கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

படங்களும் பாடங்களும்!

திரைப்படவிழா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் வகையில் உள்ள பல்வேறு திரைப்பட விழாக்களை நான் பார்த்திருக்கிறேன்.

News image
Updated On :17 டிசம்பர் 2019, 5:47 am

சலன்

திரைப்படவிழா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் வகையில் உள்ள பல்வேறு திரைப்பட விழாக்களை நான் பார்த்திருக்கிறேன். கான், பெர்லின், லண்டன், போன்ற திரைப்பட விழாக்கள் இதில் அடக்கம். சில விழாக்களில் நல்ல நல்ல படங்கள் இருக்கும், ஆனால், நடத்தும் முறை சரியாக இருக்காது. சில திரைப்படங்கள் சரியாக இல்லாமல் இருந்தாலும் வரும் விருந்தினர்கள் எல்லோரும் நல்லமுறையில் கவனிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள். பலர் நடத்தும் முறையும் சரியாக இருக்காது, படங்களும் நிறைவைத் தராது. 
இப்படிப் பட்ட சூழ்நிலைகளைப் பார்த்து, பல்வேறு விதமான அனுபவங்களை மனதில் சுமந்து கொண்டு, இந்தத் தைபெயின் "தங்கக் குதிரை' திரைப்படத் திருவிழாவில் பிப்ரெஸ்கி (Fipresci) ஜூரியாக கலந்துகொள்ளத் தைவான் பயணமானேன். விமானத்தை விட்டு இறங்கியவுடன் இரண்டு இளைஞிகள் என்னை வரவேற்க, நான் இந்த வரவேற்பில் மெய் மறந்து நடந்து வந்தேன். Customs மற்றும் immigration இருப்பது 
எனக்குத் தைவான் நாட்டில் மட்டும் தெரியாத அளவிற்கு எல்லாம் நடந்தது. நான் எங்கேயும் நிற்கவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்து விட்டது. சிறப்பு வழியில் நான் அழைத்து வரப்பட்டேன். நேராக சுமார் ஒரு மணி நேரம் இருக்கும் ஓட்டலில் நான் இறக்கி விடப்பட்டேன். அது சென்னை ரங்கநாதன் தெரு போன்று மக்கள் கூட்டதுடன் இருந்தது. ரிமோட் கண்ட்ரோலில் எல்லாவற்றையும் செய்தவர் ஈதன். இவர்தான் தடபுடலான வரவேற்புக்குக் காரணம் என்று சொன்னால் அது மிகை இல்லை. இவர் சர்வதேச பத்திரிகை தொடர்பாளர், தைவானில் இருந்தே தொலைபேசியில் சென்னைக்குக் கூப்பிட்டு எனக்கு விசா கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். 
நான் இங்கு செய்ய வேண்டிய வேலை எல்லாம் படங்கள் பார்ப்பதுதான். முதல் நாள் இரண்டு படங்கள், அடுத்த நாள் 3, மூன்றாம் நாள் திரும்பவும் 3, கடைசி நாள் 2 ஆக மொத்தம் 10 படங்களை நான்கு நாளில் பார்த்து முடித்தேன். அவர்களுக்கு வந்த படங்களில் இருந்து ஒரு குழு தேர்ந்தெடுத்து வைத்த படங்களை எங்கள் Fipresci ஜூரி பார்த்து முடித்தோம் என்பது தான் சரி. இந்தக் குழு தேர்ந்தெடுத்த மொத்த படங்கள், அதாவது (nominated films) 39. அதில் இருந்து எங்கள் குழுவிற்குக் கொடுத்தது 10. மற்ற படங்கள் மற்ற குழுவினர் பார்த்து அதில் சிலவற்றைத் தேர்ந்தேடுத்து பரிசளிப்பார்கள் என்று கூறினார்கள்.
நமது தேசிய திரைப்பட விருது போல இங்கும் பல்வேறு விருதுகள் உள்ளன. சிறந்த படமாகத் தேர்தெடுக்கப்பட்ட படம் "A Sun". இதற்கு எதிர் அணியாக இருந்தது Detention. இந்த இரண்டு படங்களும் போட்டி போட்டுக் கொண்டு விருதுகளைப் பகிர்ந்து கொண்டன. "A Sun" என்ற படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்தன. அவை சிறந்த படம், இயக்குநர் (CHUNG Monghong), கதாநாயகன் (CHEN Yiwen), குணச்சித்திர நடிகர் (LIU Kuanting) படத்தொகுப்பு (LAI Hsiu hsiung), மக்கள் விரும்பும் படம். Detention படத்திற்கு முதல் பட இயக்குநர் (John HSU), adopted screenplay (John HSU, FU Kailing, CHIEN Shihkeng), பெஸ்ட் விஷுவல் எபெக்ட்ஸ் (Renovatio Pictures, Tomi KUO), ஆர்ட் டைரக்க்ஷன் (WANG 
Chihcheng), ஒரிஜினல் பாடல் (The Day after Rain). மற்றது Scoundrels என்ற ஒரு திரைப்படம், ஆக்ஷன் மற்றும் ஒளிப்பதிவு ஆகிய பரிசுகளைப் பெற்றது. இப்படி சில நல்ல படங்கள் தங்களுக்குள் பரிசுகளைப் பகிர்ந்து கொண்டன. 
இந்தப் படவிழாவில் தொடக்க நாள் படமாக (opening film) தனது தைவான் நாட்டு படமான Synapses என்ற படம் காட்டப்பட்டது. இதை இயக்கியவர் ChangTsochi. இவரது முந்தைய படங்கள் எல்லாமே ஏதாவது ஒரு பெரிய படவிழாவில், அதாவது வெனிஸ் மற்றும் பெர்லின் படவிழாவில் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது என்று கூறலாம். 2010- ஆம் ஆண்டு இவரது When Love Comes என்ற திரைப்படம்,. இதே படவிழாவில் சிறந்த படமாகத் தேர்வு செய்து பரிசீலனைக்கு வந்தது. "Synapses" படத்தின் கதை ஒரு குடும்பத்தை பற்றிய கதை. Alzhimer நோய் உள்ள கணவர். மகள் ஒரு கைதி. அவளுக்குப் பிறந்த குழந்தை ஒரு பையன். எதைப் பற்றியும் கவலைப்படாத காதலன். இவர்களையும், இவர்களின் பிரச்னைகளையும் எப்படிச் சமாளிக்கிறாள் தாய் என்று சொல்லும் படம். 

