மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ந.பிச்சமூர்த்தி: என்றும் இருப்பவர்கள்! - 14

மனதிற்கு விநோதமான ஓர் இயல்பு உண்டு. எந்த நிலையில் அது இயங்கி வருகிறதோ அதற்கு நேர் எதிரிடையான முறையில் இயங்க வேண்டுமென்ற நுண் அவா மனதில் எழுவதுண்டு. அந்த முறையில் செயல்படுவதும் உண்டு.

News image
Updated On :4 மே 2019, 6:30 pm

மனதிற்கு விநோதமான ஓர் இயல்பு உண்டு. எந்த நிலையில் அது இயங்கி வருகிறதோ அதற்கு நேர் எதிரிடையான முறையில் இயங்க வேண்டுமென்ற நுண் அவா மனதில் எழுவதுண்டு. அந்த முறையில் செயல்படுவதும் உண்டு. ஆழ்ந்து நோக்கினால் உலகம் என்பதே எதிரிடைகளின் இயக்கு என்ற உண்மை புலப்படும். அப்பொழுதே மரபான முறையிலும் கவிதையை அமைத்துப் பார்க்கலாமே என்று தோன்றியது.

-ந.பிச்சமூர்த்தி

சொந்த வாழ்வை ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு என்று சமர்ப்பணம் செய்து வாழ வேண்டும்.  தமிழனுடைய கடமையும் ஆகுமென்று நினைக்கிறேன். எதற்கொன்றும் சமர்ப்பணம் செய்யப்படாத வாழ்வு உப்பில்லாத ஊறுகாய். குறிப்பாக இன்றைய இலக்கிய ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம் இன்றியமையாதது. ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார் நடேச தீட்சிதர் என்னும் ந. பிச்சமூர்த்தி.

அவர் இலக்கியத்திற்காகத் தன் வாழ்க்கையைச் சமர்ப்பணம் செய்து கொண்டவர். தத்துவம் படித்தவர். சட்டம் பயின்று கும்பகோணத்தில் சில ஆண்டுகள் வக்கீல் வேலை பார்த்தவர். தினசரி பத்திரிகையான "நவ இந்தியா'வில் எட்டாண்டு காலம் உதவி ஆசிரியராக  பணியாற்றியவர். தமிழ்நாடு அறநிலையத் துறையில் கோயில் நிர்வாக அதிகாரியாக ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி, வேதாரண்யம் உட்பட பல கோயில்களில் பணியாற்றியவர். ஓர் எழுத்தாளர் என்ன மாதிரியான வேலைகள் பார்த்துக்கொண்டு வாழ்கிறார் என்பது முக்கியமில்லை.

அவர் என்ன எழுதுகிறார் என்பது தான் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே தான் பல்வேறு தொழில் செய்பவர்கள் எல்லாம் இலக்கியவாதிகளான பின்னர் அவர்கள் செய்த தொழில்கள் எல்லாம் புறந்தள்ளப்பட்டுக் கலைஞர்களாகவே மதிப்படுகிறார்கள்.

1964-ஆம் ஆண்டில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தின் அருகில் உள்ள ஒரு பெரிய கட்டடத்தில் இருந்து "நவ இந்தியா' என்ற தினசரி வெளிவந்து கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவானது. நான் அடிக்கடி தேவநேய பாவாணர் நூலகத்திற்குச் செல்கிறவன். நூலகத்தில் பிச்சமூர்த்தி எழுதிய "காளி மோகினி'," பதினெட்டாம் பெருக்கு' என்ற சிறுகதைத் தொகுப்புகளை எல்லாம் படித்தேன். அவரின் பல கதைகள் பிடித்திருந்தது. நிகழ்வு, சம்பவம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எழுதியிருந்தார். புரிவது போலவும், புரியாதது போலவும் மயக்க நிலை கொடுத்தப் படைப்புகளில் ஈடுபாடு ஏற்பட்டது.

"எழுத்து' பத்திரிகை ஆசிரியர் சி.சு.செல்லப்பாவிடம் அவரது  சிறுகதைகள் பற்றிப் பேசினேன். அதற்கு செல்லப்பா, அவர் "நவ இந்தியா' வில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். நூலகத்தின் எதிரில் அலுவலகம். பகல் பொழுதில் சென்றால் ஓய்வாக இருப்பார். ஆனால், அதிகம் பேசமாட்டார் என்று கூறினார். அதிகம் பேசாத ஓர் எழுத்தாளரை அவசியம் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. " நவ இந்தியா' அலுவலகத்திற்குச் சென்றேன். நான்கைந்து பேர்கள் நாற்காலியில் அமர்ந்து எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தார்கள். இரண்டொருவர் வெற்றிலைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவரிடம் ""பிச்சமூர்த்தியைப் பார்க்க வேண்டும்'' என்றேன். 

