கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ரோஜா மலரே! - 19: குமாரி சச்சு

கிருஷ்ணர் வேடத்தில் நடிப்பதற்காக என்னுடைய தலைமுடியை வெட்டிய பிறகும் பிரச்னை விட்டபாடில்லை. நான் கிருஷ்ணர் வேடத்திற்குத் தகுந்த மாதிரி தலை முடியை சரியாக வெட்டிக் கொண்டேனா என்று அந்தக் கம்பெனி

News image
Updated On :22 டிசம்பர் 2019, 10:33 am

சலன்


கிருஷ்ணர் வேடத்தில் நடிப்பதற்காக என்னுடைய தலைமுடியை வெட்டிய பிறகும் பிரச்னை விட்டபாடில்லை. நான் கிருஷ்ணர் வேடத்திற்குத் தகுந்த மாதிரி தலை முடியை சரியாக வெட்டிக் கொண்டேனா என்று அந்தக் கம்பெனி ஆட்கள் எங்களைப் பார்க்க வந்தார்கள். தெலுங்குப் படத்தின் மேலாளர், என் பாட்டியிடம் வந்து, "கிருஷ்ணர் வேடத்திற்கு உங்கள் பேத்தி கிடைத்து விட்டார். அது எங்களுக்குச் சந்தோஷமான விஷயம். படத்தில் கிருஷ்ணரின் அண்ணன் பலராமர் வேடத்திற்குக் குழந்தை, யாராவது கிடைத்தால் நன்றாக இருக்கும். உங்களுக்குத் தெரிந்த குழந்தை யாராவது இருக்கிறார்களா?' என்று எங்களிடம் கேட்டனர்.

பாட்டி அந்த மேலாளரிடம் தெரிந்த ஒரு பையனின் பெயரையும் விலாசத்தையும் சொன்னார். நாங்கள் செய்யும் நல்ல விஷயம் எங்களுக்கே பாதகமாக முடியும் என்று அப்பொழுது நாங்கள் நினைக்கவில்லை. என்னுடய சகோதரரின் நண்பர் ஒரு தெலுங்குக்காரர். அவரது தம்பி குழந்தையும் நடிக்க விரும்புகிறார். அந்தக் குழந்தை பார்க்க அழகாய், லட்சணமாய் இருப்பதனால் நாங்கள் அந்தக் குழந்தையின் பெயரையும் சொல்லி, விலாசத்தையும் கொடுத்து தொடர்பு கொள்ளக் கேட்டு கொண்டோம். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? மேலாளர் சொன்னது போல் எல்லாமே செய்து முடித்து விட்டோம்.

தலை முடியை அவர்கள் விருப்பப்படி வெட்டி விட்டோம். எல்லோருக்கும் கொடுக்கும் முன்பணமும் (அட்வான்ஸ்) எங்களுக்குக் கொடுக்கவில்லை. பெரிய கம்பனி என்பதால் நாங்கள் கேட்காமல் இருந்தோம். அப்படி இருப்பது சரியில்லை என்று பின்னர் உணர்ந்து கொண்டோம். காரணம், இவ்வளவு செய்தும், படப்பிடிப்பு நெருங்க நெருங்க தெலுங்கு படத்தின் தரப்பிலிருந்து யாருமே தொடர்பு கொள்ளவில்லை. இதுவே என் பாட்டிக்கு சரியாகப் படவில்லை. என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள, அவர்கள் படப்பிடிப்பு நடக்கும் தேதி அன்று ஒருவரை அனுப்பிப் பார்த்தால், எங்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

நாங்கள் சிபாரிசு பண்ணிய சிறுவன் கிருஷ்ணன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தான். அது எனக்கான வேடம் என்று யாரிடம் போய் நாங்கள் கூறமுடியும். இதைப் பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும். உடனேயே அந்த மேலாளரை கூப்பிட்டுக் கேட்டபோது, “"எங்களுக்குத் தெலுங்கு தெரிந்த பையனே கிடைத்து விட்டதால், உங்களைத் தொந்தரவு செய்யவில்லை'” என்று மிகவும் கூலாகச் சொன்னார்.