Story image

இந்தப் படவிழாவின் கடைசிப் படமாக (Closing film) காண்பிக்கப்பட்ட படம் "The garden of evening mists". .இதன் இயக்குநர் Tom Lin Shuyu இந்தப் படம் மலேசியா நாட்டின் படம். இரண்டாவது மலேசியா போருக்கு பிறகு, கதாநாயகி பெரிய தோட்டத்தைப் பார்க்கிறாள். அது ஒரு ஜப்பானியரின் தோட்டம். அவரை எப்படியாவது கண்டு பிடித்து, அவரிடம் உதவியாளராகச் சேர்ந்து, தனது தங்கைக்கு ஒரு தோட்டம் அமைக்க விரும்புகிறாள். ஆனால், முதலாளியும், உதவியாளராகச் சேர்ந்த கதாநாயகியும் காதலில் விழுகின்றனர். அப்புறம் என்ன என்ன என்பது தான் கிளைமாக்ஸ். 
இந்தப் படவிழாவில் சிறந்த நடிகைக்கான பரிசை பெற்றவர் Yeo Yannyann. இவர் நடித்த படத்தின் பெயர் "Wet Season". மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வந்து தங்கி உள்ள 40 வயது சீன மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர். மழை காலத்தில் மிகவும் கஷ்டப்படுகிறார். கல்யாணமாகியும் குழந்தைப் பேறு இல்லாதவள் என்று எல்லாரும் சொல்ல ஒரு இளைஞனால் அவர் எப்படிக் காப்பற்றப்படுகிறாள் என்பதே கதை. இதன் இயக்குநர் Anthony Chen, இவரின் முந்தைய படமான ஐப்ர் ஐப்ர் கான் படவிழாவில் பரிசு பெற்றது அது மட்டுமல்லாமல் ஆஸ்கர் திரைப்பட விழாவில் சிறந்த வெளி நாட்டு படத்திற்கான போட்டியிலும் பங்கு கொண்டது. இந்தப் படம் தைவானும் சிங்கப்பூரும் இணைந்து தயாரித்த படம். 
தைவான், சிங்கப்பூர், ஹாங்காங், மலேசியா, போன்ற ஆசிய நாடுகளில் இருந்து பல படங்கள் இந்தத் தங்க குதிரை திரைப்பட விழாவில் பங்கு கொண்டன என்று சொல்வதை விட, பரிசு பெற போட்டியிட்டன என்று சொல்லலாம். அதில் ஃபிரான்ஸ் நாட்டின் பங்கு உள்ள படங்கள் இரண்டு. அதில் ஒன்று முழுமையாக ஃபிரான்ஸ் நாட்டில் தயாரான படம். அதுதான் Last year when the train passed by. இதன் இயக்குநர் Hung Pang Chuan. இவர் தைவான் நாட்டில் பிறந்தவர். இந்தப் படம் பல்வேறு உலகத் திரைப்பட விழாவில் பரிசு பெற்ற படம் மட்டுமல்ல, வித்தியாசமான கதை அம்சம் நிறைந்த படம். ரயிலில் போகும்போது காமிரா மூலம் ஒரு படத்தை எடுக்கிறார் ஒருவர். அந்தப்படத்தில் இருந்தவர்கள், மற்றும் அந்த இடத்தில் இருந்தவர்களிடம், ஒரு வருடத்திற்கு முன் இதே நாளில், இந்தப் படத்தை நான் ரயிலில் போகும் போது எடுத்தேன். அப்பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கதாநாயகன், அதே இடத்திற்கு வந்து கேட்கிறார். அதிலிருந்து தொடங்குகிறது கதை.