அவர் இரவீந்திரிநாத் தாகூர் போல நீண்ட தாடி மீசை வைத்துக்கொண்டு, கண்களை மூடிய படி நாற்காலியில் அமர்ந்து இருப்பவரைக் காட்டினார். அவர் சிறு வயதினராக இருப்பார் என்று எண்ணிணேன். எனக்கு அப்போது இருபத்து நான்கு வயது. அவர் வயது அறுபத்து நான்கு. கண்புருவத்து மயிரெல்லாம் நரைத்து வெள்ளையாக இருந்தது. பார்ப்பதற்கே பரவசம் ஊட்டுவது போல் இருந்தது. 

""வணக்கம். சா.கந்தசாமி''  என்று கரம் குவித்தேன். அவர் கண்களைத் திறந்து பார்த்தார். தலையசைத்தபடி உட்கார சொன்னார். நாற்காலியில் அமர்ந்தேன்.

""யார், என்ன?'' என்று கேட்டார்.

""நான் உங்கள் சிறுகதைகள், புதுக்கவிதைகள் எல்லாம் படித்திருக்கிறேன். அது பற்றி செல்லப்பாவிடம் பேசினேன். அவர் தான் உங்களைப் பார்க்க சொன்னார்'' என்றேன்.

""நீங்கள் என்ன எழுத்தாளரா? கவிதை, கதை எழுதுகிறவரா?''

""இல்லை. வாசகர் தான். ஆனால் நூலகத்தில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம்'' என்றேன்.

அவர் என் பெயர், ஊர், படிப்பு, வேலை பற்றி எல்லாம் விசாரித்தார். திருமணமாகிவிட்டதா என்று கேட்டார். அவர் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லிக் கொண்டு வந்தேன். கடைசியாக ""நீங்கள் எங்கள் கூட்டத்தில் ஒரு கட்டுரை வழங்கவேண்டும்'' என்றேன். அவர் கறாராக மறுத்துவிட்டார்.

பின்னால் ஒரு நாள் சி.சு.செல்லப்பா வீட்டில் நண்பர் நா.கிருஷ்ணமூர்த்தியுடன் அவரைச் சந்தித்தேன். "காட்டு வாத்து' என்ற புதுக்கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகளை செல்லப்பா படித்துக்கொண்டிருந்தார். செல்லப்பா படிப்பதை அவர் கேட்டுக் கொண்டிருந்தார். நாங்களும் அவரோடு சேர்ந்து கொண்டு கேட்டோம். செல்லப்பா முடிக்கும் எண்ணம் இல்லாமல் உற்சாகத்தோடு படித்துக்கொண்டே போனார்.

பிச்சமூர்த்தி, ""போதும் செல்லப்பா'' என்று நிறுத்தி வைத்தார். அவருக்கு நிறுத்த விருப்பமே இல்லை. ஆனால் பிச்சமூர்த்தி நிறுத்தச் சொன்னதால் நிறுத்தினார். பிறகு புதுக்கவிதைகளுக்கு ஆதரவு பெருகி வருவது பற்றியும், கல்லூரி தமிழாசிரியர்கள் புதுக்கவிதைகள் எழுத ஆரம்பித்து இருப்பது பற்றியும் கூறினார்.

1968-ஆம் ஆண்டில் "வாசகர் வட்டம்' வழியாக லட்சுமி கிருஷ்ணமூர்த்தி "சாயாவனம்' வெளியீட்டு விழாவை அவர் இல்லத்தில் நடத்தினார். "மணிக்கொடி' சீனிவாசன், பி.எஸ்.ராமையா, ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமண்யம், சி.சு.செல்லப்பா, சிதம்பர சுப்பிரமணியம், தி.ஜானகிராமன், அசோகமித்ரன் என்று தமிழ் இலக்கிய உலகம் கூடியிருந்தது.

நாவலை லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வெளியிட, மணிக்கொடி சீனிவாசன் பெற்றுக்கொண்டார். வெளியிடும் போது லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, சா.கந்தசாமியின் "சாயாவனம்" ஒரு புதிய நாவல். அது மரபான கதைச் சொல்லும் நாவல் இல்லை. அதோடு இது இளம் எழுத்தாளரின் முதல் நாவல். எனவே மிக்க மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம். "சாயாவனம்' நாவலை தமிழுலகம் புகழ்ந்து பாராட்டும் என்று நம்பிக்கையோடு குறிப்பிட்டார்.

