பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சீறாப் புராணத்தைப் பாடினால்  மழை நிச்சயம்!

78 வயதைத் தொட்டுவிட்ட குமரி அபுபக்கரின் சிதையாத, நடுக்கமற்ற குரலைக் கேட்பவர்கள்,

News image
Updated On :23 மார்ச் 2014, 3:06 am

சாருகேசி

78 வயதைத் தொட்டுவிட்ட குமரி அபுபக்கரின் சிதையாத, நடுக்கமற்ற குரலைக் கேட்பவர்கள், ஆச்சரியப்படுவார்கள்.
 கோம்பை அன்வரின் "யாதும்' குறும்படத்தில் இவர் காபி ராகத்திலும், பாகேஸ்ரீ ராகத்திலும் பாடுகிற வரிகளைக் கேட்டு, உண்மையிலேயே இவர் முறையாக யாரிடமோ கர்நாடக சங்கீதம் கற்றிருக்கிறார் என்பது தெரிந்து போயிற்று.
 கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குக் மலையாளம் கொஞ்சம் தெரிந்திருக்கும். அபுபக்கருக்கோ மலையாளம்தான் பேச்சு மொழியே அதுவும் மூன்றாவது வயதுவரைதான் பள்ளியில் படித்திருக்கிறார். ஆனால் இவர் தமிழில் பேசுவதையும் பாடுவதையும் கேட்டால், தமிழ் இவர் தாய்மொழி போலத் தெரியும். (சீறாப் புராணத்தைப் பாடுவதற்காக, மலையாள எழுத்தில் அந்தத் தமிழ்ப்பாடல்களை அப்படியே எழுதிவைத்துக்கொண்டாராம்)
 குமரி மாவட்டத்தில் எல்லைப் பகுதியான விளவங்கோடு இப்போது தமிழ் நாட்டைச் சேர்ந்தது. வளர்ந்த இடம் அருகேயுள்ள தெற்கு கொல்லங்கோடு. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பகுதி. இரண்டுக்கும் ஐந்து மைல் இடைவெளி. அதுதான் அபுபக்கரின் பூர்வீகம்.
 ""அங்கே உள்ள அம்மன் கோயில் ரொம்பப் பிரசித்தம். அங்கே நடக்கும் இசை நிகழ்ச்சிகளுக்கு எல்லா பாடகர்களும் வருவார்கள். அதைக் கேட்டுக் கேட்டு ரசிப்பேன். அப்படியே திருப்பிப் பாடுவேன் என்று சிரிக்கிறார் அபுபக்கர். அங்கே சிவன் கோயில் உண்டு. நாலு மணியிலிருந்தே பாட்டுப் போட ஆரம்பித்துவிடுவார்கள். விடிய விடிய அந்த சங்கீதத்தைக் கேட்பேன். இங்கேதான் கே.பி. சுந்தராம்பாள் கச்சேரியைக் கேட்டேன். நான் சின்னப் பையன். அதனால் தகப்பனார் என்னைத் தோளில் தூக்கி வைத்துக் கொள்வார். அப்படிக் கேட்டிருக்கிறேன் அவர் பாட்டை'' என்று பழைய சம்பவங்களை நினைவுகூர்கிறார். வீட்டுக்குத் தெரியாமல் சின்ன வயதிலிருந்தே யார் பாடினாலும் ஓடிப் போய்க் கேட்டுவிட்டு அதை அப்படியே அச்சாகப் பாடுவது இவருக்குக் கைவந்த கலையாக இருந்திருக்கிறது. கே.பி. சுந்தராம்பாள் இவர் ஊருக்கு வந்திருந்த போது பாடியதை அப்படியே நினைவு வைத்திருந்து "ஞானப் பழத்தைப் பிழிந்து' பாடலையும், "மயிலேறும் வடிவேலனே' பாடலையும் அபுபக்கர் பாடக் கேட்கையில், கே.பி.எஸ். எந்த எந்த இடத்தில் எல்லாம் குழைந்தும் இழைந்தும் பாடுகிறாரோ அப்பட்டமாக அப்படியே பாடிக் காண்பிக்கிறார்.