எங்களுக்குத் தேவையான, அவர்களுக்குத் தேவை இல்லாத, ஒரு பெண்ணுக்கு இன்றியமையாத தேவையான தலைமுடி போய் விட்டது. நாங்கள் விரும்பிய கிருஷ்ணர் வேடமும் கிடைக்கவில்லை. எந்தப் பணமும் நாங்கள் வாங்காமல் இவ்வளவையும் செய்து நாங்கள் எல்லாவற்றையும் இழந்து நின்றோம். இல்லை இல்லை, நாங்கள் செய்யவேண்டிய கிருஷ்ணர் வேடம், எங்களிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் நாங்கள் சிபாரிசு செய்த பையனுக்கே, நான் செய்யவேண்டிய அந்த வேடத்தைக் கொடுப்பார்கள் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.

இது போல் சினிமாவினால் இழக்க வேண்டியது பல. நான் இழந்தது தலைமுடி என்பதால் எனக்கும், என் பாட்டிக்கும் இது ஒரு பாடமாக அமைந்தது என்று கூறலாம். தலைமுடி போன வருத்தத்தில் இருந்த எங்களுக்கு மிகவும் சோகத்தில் அமைந்தது இன்னொரு நிகழ்ச்சி. நாங்கள் பல மாதங்களுக்கு முன்பே நடனம் ஆடுவதாக ஒப்புக்கொண்ட ஒரு நடன நிகழ்ச்சி. தலைமுடியை சவுரி வைத்து சரி செய்து கொள்ளலாம் என்று முன்பே முடிவு செய்து விட்டபடியால், வேறு விஷயங்களில் எங்கள் கவனத்தைச் செலுத்த தொடங்கி
னோம். நிகழ்ச்சி நடைபெறும் நாளும் வந்தது.

நானும் என் அக்கா மாடிலட்சுமியும் மேடையில் தோன்றி நடனம் ஆடத் தொடங்கினோம். சிறப்பாக நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. "நடனம் ஆடினார்' என்று பாட்டுக்கு ஏற்றபடி முகபாவம் செய்து கொண்டே, ஒருமுறை நான் சுற்றிச் சுழல வேண்டும். அதே போல் நான் சரியாகச் செய்தேன். அப்படிச் சுற்றி சுழலும் போது, திடீர் என்று ஏதோ தலையில் இருந்த பாரம் குறைந்தது போல் எனக்குத் தோன்றியது. சவுரி இருந்ததால் தலையில் ஒரு விதமான பாரம் இருக்கும். திடீர் என்று அந்த பாரம் ஏன் குறைந்தது என்று நான் யோசிக்க, அடுத்த சில நொடிகளில் எனக்கு விஷயம் தெரிந்து விட்டது. என் தலையில் இருந்த சவுரி முடி கழன்று எங்கோ விழுந்து விட்டது என்று உணர்ந்து கொண்டேன்.

சவுரி விழுந்த வருத்தம் ஒரு பக்கம், எங்கே போய் விழுந்தது இந்தச் சவுரி முடி என்று தெரியாமல் நான் சுற்றும் முற்றும் பார்க்கத் தொடங்கினேன். அதற்குள் ஒருவர் “சச்சு தலைமுடி என் கையில்” என்று கூறிக்கொண்டே, முதல் வரிசையில் இருந்து ஒருவர் எழுந்திருக்க, நான் அவரைப் பார்த்து விட்டு, இருங்க இருங்க என்று கூறியபடியே அவரை நோக்கி ஓடினேன். நான் குழந்தை என்பதால் எந்த விதமான கஷ்டத்தையும் பார்க்காமல், நானே இறங்கி நடந்து முன்வரிசையில் உடகார்ந்து இருந்தவரிடம் சென்று என் தலையில் இருந்து விழுந்த சவுரி முடியை வாங்கிக் கொண்டு வந்து உள்ளே சென்று சரியாக வைத்துக் கொண்டு வந்து பின்னர் ஆடினேன். இந்தப் பிரச்னைக்கு எல்லாம் காரணம் அந்தப் பிரபல தெலுங்கு படநிறுவனம்தான் என்று தைரியமாகச் சொல்வேன்.