இரவு விருந்தளித்தார். விருந்துக்கு முன்னும், விருந்துக்குப் பின்னும் பல பெரிய எழுத்தாளர்களோடு கலந்து உரையாட வாய்ப்புக் கிடைத்தது. பிச்சமூர்த்தி வாய்திறந்து ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் பூரணத் திருப்தியோடு என் முதுகில் தட்டிக் கொடுத்தார். அது பாராட்டாகவே இருந்தது. அவர் பெரும் கூட்டத்தில் தனித்து இருந்தார். அது அவரின் இயல்பாகவே இருந்தது. ஆனால் பேசாதவர் இல்லை. பேச வேண்டிய இடத்தில் சரியாகவே பேசினார்.

புதுக்கவிஞர் என்று அறியப்பட்டிருக்கும் ந.பிச்சமூர்த்தி ஆரம்பக் காலங்களில் சிறுகதைகள் தான் எழுதினார். கும்பகோணத்தில் அவர் பக்கத்து வீட்டுக்காரரான கு.ப.ராஜ கோபாலனுடன் சேர்ந்து கொண்டு தமிழில் சிறுகதைகள் எழுதினார். ஆனால், அதற்கு முன்னால் இருபத்தைந்தாவது வயதில் ஆங்கிலத்தில் சிறுகதைகள் எழுதி சென்னையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அவை பிரசுரமாகவில்லை. விரைவிலேயே ஆங்கிலத்தில் சிறுகதைகள் எழுதுவது சரியான காரியம் இல்லையென்றுபட்டது. இனி ஆங்கிலத்தில் எழுதுவதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டார். அவரது தாய்மொழி தெலுங்கு, அதனைப் படிக்கவோ, எழுதவோ கற்கவில்லை. வீட்டில் சில தெலுங்குச் சொற்களோடு தமிழ்ப் பேசத்தான் முடிந்தது. எனவே தனக்கு எழுத உகந்த மொழி தமிழ்தான் என்று சிறுகதைகளைத் தமிழில் எழுதினார். பத்திரிகைகள் வெளியிட்டன. 

பின்னர் பி.எஸ்.ராமையா ஆசிரியராக இருந்த "மணிக்கொடி' யில் எழுதினார். அதனால் "மணிக்கொடி'  எழுத்தாளர் என்றே அழைக்கப்பட்டார். ஆனால், அவர் எந்த அணியிலும் சேரவில்லை.  சிறுகதைகள், ஓரங்க நாடகங்கள் எழுதி வந்தவர் ஐரோப்பிய, அமெரிக்கப் புதுக்கவிதைகளைப் படித்தார். கதைகளை விட கவிதை- அதாவது புதுக்கவிதை அவருக்குப் பிடித்தமானதாக இருந்தது. கவிதை கதையாக இருந்திருக்கிறது. வரலாறாக இருந்திருக்கிறது. மதத்தின் குரலாக அதிகம் இருந்ததில்லை என்று சொல்லிக் கொண்டு கவிதைகளைப் புதிய தொனியில், யாப்பு பயின்று எழுத ஆரம்பித்தார். அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் வருங்காலம் புதுக் கவிதைக்கானதே என்று நம்பினார்.

"ரிக்ஷி' என்று பெயர் வைத்துக்கொண்டு சிறுபாடல்களையும், நீண்ட கவிதைகளையும் எழுதினார். 1970-ஆம் ஆண்டில் பிச்சமூர்த்தி எழுதிய "குயிலின் சுருதி' என்ற மரபுக்கவிதை நூலை வாசகர் வட்டம் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். பல தமிழ் எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார். அதில் நானும் ஒரு எழுத்தாளனாகப் பங்கு பெற்றேன். கவிதைகளின் தத்துவ நோக்கோடு முன்னுரையும் எழுதியிருந்தார்.

"மனதிற்கு விநோதமான ஓர் இயல்பு உண்டு. எந்த நிலையில் அது இயங்கி வருகிறதோ அதற்கு நேர் எதிரிடையான முறையில் இயங்க வேண்டும் என்ற நுண் அவா மனதில் எழுவதுண்டு. அந்த முறையில் செயல்படுவதும் உண்டு. ஆழ்ந்து நோக்கினால் உலகம் என்பதே எதிரிடைகளின் இயக்கு என்ற உண்மை புலப்படும். இந்த மாதிரியான தூண்டுதல் என்னுள் ஏற்பட்டதும் கவிதைகள் எழுதினேன்' என்கிறார். 

