காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புகைப்படங்களால் வாழும் சங்கர்ராவ்

புகைப்படம் எடுப்பதும் ஒரு கலைதான். பெரிய விழாக்களுக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் புகைப்படம் எடுப்பது என்பது அரிய வகைக் கலையாக இருந்து வருகிறது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2019, 8:08 am

ரா. சுந்தர்ராமன்


புகைப்படம் எடுப்பதும் ஒரு கலைதான். பெரிய விழாக்களுக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் புகைப்படம் எடுப்பது என்பது அரிய வகைக் கலையாக இருந்து வருகிறது. இன்றும் அதற்குண்டான மவுசு குறையவில்லை. அதேபோல 1990-களில் திரையரங்குகளில் இருக்கும் கண்ணாடிப் பெட்டியில் அப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் ஸ்டில்ஸ்களை மாட்டியிருப்பார்கள்.  படம் பார்ப்பதற்கு டிக்கட் வாங்கியவுடன் ஸ்டில்ஸை பார்ப்பது வழக்கமாக இருந்தது. இந்த மாதிரியான ஸ்டில்ஸ்களை எடுப்பதற்கென்றே பிரத்யேகமான புகைப்படக் கலைஞர்கள் இருப்பார்கள். இதில் சினிமா சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே பணிபுரிவார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், நாகராஜராவ் மற்றும் சங்கர்ராவ். இருவரும் சகோதரர்களோ அல்லது தந்தை மகனோ அல்ல. நாகராஜராவின் அக்காள் மகன்தான் சங்கர்ராவ். 1960-ஆம் ஆண்டு "பூம்புகார்' படத்தில் ஆரம்பித்த சங்கர் ராவின் வாழ்க்கை ஏறக்குறைய 46 ஆண்டுகள் திரைப்படத்துறையில் பணியாற்றி சமீபத்தில் அவருடைய புகைப்படத்திற்கு மாலை போடும் அளவிற்கு உயர்ந்து விட்டார். 

சங்கர்ராவ், தன் தொழில் மீது வைத்திருந்த பக்தி, தொழிலில் நேர்மை, நேரம் தவறாமை, நம்பகத்தன்மை ஆகியவற்றில் சிறிதளவு கூட சிதறாமல் பணியாற்றியதால்தான் எம்.ஜி.ஆரின் நம்பிக்கையைப் பெற்று அவரின் 35 படங்களுக்கு "ஸ்டில்ஸ்' ஆர்.என். நாகராஜ ராவும் புகைப்பட உதவியாளராக சங்கர்ராவும் பணியாற்றியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த புகைப்படக் கலைஞராகவும் சங்கர்ராவ் இருந்து மறைந்துள்ளார்.

சங்கர் ராவிற்கு  இரண்டு சவாலான  வேலைகளை”"உலகம் சுற்றும் வாலிபன்'” படத்தில்  கொடுத்தார் எம்.ஜி.ஆர். புத்தர் கோயில் சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆர் சின்னப் பெட்டியின் மேல் படுத்துக் கொண்டு மேலே பார்ப்பார். அப்போது நம்பியார் எகிறிக்குதித்து எம்.ஜி.ஆர் மேல் விழுவார், இந்தக் காட்சியை ஆக்ஷனில் புகைப்படமாக எடுக்க முடியுமா என்று எம்.ஜி.ஆர் கேட்க, அதைச் சவாலாக சங்கர்ராவ் எடுத்துக்கொள்ள, நின்ற இடத்தில் இருந்தே ஐந்து அடிக்கு மேல் எகிறிக் குதித்தார் நம்பியார். அதைக் கிளிக் செய்தார் சங்கர் ராவ். பிரிண்டைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆரும், நம்பியாரும் பாராட்டியது சங்கர் ராவின் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றாகும். 