தெலுங்கு படம் என்று சொன்னவுடன் எனக்கு வேறு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. “"மாயா பஜார்'” படத்தின் இரண்டு மொழிகளிலும், தமிழ் தெலுங்கு, என நான் நடித்திருக்கிறேன். அது தான் விஜயா வாகினி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் நான் நடித்த முதல் படம். அவர்களது ஸ்டுடியோவில் நான் பல படங்களில் நடித்திருந்தாலும், அவர்களது சொந்த தயாரிப்பில் நடித்த முதல் படம் “"மாயா பஜார்'” தான். ஏன் என்னை இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தார்கள் என்றால், சாவித்திரி அம்மா முக ஜாடை என்னுடைய முகத்துடன் ஒத்துப் போவதனால் தான். முன்பே இது குறித்து கூறியிருக்கிறேன் சாவித்திரிக்கு என்ன அலங்காரமோ, அதே அலங்காரம் எனக்கும் இருக்கும். அவர்களுக்கு நெத்தி சுட்டி போல் எனக்கும், அவர்களுக்கு ஒட்டியாணம் என்றால் எனக்கும், இப்படி இருவரையும் அலங்காரம் பண்ணி ஒரு நாள் "டெஸ்ட் சூட்' வேறு எடுத்தார்கள். மார்கஸ் பார்ட்லே தான் ஒளிப்பதிவாளர். அழகாக, அதே சமயம் சிறப்பாகப் படத்தை எடுத்தார்கள். அதாவது குழந்தை சாவித்திரி வளர்ந்து பெரியவளாக மாறிவிட்டார் என்று சொல்லும் வண்ணம் இந்தக் காட்சிகள் இருக்கும். இதில் எப்படி நான் உட்காரவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்கள்.

இப்படித்தான் சாவித்திரி அம்மா உட்காருவார்கள். இப்படித்தான் கன்னத்தில் கையை வைப்பார் என்று ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்து, என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்தார்கள். அது மட்டும் அல்லாமல் தாதா சாஹிப் பால்கே விருது பெற்ற நாகிரெட்டியார் மற்றும் அவரது நண்பர் சக்ரபாணியும், என்னிடம் மிகவும் பிரியமாக இருந்தார். நான் கேட்கும் எதையும் வாங்கிக் கொடுக்கச் சொல்லி இருந்தார்கள். நானும் படத்தின் படப்பிடிப்பின் போது அல்வாவிலிருந்து கலர் கலரான ஐஸ் கிரீம் வகைகள் வரை எது கேட்டாலும் எனக்குக் கிடைக்கும். அவர்கள் இருவரும் திரைப்பட ஜாம்பவான்கள் என்றாலும் ஒரு குழந்தை என்று என்னை எண்ணாமல், என்னையும் ஒரு நடிகை என்று மரியாதை கொடுத்து நடத்தினார்கள். படத்தின் இயக்குநர் கே.வி.ரெட்டியும் ஒரு சொல் கூட அதட்டி பேசமாட்டார்.

குழந்தை என்பதால் என்னைச் செல்லமாகக் கொஞ்சி, கொஞ்சி வேலை வாங்கினார்கள். அவர் மிகவும் உயரமானவர். அதனால் எங்களுக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் போது, எங்கள் உயரத்திற்கு அவர் குனிந்து காட்சியைப் பற்றியும், வசனத்தைப் பற்றியும், அதன் ஏற்ற இறக்கங்களை எப்படிச் சொல்ல வேண்டும் என்றும், எப்படி நடிக்க வேண்டும் என்று பொறுமையாகச் சொல்லி, நடித்தும் காண்பித்தனர்.

விஜயா வாகினி திரைப்பட நிறுவனம் என்னைப் பொருத்தவரை சிறந்த நிறுவனம் மட்டும் அல்ல, எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தும் நிறுவனம். ஆனால், இன்றுவரை என்னால் “"மாயா பஜார்'” படத்தை மறக்க முடியாது. மறக்க முடியாததற்கு வேறு ஒரு காரணமும் இருக்கு. அது என்ன என்று சொன்னால் நீங்கள் எல்லோரும் சந்தோசப்படுவீர்கள். அது என்ன அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடரும்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.