படிப்பது தவத்திற்கு இணையானது!: எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன்
சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதை எனத் தனது எழுத்துகளால் தடம் பதித்தவர் பி.செளந்தர்ராஜன். தமிழ் வாசகர்களால் இந்திரா செளந்தர்ராஜன் என நன்கு அறியப்பட்டவர்.


சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதை எனத் தனது எழுத்துகளால் தடம் பதித்தவர் பி.செளந்தர்ராஜன். தமிழ் வாசகர்களால் இந்திரா செளந்தர்ராஜன் என நன்கு அறியப்பட்டவர். தனக்குப் பிடித்த பத்து பற்றிக் கூறுகிறார்.
புத்தகங்கள்: முதலில் புத்தகங்களில் இருந்தே தொடங்குகிறேன். படிக்க வேண்டும். படிக்க வேண்டும். படித்தபடியே இருக்க வேண்டும். இது தவத்திற்கு இணையான செயல்! அவ்வகையில் சமீபத்தில் என் தவத்தின் போது நான் "திருக்குறன் கூறும் ரகசியங்கள்' என்னும் நூலை வாசித்தேன். பதினாறு கவனகர் இராம கனக சுப்பு ரத்தினம் எழுதிய நூல். கவனகரின் குறலாய்வும், அரிய நோக்கும் பிரமிப்பைத் தந்தது. அடுத்து படிக்க எடுத்து வைத்திருப்பது ஆர். விஜயராகவன் எனும் பொற்கொல்லர் எழுதியிருக்கும் "தங்கம் தங்கம் தான்' எனும் நூலுடன் எஸ்.ராமகிருஷ்ணனின் "சஞ்சாரம்' .
பயணம்: எப்போதும் பயணம் எனக்கு மிகப்பிடித்த விஷயம். உலகம் முழுக்க என் கால்கள் பதிய வேண்டும் என்பதும் என் விருப்பம். இயற்கை அழகு, மாறுபட்ட மானுட கலாசாரம், பயணிக்கும் நாட்டின் வரலாறு முதல் இலக்கியம் வரை சகலமும் அறிந்து கொள்ளும் துடிப்பு எனக்கு மிகவே உண்டு. பயணிக்கத்தான் கால்கள். ஆனால் நாம் வீடுகளில் படி ஏற இறங்க மட்டும் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்!
ஆலயங்கள்: மனித நாகரிகத்தின் முதிர்ந்த செயல்பாடு ஆலயங்களை வடிவமைத்தது தான். மனிதர்களின் சகல ஏற்ற தாழ்வுகளையும் சிதற அடிக்கின்ற இடம் தான் ஆலயம். இன்று அங்கே தர்ம தரிசனம், கட்டண தரிசனம் என்கிற போக்குகள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. குற்றம் குறைகளுக்கும் குறைவில்லை. ஆனாலும் மனிதன் லேசாவது திருச்சந்நதி முன்பு மட்டும் தான் நான் எனும் செருக்கடக்கும் களங்களாய் திகழும் ஆலயங்களுக்குச் செல்வதும் வணங்குவதும் மிகப்பிடித்த விஷயம். இதில் திருப்பதியும், மதுரையும் என் ஸ்பெஷல்!
நண்பர்கள்: உறவு நிலைகளில் தாய் தந்தையிடம் கூட எல்லாவற்றையும் கூறி விட முடியாது. நண்பனிடம் மட்டும் அது சாத்தியம். நட்புச் சுத்தியலால் மட்டுமே மதச்சுவர்களை உடைக்க முடியும். அந்த வகையில் நல்ல நண்பனாக இருக்கவும் பிடிக்கும். நல்ல நண்பர்களோடு இருக்கவும் பிடிக்கும்.