அவருக்கு வாழ்க்கையிலும், எழுத்திலும் எதிரிடையான எண்ணங்கள் இருந்தன. இளம் பருவத்திலேயே துறவியாகி விடலாம் என்று திருவண்ணாமலைக்குச் சென்று ரமண ரிஷியைச் சந்தித்தார். அவர் உபதேசம் புரிந்து சீடனாக்கிக் கொள்ளவில்லை. பழங்கனிந்தால் தானாகவே உதிர்ந்துவிடும் என்று திருப்பி அனுப்பிவிட்டார். பின்னால் திருவண்ணா மலைக்குச் சென்று ரமணரைப் பார்த்து பற்றி, "ரமணரைப் பார்த்தேன். ரிஷியைப் பார்க்கவில்லை' என்றார்.

அவர் எப்பொழுதும் பண நெருக்கடியில் தான் இருந்தார். சென்னையில் சில பகுதிகளில் வாடகை வீடுகளில் தான் வாழ்ந்தார். ஆனால் பணம் பண்ணுவதற்கு அவர் எழுத்தைப் பயன்படுத்திக் கொண்டதில்லை.

"குமுதம்' பத்திரிகை பிரபலமான தமிழ் எழுத்தாளர்களிடம் சிறுகதை கேட்டது. சன்மானமாக வைர மோதிரம் அணிவித்தது. பலர் வைர மோதிரம் பெறுவதற்காகக் கதை எழுதினார்கள். பிச்சமூர்த்தி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தார். 

"வைர மோதிரம்'  சிறுகதையொன்று கொடுங்கள் என்று பிச்சமூர்த்தியிடம் கேட்கப்பட்டது. அவர் "வைர மோதிரத்திற்காக எல்லாம் சிறுகதை வராது. எப்பொழுது வருகிறதோ அப்பொழுது தருகிறேன்' என்றார். கடைசி வரையில் அவர் சிறுகதை எழுதி தந்து வைர மோதிரம் பெறவே இல்லை.

அவரது புதுக்கவிதைகள் பிரபலமாகிக் கொண்டு வந்தன. பலரும் பாராட்டினார்கள். அவர் சிறுகதைகளை விட புதுக்கவிதையில் பிரகாசிப்பதாகக்கூட எழுதினார்கள். செல்லப்பா அவரை "மகாகவி' என்று குறிப்பிட்டார். அதற்காக அவரின் புதுக்கவிதையில் இருந்து சில கவிதைகளை எடுத்துக்காட்டினார்கள். அவற்றில் ஒரு புதுக்கவிதை.

மழைக்காலின் மையிருட்டில்
மேகம் குனிய இடி முழங்க,
வீடு வந்த மழையின் கண்ணீர்,
பூக்காரி பொங்கும் குரல்
மையிருட்டில் மேவி ஓங்கி
மழை நீரின் குரலினொடு
பரவிற்று திசையெங்கும்,
""மல்லிகை வேணுமா?
ஜாதி மல்லிகை''

1974-ஆம் ஆண்டில் அவர் சென்னை அமைந்தகரையில் வசித்தார். அவரது உறவினரும், எழுத்தாளருமான பி.வி.சுப்பிரமண்யம் என் நண்பர். அவர் வீட்டிற்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தார். நான் பல நாட்கள் அவரோடும் சுப்பிரமண்யத்தோடும் பேசிக்கொண்டிருந்தேன். சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்த அன்று மாலை அவரைச் சந்தித்தேன். அவர் புளகாங்கிதம் அடைந்த நிலையில் சந்திரன், வான மண்டலம் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். அடிக்கடி இருமினார். அவரை அதிகம் பேச வேண்டாம் என்று சுப்பிரமண்யம் தடுத்துப் பார்த்தார்.

ஆனால் அவர் கேட்கவில்லை. மனிதன் எத்தனை மகத்தான காரியம் செய்து இருக்கிறான். அது பற்றிப் பேசாமல் பிறகு ஏன் வாழ்வது? என்று கேட்டார்.

நான் விடைபெற்றுக்கொண்டேன். பிறகு அவரைப் பார்க்கவில்லை. எழுபத்தைந்தாவது வயதில் காலமாகிவிட்டார் என்ற செய்தியைப் படித்தேன். ந. பிச்சமூர்த்தி அதிகம் எழுதாதவர். அதிகம் பேசாதவர். அதிகம் குறை சொல்லாதவர். பரிசு, விருது, ஓன்றும் பெறாதவர். ஆனால் இல்லாமல் போனவர் இல்லை.  

(அடுத்த இதழில் தி.ஜானகிராமன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.