பிடித்த பத்து: சென்னைக்கு ஆயிரம் கதவுகள்

தனக்குப் பிடித்த பத்து குறித்து கூறுகிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்எந்த ஊரில் வாழப்பிடிக்கும்:
பிடித்த பத்து: சென்னைக்கு ஆயிரம் கதவுகள்
Published on
Updated on
1 min read

தனக்குப் பிடித்த பத்து குறித்து கூறுகிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
எந்த ஊரில் வாழப்பிடிக்கும்:


சென்னையில். வெறும் ஆளாக வந்த எனக்கு ஒரு அடையாளத்தைத் தந்து என் இருப்பை அர்த்தப்படுத்தியது சென்னையே. ஆகவே சென்னையே நான் பெரிதும் விரும்பும் நகரம்.

சென்னை என்னை மட்டுமில்லை. எத்தனையோ கலைஞர்களை வாழ வைத்திருக்கிறது. சென்னைக்கு ஆயிரம் கதவுகள் இருக்கின்றன. எதன் வழியாகவும் உள்ளே நுழையலாம். நமக்கான இடம் நிச்சயம் இருக்கும்.

எம்மாதிரியான வீட்டில் வாழப்பிடிக்கும்:

சென்னையில் சுற்றிஅலைந்த நாட்களில் 26 அறைகளில் தங்கியிருக்கிறேன். இரண்டாயிரத்திலிருந்து பத்து வருஷங்களாகக் கேகேநகரில் இருந்தேன். தற்போது சாலிகிராமத்தில் குடியிருக்கிறேன். சொந்த ஊரான மல்லாங்கிணரில் விசாலமான வீட்டில் குடியிருந்து பழகியவன். ஆகவே சென்னையில் தோட்டத்துடன் கூடிய தனிவீட்டில் குடியிருக்கவே ஆசை. ஆனால் அப்படியான இடம் கிடைப்பது எளிதாக இல்லை.

அண்மைக்காலப்படைப்பாளிகளில் யாரைப்பிடிக்கும்:

கவிதையில் அனார், ரஷ்மி, நரன், சங்கர ராமசுப்ரமணியன், போகன் சங்கர், சம்யுக்தா மாயா, இளங்கோ கிருஷ்ணன், வெயில், லீனா மணிமேகலை, கதிர்பாரதி, சபரிநாதன், சிறுகதைகளில் ஹசீன், கணேசகுமாரன், கார்த்திக் புகழேந்தி, அகரமுதல்வன், கருத்தடையான், ஹரி கிருஷ்ணன். நாவல்களில் சரவணன் சந்திரன், கரன்கார்க்கி, தமிழ்நதி, குணா கவியழகன், செந்தில்குமார்., கட்டுரைகளில் சமஸ், திருமாவேலன், ஆசை, அரவிந்தன். மொழிபெயர்ப்பில் ஜி.குப்புசாமி, செங்கதிர், சத்யமூர்த்தி, எத்திராஜ் அகிலன், போன்றவர்களைப் பிடிக்கும்.

பிடித்த நடிகர் நடிகையர்:

கறுப்பு வெள்ளை சினிமாவில் எம்.ஆர். ராதா, சந்திரபாபு, சாவித்திரி. இப்போது ரஜினி, மோகன்லால், மகேஷ்பாபு, நானா படேகர். நடிகைகளில் பார்வதி, கங்கனா ராவத்,

பிடித்த ஆடைகள்:

கோடு போட்ட சட்டைகள். நீலநிற ஜீன்ஸ்.

பிடித்த ஆசிரியர்:

சுப்புலட்சுமி. எனது முதல்வகுப்பு ஆசிரியர். அ ஆவன்னா கற்று தந்தவர். தன் மகனைப் போல என் மீது காட்டிய அன்பு மறக்கமுடியாதது.

பிடித்த தலைவர்கள்:

மகாத்மா காந்தி, காமராஜர், பெரியார்.

பிடித்த உலக அழகி:

அன்னா கரீனினா. டால்ஸ்டாயின் அன்னாகரீனினா மகத்தான நாவல். அதில் நாயகியாக வரும் அன்னா கரீனினா எனக்கு விருப்பமான உலக அழகி.

பிடித்த எழுத்தாளர்கள்:

ஷேக்ஸ்பியர், லியோ டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, போர்ஹே, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஆன்டன் செகாவ், காப்கா, ஹெமிங்வே, ரேமண்ட் கார்வர், செல்மா லாகெர்லாவ், இதாலோ கால்வினோ, வைக்கம் முகமது பஷீர், ஆனந்த், தாகூர், வெள்ளி வீதியார், கபிலர், ஆண்டாள். இளங்கோ அடிகள், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி. ஜானகிராமன், கி. ராஜநாராயணன், வண்ணநிலவன், கவிஞர் தேவதச்சன்.

பிடித்த வாழ்க்கை:

எளிமையும் நேர்மையும் கொண்ட எனது வாழ்க்கை. முழுநேர எழுத்தாளனாக வாழ்வது கஷ்டம். அதைப் புரிந்து கொண்டு உடன் வாழும் மனைவி பிள்ளைகள் நண்பர்கள் அனைவருடன் அன்பையும் நேசத்தையும் பகிர்ந்து கொண்டு வாழும் இந்த வாழ்க்கையே இனிமையானது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com