உணவுகள்: நான் நல்ல சாப்பாட்டு ரசிகன்! ஆனாலும் இந்த 60 ஆண்டுக்காலத்தில் 25 வித உணவு வகைகளுக்கு மேல் சாப்பிட்டதில்லை. சுத்த சைவம் வேறு! ஆயிரம் உணவு வகைகள் உலகில் இருக்கின்றன. அதை எல்லாம் சைவ நெறிக்குப் பங்கமின்றிச் சாப்பிட்டுப் பார்க்கும் ஆசை உண்டு. சமீபத்தில் சிங்கப்பூர் தேசிய நூலகக் காப்பாளர் அளித்த விருந்தில் மூங்கில் சூப்பும், அரைவேக்காட்டு கீரை உணவும் இப்போதும் நினைவில் வருகிறது.
பாடல்கள்: கார் பயணத்தில் பாட்டு கேட்பதைப் போல் இன்பம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அது திரையிசைப் பாடல்களாக இருந்தாலும் சரி, மெல்லிசைப் பாடல்களாய் இருந்தாலும் சரி. சமீப காலமாக மேற்கத்திய இசை கலப்போடு சில குழுவினர் செய்யும் முயற்சிகள் பிரமிக்க வைக்கிறது. கார் பயணத்தில் 1975-இல் வெளியான திரை இசைப்பாடல்களில் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்' என்னும் எஸ்.பி.பி பாட்டில் சொக்கிப்போவேன்!
உதவி செய்தல்: ஆத்மார்த்தமான விஷயம் இது. உதவி என்ற உடன் ரூபாய் நோட்டுகள் நினைவுக்கு வர தேவையே இல்லை. சரீர உபகாரம் என்று எவ்வளவோ செய்யலாம். அதிலும் கஷ்டப்படுகிறவர்களுக்குச் செய்யும் உதவியும் கடவுளுக்கான, அர்ச்சனைகளும் ஒன்று என்பது என் கருத்து. செய்த உதவிகளை உடனே மறந்து விட வேண்டும். இல்லாவிட்டால் செருக்கு ஏற்பட்டுவிடும். முதிர்ந்த வயதிலும் காய்கறி, பழம் என்று விற்கும் பாட்டிகளிடம் அவர்கள் சொல்லும் விலைக்கே வாங்கி அவர்களின் மனதிருப்தியை மிகவும் ரசிப்பேன்.
தோட்டம்: ஐம்பது அறுபது பூச்செடிக் தொட்டிகளோடு நானும் ஒரு தோட்டக்காரன் என்று அலட்டிக் கொள்வது எனக்குப் பிடித்திருக்கிறது. இவைகளுக்குத் தண்ணீர் விடுவது, உரம் போடுவது மிகப் பிடித்த விஷயம். பெரிய தோட்டம் - அங்கேயே கட்டிலில் தூக்கம். கிணற்றில் நீச்சல், பசுவிடம் பால் கறத்தல் என்கிற கொடுப்பினைகள் இல்லாத பாவி நான்!
தூய்மை: ஏனோ அழுக்கு துணியும் பிடிக்காததாகிவிட்டது. அடுக்கி வைத்திருப்பது கலைந்தாலும் பிடிக்காது. அது அங்கங்கே இருக்க வேண்டும். புறந் தூய்மை மட்டுமல்ல. அகத் தூய்மையும் மிக முக்கியம். அதற்காக மிக முயல்கிறேன். நூறு சதவிகிதம் பொய்யின்றி வாழவும் முயல்கிறேன். என் இளம் பிராயத்தில் வாய்மையின் மதிப்பு தெரியாததால் விளையாட்டுப் பொய்கள் சொல்லியுள்ளேன். அதற்குப் பாரிகாரமாய் வாய்மை தூய்மைக்கு மிக முயல்கிறேன்.
சொற்பொழிவுகள் : எப்போதும் இதைக் கேட்க எனக்கு மிகப்பிடிக்கும் புலவர் திலகம் கீரன், கண்ணதாசன், முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார், நெல்லை கண்ணன், சுகி சிவம், சாலமன் பாப்பையா போன்றோரிடம் கரைந்து போயிருக்கிறேன். இன்று கரைப்பவனாகவும் இருக்கிறேன். காஞ்சி பரமாச்சாரியார் எனும் இஷ்டகுரு உற்ற துணையாக இருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...