வசூலை  வாரிக் கொட்டிய ”"உலகம் சுற்றும் வாலிபன்'” படத்தில் மற்றொரு நிகழ்வு. “"தங்கத் தோணியிலே' பாடல் காட்சிக்கு இரண்டு கேமராவிற்கு உதவி ஒளிப்பதிவாளர்கள் இருந்தார்கள். ஆனால், ஒளிப்பதிவாளர் ராமமூர்த்திக்கு உதவியாளர் இல்லை. இதைச் சற்றும் எதிர்பார்க்காத எம்.ஜி.ஆர், சங்கர் ராவை அழைத்து, "ராமமூர்த்திக்கு உதவியாக இரு' என்றார். உடனே "அய்யோ சார், எனக்கு மூவி கேமரா பற்றி ஒன்றும் தெரியாது, ஸ்டில் கேமராவில்தான் வேலை செய்திருக்கிறேன்' என்றார். அதற்கு எம்.ஜி.ஆர், "எல்லோரும் எல்லாத்தையும் கத்துக்கிட்டா வர்றாங்க, உனக்கு மூவி கேமராவைப்பற்றி கற்பதற்கு ஒரு வாய்ப்பு, உன்னால் முடியும்' என்று விருப்பத்தைத் தூண்டிவிட்டார். ராமமூர்த்தி சொல்லியபடி கேமரா லென்ஸ் எல்லாம் ஃபோகஸ் செய்தார். அந்தக்காட்சியை ஜப்பானிலேயே கழுவிப் பார்த்த எம்.ஜி.ஆர், சங்கரை அழைத்து “"சங்கர், நீ ஃபோகஸ் செய்த காட்சி ரொம்ப சிறப்பா வந்திருக்கு, எனவே எதையும் துணிந்து செய், துணிவு இருந்தால் எதையும் சாதிக்கலாம்'  என்று முதுகில் தட்டிக்கொடுத்துப்  பாராட்டினார் எம்.ஜி.ஆர்.

வெளிநாடுகளில் நடைபெற்ற “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தின் படப்பிடிப்பு முடிந்து அனைவரும் விமானத்தில் இந்தியா திரும்பிக் கொண்டிருக்கிறார்கள், எம்.ஜி.ஆர் அருகே மனைவி ஜானகி, சங்கர்ராவ் நாகேஷ் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். அப்போது எம்.ஜி.ஆர், மனைவி ஜானகியை மஞ்சுளா அருகில் உட்காரச்சொல்லிவிட்டு சங்கர்ராவை தன் அருகில் அமர்த்திக் கொண்டார். 

“"அப்பாவுக்கு மொத்தம் எத்தனை குழந்தைகள்' என்று எம்.ஜி.ஆர் கேட்டார்.
“"மூணு குழந்தைங்க, அதுல ரெண்டு பேர் பெண் குழந்தைகள்'.

“"நாகராஜராவ்க்கு நீ எத்தனையாவது பையன்?'

"அவர் என் அப்பா அல்ல - தாய் மாமா' என்று சங்கர்ராவ் சொல்ல, “"அப்போ நீ நாகராஜராவ் மகன் இல்லையா. இவ்வளவு நாளும் அவரோட மகன்னு நினைச்சிருந்தேன்' என்றார் எம்.ஜி.ஆர். உறவின் சந்தேகத்திற்கு விமானத்தில் பதில் கிடைத்தது. 

அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த எம்.ஜி.ஆர்

சத்யா ஸ்டுடியோவில் "நினைத்ததை முடிப்பவன்'” படத்தில் வரும் “"கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்"” என்ற பாடல் காட்சி படமாகிக் கொண்டிருக்கிறது. சங்கர் ராவ் தோளில் இரண்டு காமிராவை மாட்டிக்கொண்டு மரத்தடியில் இடுப்பைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். இதை கவனித்த எம்.ஜி.ஆர், என்ன சோர்வா நிற்கிற என்று கேட்க, இடுப்பு வலிக்குது என்று பதில் சொன்ன சங்கர் ராவை, தனது பர்சனல் டாக்டர் பி.ஆர். சுப்ரமணியத்தை வரவழைத்துப் பரிசோதிக்கச் சொல்கிறார். பரிசோதித்த டாக்டர், சங்கருக்கு ஹிரண்யா பிரச்னை இருக்கு, "இது ஆரம்ப ஸ்டேஜ்தான், அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம்' என்றார். இரண்டு நாட்கள் கழித்து அறுவை சிகிச்சை பூந்தமல்லியில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்றது.  ஒருவாரம் கழித்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன் பணம் செலுத்துவதற்காக மாமா நாகராஜராவ் செக் புத்தகத்தோடு வந்து, மொத்த பில் எவ்வளவு என்று நிர்வாகத்திடம் கேட்டார். உடனே நிர்வாகம் நேற்று இரவே எம்.ஜி.ஆர் பிளாங்க் செக்கைக் கொடுத்து ஆபரேசன் செலவு போக அனைத்து ஊழியர்களுக்கும் சேர்த்து தொகையை எழுதிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார் என்றது.

கோவை விவசாய ஆராய்ச்சிப் பண்ணையில் “"விவசாயி'” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, படப்பிடிப்பு முடிந்தவுடன் சங்கர்ராவ் “"சார் ஸ்டில்ஸ்' என்று எம்.ஜி.ஆரைக் கேட்க, மறுத்துவிட்ட எம்.ஜி.ஆர் சிறிய யோசனைக்குப் பிறகு சரி என்றவுடன், டிராக்டர் ஓட்டுகிற மாதிரி, பிடித்துக் கொண்டு நிற்கிற மாதிரி என்று பல்வேறு கோணங்களில் சுமார் 15 புகைப்படங்களை எடுத்தார். 15 புகைப்படங்களும் “"விவசாயி'” படத்தின் பிரத்யேக படங்கள் மற்றும் ஸ்டில்ஸ் பை சங்கர்ராவ் என்ற தகவலோடு ”"பேசும் படம்'” புத்தகத்தில் வெளிவந்தது.  சினிமாவில் உதவியாளர் என்பதால், படங்களில் மாமா நாகராஜராவ் பெயர்தான் வரும். பத்திரிக்கையில் பெயர் வந்தவுடன்,  மகிழ்ச்சியில்  சந்தோஷப்பட்டார் சங்கர்ராவ். 

"அடிமைப் பெண்'” படத்தில் இடம்பெற்ற “"தாயில்லாமல் நானில்லை'  பாடல் ஊட்டியில் "தொட்டபெட்டா' சிகரத்தில் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சங்கர்ராவ் தொட்டபெட்டாவைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, புதரில் தாய்ப் பறவை குஞ்சுகளுக்கு இரை கொடுப்பதைப் பார்த்த உடனே, இயக்குநர் சங்கரை கூப்பிட்டுக் காண்பித்தார். அவரும் ஒளிப்பதிவாளரை அழைத்து, லைட்டோ அல்லது ப்ளாஷ் வைத்தால் பறவைகள் பறந்து விடும், அப்படியே எடுங்கள் என்று சொல்லி, எடுத்த காட்சியைப் படத்துடன் இணைத்து விட்டார். இதைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு ஒரே மகிழ்ச்சி. ரொம்ப நல்லா வந்திருக்கு என்று சங்கர் ராவின் சமயோஜிதத்தைப் பாராட்டினார்.

மாமா நாகராஜராவிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக வெளியே வந்த சங்கர்ராவ் 1979-ஆம் ஆண்டு தனியாக பணிபுரிய ஆரம்பித்து ரஜினி, கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஏறக்குறைய 70 படங்களில் பணியாற்றியுள்ளார்.  1986 முதல் 1987- ஆம் ஆண்டுகளில் தென்னிந்திய புகைப்படக் கலைஞர்களின் தலைவராக இருந்த்துள்ளார்.

”இறக்கும் மனிதர்கள் இறவாப் பாடல்கள்” என்று மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் அடிக்கடி சொல்வார். அதேபோல் சங்கர்ராவ் மறைந்தாலும், அவர் எடுத்தப் புகைப்படங்களில் வாழ்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.