டாக்குமெண்டரி, ஷார்ட், மற்றும் அனிமேஷன் வரிசையில் சில படங்களும் காட்டப்பட்டன. அவைகளில் டாக்குமெண்டரி படங்களில் Your face என்ற படம் சிறந்த படமாகத் தேர்வு பெற்றது. குறும்படத்தில் சிறந்தவை என்று தேர்ந்தெடுக்கப்பட்ட படம் 3 generations 3 days. அனிமேஷன் ஷார்ட் படம் என்ற பிரிவில் gold fish என்ற படம் பரிசு பெற்றது. 
இந்தத் தைபெயின் தங்க குதிரை திரைப்பட விழாவில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். பல்வேறு குழுக்கள் இருந்தாலும் எந்த ஒரு குழுவிற்கும் பிரச்னை இல்லாமல் தங்கள் வேலையை செய்ய அவர்கள் வழி வகுத்துக் கொடுத்திருந்தார்கள். உதாரணமாக எங்கள் Fipresci ஜூரி, எந்த தடங்கல்களும் இல்லாமல், அதே சமயம், சுலபமாக வேலை செய்ய, எங்கு நாங்கள் படங்களைப் பார்க்கிறோமோ, அதற்கு அருகிலேயே எங்கள் ஹோட்டல் அறைகளும் ஏற்படுத்தியிருந்ததுதான். 
படங்களைப் பார்த்து விட்டு சில நிமிடங்களிலேயே நடந்து நாங்கள் ஓட்டல் அறைக்குத் திரும்பலாம். அதற்கு அருகிலேயே ஒரு திரைப்பட விழா அலுவலகமும் இருந்தது. எது கேட்டாலும் கிடைக்கும் அளவிற்கு எங்கள் அருகிலேயே இரு பெண்கள் உதவிக்கு இருந்தனர். குடிக்க எதுவும் வேண்டுமா, பசிக்கிறதா என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கேட்டுக் கேட்டுக் எங்களைப் பார்த்துக் கொண்டனர். இதில் உள்ள சிறப்பு என்ன வென்றால் நாங்கள் தனியாகப் படங்களைப் பார்க்கவில்லை. 
மக்களுடன் மக்களாக எங்களுக்கு என்று டிக்கெட் எடுத்து தயாராக வைத்திருப்பார்கள். அதைக் காண்பித்து எங்களை உள்ளே சென்று அமர வைத்துவிட்டு, அந்தப் பெண்கள் வெளியே வருவார்கள். இப்படிச் செய்து எங்களை ஒரு வாரமாகப் பழக்கி விட்டு, திடீர் என்று கடைசி இரண்டு நாட்களில் உதவுவதற்கு யாருமே இல்லை என்றால், எப்படி இருக்கும்? நிறைவு விழாவுக்கு அழைப்பு இல்லை. எங்களுக்கு சீன மொழி புரியவில்லை என்றாலும், அவர்கள் எப்படி இவ்வளவு பெரிய திரைப்படத் திருவிழாவின் கடைசி நாள் பரிசளிப்பு வைபவத்தை நடத்துகிறார்கள் என்று பார்க்க முடிய வில்லை. கேட்டால் நான்கு மணிநேர விழா.
எல்லாமே சீன மொழியில் நடக்கும் என்பதால் உங்களை அழைக்கவில்லை என்று கூறினாலும், ஒரு அரை மணிநேரமாவது பார்க்க கொடுத்திருக்கலாம். அதே போன்று திரும்பும் போதும் கைவிடப்பட்ட நிலைதான்.இந்தச் சிறிய குறையைத் தவிர இந்தத் தங்கக் குதிரை திரைப்பட விழாவில் எல்லாமே சிறப்பாக இருந்தது, நன்றாகவே நடந்தது. நம் ஊரை போல் அங்கும் ஒரு கோயில் திருவிழாவைப் பார்த்தேன். 
அடுத்த வாரம்: தைவான் 
எப்படி இருக்கிறது ? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.