 சீறாப் புராணத்தில் நாலு வரி, எட்டு வரி என்றுதான் பாடல்கள் பதினேழு உண்டு. ""310 முறுசலிகள் எனப்படும் தீர்க்க தரிசிகளை வாழ்த்திப் பாடும் பாடல்கள் அவை. சீறா கீர்த்தனை என்று கோட்டார் சையது அபுபக்கர் புலவர் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற வடிவத்திலேயே எழுதியிருக்கிறார் என்பதைக் கேட்டபோது வியப்பாக இருந்தது. 1935இல் கொழும்புவில் வெளியானதாம். பத்துக் கீர்த்தனைகள் இருக்கின்றன'' என்று தெரிவித்தார் அபுபக்கர். சீறாப் புராணத்தைப் பாடினால் மழை நிச்சயம் என்று உறுதியாக நம்புகிறார் அபுபக்கர். கடந்த ஆகஸ்ட் மாதம் கம்பன் கழக விழாவில் இவருக்கு விருது கொடுத்து கௌரவித்தார்கள். ஒன்பதாம் தேதி சீறாப் புராணம் சொன்னார். பத்து, பதினொன்று இரண்டு நாட்களும் இரவில் மழை கொட்டியது. சதாசிவ பிரம்மேந்திரரின் புகழ் பெற்ற சாமா ராக கீர்த்தனையான மானச சஞ்சரரே பாடலை ஒட்டி, ஆதியின் தூதுவரே என்று ஒரு பாடலைப் பாடிக் காட்டினார் அபுபக்கர். முதலில் மானச சஞ்சரரே கிருதியை துளியும் சிதைக்காமல் பாடிக்காட்டிவிட்டுதான் தமிழ்ப்பாட்டைப் பாடினார். மாயாமாளவ கௌளை ராகத்தில் "ஆராய்ந்து பார் மனிதனே' பாடி அசத்தினார்.
 குமரி அபுபக்கர், நபிகள் நாயகம் ஜீவிய சரித்திரம் கதாகாலட்சேபம் செய்து கொண்டிருந்தார். (தமிழில்தான். ஆனால் மலையாள எழுத்தில் எழுதிவைத்துக் கொள்வாராம்) ""பத்தொன்பது வயதில் பாரசாலா பள்ளிக்கூடத்தில் அவார்டு வாங்கினேன். திருவட்டாறு நாராயணன் நாயர் தபேலா. வர்கீஸ் அண்ணாவி ஹார்மோனியம். பொன்னுசாமி கஞ்சிரா. பத்ரோஸ் கடம். ஹரிஹரன் கிளாரினெட். ஒரு தடவை ஆசான் சொல்லித் தந்தால் போதும். அப்படியே பாடிவிடுவேன்'' என்கிறார்
 அபுபக்கர்.
 நாகர்கோயிலில், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் அவர்களின் சீடர் கட்டிமங்கோடு அவர்களிடம் நான்கு வருடங்கள் சங்கீதம் கற்றார் அபுபக்கர். வீடு தேடி வந்து சொல்லிக்கொடுப்பாராம்.
 சென்னைக்கு வந்தது 1959இல். ஒரு காலத்தில் ஜேசுதாசுடன் கூடப் பாடியிருக்கிறாராம். கிறிஸ்தவ கோரஸ் பாட்டு அது. ரிக்கார்டிங் முடிந்ததும் மூன்று ரூபாய் கிடைத்ததாம்.
 கவியோகி சுத்தானந்த பாரதி முன்னாலும் அமர்ந்து பாடியிருக்கிறார் அபு பக்கர். சங்கீதத்தின் மீது இருந்த ஆசையால், எல்லா கச்சேரிகளையும் கேட்பாராம்.
 சென்னை புதுக்கல்லூரியில் 1972இல் ஒரு முறை பாடச் சொன்னார்களாம். திருப்புகழ் சந்தத்திலேயே அருணகிரிநாதர் முருகனைப் பாடியிருப்பதைப் போலவே காசீம் புலவர் நபிகள் நாயகம் மீது இயற்றிய பாடல்களைப் பாடியபோது பலத்த பாராட்டு. (முத்தைத் தரு பத்தித் திரு பாடல் வடிவில் அப்படியே நபிகள் நாயகம் மீது பாடியிருப்பதைப் பாடிக் காட்டினார் அபுபக்கர்.)
 ""என் மகன் அலி உசேன், சாவித்திரி அம்மாள் ஓரியன்டல் கல்லூரியில் 1990இல் சமஸ்கிருதத்தில் ஸ்டேட் பர்ஸ்ட். தெரியுமோ? அதற்குக் காரணம் என் நண்பர் கவி. கா.மு. ஷெரீஃப்பின் தூண்டுதல்தான்'' என்றார்.
 அபுபக்கருக்குப் பாட மட்டும்தான் தெரியும் என்று எண்ண வேண்டாம். ஐ.டி.பி.எல். நிறுவனத்தில் அறுவைச் சிகிச்சை செய்யும் கத்திகளைத் தயாரிப்பதிலும் அனுபவம் உண்டு.
 ""நீங்கள் எப்படி, தினசரி சாதகம் செய்வீர்களா?'' என்று கேட்ட போது, ""அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. நிகழ்ச்சிக்கு முன்னால் பாடிப் பார்த்துக்கொள்வேன், அவ்வளவுதான்'' என்றார் சிரித்துக்கொண்டே.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.