாலும், உணவு சமைக்கப்பட்டாலும் அதனைக் கைகளால் செய்யும்போது, அவற்றுக்கு ஒரு தனி குணம் தெரியும்'' என்பாராம் சத்குரு. அது நிச்சயம் இந்தக் கலை வடிவங்களில் தெரிகிறது என்பதுதான் உண்மை. காதி ஜாம்தானி மற்றும் பகல்புரி பட்டு, கைத்தறி அம்சங்கள் அஜ்ரக் பிளாக் பிரிண்டிங், சுஜானி எம்பிராய்டரி, கட்ச் தோல் வேலைப்பாடுகள், சாஞ்சி காகித வெட்டுக்கலை, மணிப்புரி மண்பாண்டம் மற்றும் டர்ரி வகைகள் என்று ஒவ்வொரு பகுதியிலும்
 வண்ணத்தால் அசத்தும் வேலைப்பாடு.
 நமக்குப் பழக்கம் காஞ்சிப் பட்டுத்தான். ஆனால் அதற்கு இணையாக இருக்கிறது டஸர் பட்டு. இது உருவாகும் இடமான பகல்புரியை நினைவுபடுத்துகிற மாதிரி பகல்புரி பட்டு என்றே அழைக்கப்படுகிறது. ""பீகாரின் கிராமப்புறப் பகுதிகள் மட்டுமல்லாது, ஜார்கண்ட் மாநில கிராமப்புறப்பகுதிகளிலும் இந்த வகைப் பட்டு நெசவு மேற்கொள்ளப்படுகிறது. அந்த கிராமத்துப் பெண்களுக்கு இதுதான்
 பிழைப்புக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. இதில் இன்னொரு சிறப்பு அம்சம் இருக்கிறது'' என்கிறார் இந்த நெசவாளி.
 ""இது வன்முறை இல்லா பட்டு சேகரிப்பு என்று சொல்ல வேண்டும். லார்வா புழுக்கள் பட்டுப் பூச்சியாக மாறி, கூட்டைவிட்டுப் பறந்த பின்னரே பட்டு நூல்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்தப் பட்டு நூல்கள் சால், அர்ஜுன், சாஜா ஆகிய மரங்களிலிருந்து பெறப்படுகின்றன. இவ்வகைப் பட்டு நூல்கள் தரம் மிகுந்த தங்கச் சரிகைகளாக மாறுகின்றன'' என்று விளக்கம் தருகிறார்.
 அச்சுக்கலை பயன்படுத்தித் தயாரிக்கப்படும் சங்கனேரி துணிகள் பிரசித்தமானவை. இவர்களைப் பொறுத்தவரை இது எளிமையான முறையாம். பெரும்பாலும் மலர்களும் செடி வகைகளுமே அச்சிடப்பட்டிருக்கும் சங்கனேரி துணிகள் தயாரிப்பவர்களுக்கு சிப்பாஸ் என்று பெயராம். அச்சுக்காக இவர்கள் நாடும் மரங்களின் பெயர்களே வித்தியாசமாக இருக்கின்றன. மா, தேக்கு தவிர சிசாம், குர்ஜான் மற்றும் அர்து மரங்களிலிருந்து இந்த அச்சுக்களைத் தயாரிக்கிறார்களாம். தாமிரம் மற்றும் பித்தளைக் கம்பிகளைக் கொண்டு நுட்பமான வடிவங்களைச் செய்து கொள்கிறார்கள். பிறகு இந்த அச்சுக்களை காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட வண்ணங்களின் மூலம் துணிகளில் வெகு கவனமாக அச்சிட்டு விடுகிறார்கள்.
 துணியின் தரம் மட்டுமல்ல. அச்சுக்களைத் தயாரிப்பது, வண்ணங்களைப் பயன்படுத்துவது, ஒவ்வோர் அச்சுக்கும் இடையே உள்ள இடைவெளியைத் தீர்மானிப்பது என்று அத்தனையையும் உருவாக்கும் கைவினைக்
 கலைஞரின் கைகளில்தான் இருக்கின்றன.
 சுரைக்காய் சட்டீஸ்கரில் ஒரு கைவினைப் பொருளுக்கு ஆதாரமாகக் கருதப்படுகிறது என்றால் நமக்கு ஆச்சரியமாயிருக்கும். இதற்கு தும்பா என்று பெயராம். இந்த மாநிலத்தின் பழங்குடியினர் இதை முதலில் நீர் பருக உபயோகித்தார்களாம். பின்னர் அதையே கலைப் பொருளாக மாற்றிவிட்டனர் உட்பகுதியை நீக்கிக் குடுவையை மட்டும் எடுத்து சூரிய ஒளியில் ஆறு மாதங்களுக்குக் காய வைத்துப் பழுப்பு நிறமாக்கி, பின்னர் ஈர மண்ணில் கழுவுவார்களாம். காயின் மேற்புறத்தில் முதலில் பென்சிலால் சித்திரம் வரைந்துகொண்டு பின்னர் அதை நெருப்பில் சுட்டு மெழுகெண்ணெய் வைத்து பாலீஷ் செய்வார்களாம். உணவுப் பாத்திரங்கள், மூடிகள், விளக்குக் குடைகள் என்று வரிசையாக இவை அணி
 வகுக்கின்றன.
 இவை எல்லாம் போக, இயற்கை வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் வரிசை இன்னொரு புறம் அத்தனையும்
 வண்ணக் களஞ்சியம்.
 பழைய கைவினைக் கலைகள் சிலவற்றை மீட்டெடுக்கும் பணிக்கும் இங்கே முக்கியத்துவம் இருக்கிறது. சட்டீஸ்கர் மாநில பஸ்தரில் இருந்து கலை உலகம் முழுக்க வியந்து பாராட்டப்படும் கலைவடிவங்கள். பூக்குவளை, பொம்மைகள், விலங்கின பொம்மைகள், போட்டோ பிரேம்கள், வித்தியாசமான கதவுப் பிடிகள் என்று கண்களைக் கவர்கின்றன. மணிப்புரி கல்தச்சு பாட்டரி வகைகள் மணிப்பூரின் லோரீ கிராமத்துக் கைவினைக்கலை. கான்ஸô
 தாமிரப் பாத்திரங்கள் ஒடிசாவின் சிறப்பு.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com