

* இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ளது "கமுதி கோட்டை'. 17-ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் சீமையை ஆண்ட சேதுபதி மன்னர் உடையத்தேவர், பிரான்ஸ் நாட்டு பொறியாளர் உதவியுடன் இக்கோட்டையை கட்டினார்.
* குண்டாற்றின் கரையில் இக்கோட்டை அமைந்துள்ளது. கோட்டை காரணமாக, இப்பகுதி "கோட்டை மேடு' என்று அழைக்கப்படுகிறது.
* பாஞ்சாலங்குறிச்சி போர் வீழ்ச்சிக்குப் பின் இக்கோட்டை ஆங்கிலேயர்கள் வசமானது, அதற்குமுன் இக்கோட்டையில் ஆயுதக் கிடங்குகள் அமைத்து போர் வீரர்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
* வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை சிலகாலம் இங்கு தங்கியிருந்து ஆங்கிலேயர்களுடன் போரிட்டதாகவும், மருதுபாண்டியர் சகோதரர்கள் இங்கு சில காலம் தங்கி விட்டுச் சென்றதாகவும் தகவல் உண்டு.
* இராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆங்கிலேயர் வரி கேட்பு கூட்டத்திற்கு பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து இராமநாதபுரம் செல்வதற்காக வந்த போது இங்கு வீரபாண்டியகட்டபொம்மன் தங்கிச் சென்றதாகவும் கோட்டையின் வரலாறு கூறுகிறது.
* இக்கோட்டையிலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை இருந்துள்ளது, தற்போது அதன் வாயிற்பகுதி சிமென்ட் கற்களால் அடைக்கப்பட்டுள்ளது.
* இக்கோட்டையில் தொடக்கத்தில் தற்போது உள்ளது போன்ற 9 சுற்று கோட்டைகள் இருந்தன. 1877-ஆம் ஆண்டில் குண்டாற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் 8 கோட்டைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. அதனால் தற்போது ஒரேயொரு கோட்டைப்பகுதி மட்டும் எஞ்சியுள்ளது.
* 1966-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகிறது.
* இக்கோட்டை அமைந்திருக்கும் வளாகத்தில் ஆங்கிலேயர் காலத்தில் 1918 -ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கமுதி காவலர் தனி ஆயுதப்படை இயங்கி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இக்கோட்டையின் மையப் பகுதியில் உள்ள மைதானத்தில் பயிற்சி காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் அது நிறுத்தப்பட்டது.
* இக்கோட்டையின் வடக்குச் சுவரில் முனீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் தற்போது கமுதி தனி ஆயுதப்படை நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
* இக்கோயிலில் விசேஷ நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனால், இக்கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கோட்டைக்குள்ளேயும் சென்று பார்வையிட்டு செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.