ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ரோஜா மலரே! - 34: குமாரி சச்சு

நடனம் என்பது ஆண்டவன் எங்களைப் போன்றவர்களுக்கு அளித்த வரப்பிரசாதம். எனக்கு அம்மை நோய் வந்து சில நாட்களே ஆனதால் சோர்வு காரணமாக ஒரு மணி நேரம் தொடர்ந்து நடனம் ஆட முடியுமா என்ற எண்ணம்

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 4:11 pm

நடனம் என்பது ஆண்டவன் எங்களைப் போன்றவர்களுக்கு அளித்த வரப்பிரசாதம். எனக்கு அம்மை நோய் வந்து சில நாட்களே ஆனதால் சோர்வு காரணமாக ஒரு மணி நேரம் தொடர்ந்து நடனம் ஆட முடியுமா என்ற எண்ணம் என் மனதில் இருந்தது.

மேலும்  நானோ,  எனது குடும்பத்தினரோ, எந்த நேரத்திலும் பொய் சொன்னதில்லை. உண்மை, நேர்மை, ஒழுக்கம் இவைகளை இன்று வரை கடைப்பிடித்து வருபவள் நான். எந்த நிலையிலும் கடமை தவறாதவள் என்று எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்தவள். இப்படிபட்ட எனக்கு, தவறாக ஆடக் கூடாது என்ற எண்ணம் உருவானது.  நகைகள் போட முடியாத அளவிற்கு எனக்கு அம்மை நோயின் தாக்கம் இருந்தது.

என் அம்மாவும் பாட்டியும் பக்தி நிறைந்தவர்கள், முண்டக கன்னி அம்மனை வழிபடுபவர்கள். கண்காட்சி மேலாளரிடமும் கூட அதைத் தான் என் பாட்டியும் அம்மாவும் சொன்னார்கள்.  இப்படி உள்ள நிலையில், ஆட வைத்து விட்டோமோ  என அவர் பயந்த வேளையில், தெய்வ குற்றம் ஆகிவிடுமோ என அவர் நினைத்த போது கூட, ""எங்கள் அம்மன் அப்படி எதுவும் செய்ய மாட்டாள். உண்மையைச் சொன்னோம், நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் பரவாயில்லை. எங்கள் அம்மன் நல்லதே செய்வாள், கவலைப்பட வேண்டாம்'' என்று சொல்லி மேலாளரின் பயத்தைப் போக்கினர். உண்மையைச்  சொல்லப் போனால் நான் சாதாரணமாக ஆடும் நடனத்தை விட அன்று சிறப்பாக,  ஆடினேன். இதற்கு, என் நடனம் மட்டும் அல்ல; அம்மனின் கருணையும் தான் காரணம். 

இதே போன்று வேறு ஒரு நடன நிகழ்ச்சியிலும் எனக்கு ஓர் சுவையான அனுபவம் ஏற்பட்டது. விழுப்புரம் அருகில் ஒரு கிராமம், அந்தக் கிராமத்தில் உள்ள சில பெரிய மனிதர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு நடன நிகழ்ச்சி நடத்தி, அதில் கிடைக்கும் பணத்தில் அந்தக் கிராமத்திற்கு  நல்லது செய்ய முடிவு செய்தார்கள். அந்த நடன நிகழ்ச்சிக்காக என்னை அணுகி ஒப்பந்தம் செய்தார்கள். நாங்களும் ஒப்புக் கொண்டோம். சென்னைக்கு அருகில் தானே விழுப்புரம் என்பதாலும், எங்கள் நடன நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு தொடங்கும் என்பதால், காலையிலேயே இசைக்குழுவை அனுப்பி விட்டு நாங்கள் ஒரு வேனில் கிளம்பினோம். 

அன்று ஷெவெர்லேட் (Cheverlet) வேன் என்று சொல்வார்கள். சுமார் 8 பேர் அமர்ந்து  செல்ல முடியும். அந்த வேனை எடுத்து கொண்டு கிளம்பினோம். விழுப்புரம் வர சுமார் 15 கி. மீ இருக்கும் பொழுது திடீரென்று வேன் நின்று விட்டது. நாங்கள் போகவேண்டியது கிராமம் விழுப்புரத்தை விட்டு சில கிலோமீட்டர் தூரம் தாண்டி இருந்தது.  நேரம், சாயங்காலத்தைக் கடந்து இருட்டி விட்டது. எங்கள் வண்டி ஓட்டுநர்  வண்டியை சரி செய்யும் முயற்சியில் இறங்கினார். ஆனால் வண்டி நகர மாட்டேன் என்று அடம் பிடித்தது. 

இதை சரி செய்ய  அரை மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டது. என்ன செய்வது என்று புரியாமல் நான் அவரிடம்   கேட்க நினைத்து அருகில் செல்ல, எதிரே ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இவர் லாரியின் முன் சென்று நிறுத்துங்கள் என்று கையைக் காண்பிக்க, லாரி நின்றது. வேன் நின்று போனதன் காரணத்தை இவர் கூற, அந்த லாரி ஓட்டுநர் எங்களைப் பார்த்துக் கொண்டே வந்து நாங்கள் சென்ற  வேனின் இருக்கையில் அமர்ந்தார். 

உட்கார்ந்து கொண்டு வேனின் அடிப்பாகத்தில் பார்த்தார். எங்கள் ஒட்டுநரிடம் வந்து, “""ஆக்ஸ்சில் உடைந்து விட்டது. இருட்டிவிட்டது. அதைச் சரி செய்யபட்டறைக்கு எடுத்துப் போகவேண்டும். அதனால் இங்கேயே நின்று கொண்டு இருக்காமல் ஆக வேண்டிய வேலையைப் பாருங்கள்''” என்றார்.

இதை  கேள்விப்பட்ட நாங்கள் ஆக்ஸ்சிலை விட ரொம்பவே உடைந்து போய் விட்டோம்.  இதற்குள் இரவு ஏழு மணியை தாண்டி விட்டது. இன்று போல் அன்று கைபேசி எல்லாம் கிடையாது. அதனால் நாங்கள் இருக்கும் நிலையை நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவருக்குத் தெரிவிக்க முடியவில்லை.  ஒரே ஒரு தேநீர் கடை மட்டும் இருந்தது. அந்த சமயத்தில் ஒரு ஸ்கூட்டர் வர, எங்கள் ஓட்டுநரை கூப்பிட்டு ""இவருடன் சென்று ஒரு வேனை பிடித்து அழைத்து வாருங்கள். நாங்கள் அந்த வேனில் செல்கிறோம். நீங்கள் நிதானமாக இந்த வேனை சரி செய்து பின்னர் எடுத்து வாருங்கள்'' என்றோம். அவரும் அந்த ஸ்கூட்டர் ஓட்டுபவருடன் சென்றார். அதற்குள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கலாட்டாவாகிவிட்டது. “சினிமாகாரர்களை கூப்பிட்டால் இது மாதிரி தான் நடக்கும். வரேன் என்று சொல்லி விட்டு  வராமல் ஏமாற்றி விடுவார்கள்”, என்று சொல்லி பலரும் பலவிதமான சொற்களை அடிக்கிக் கொண்டிருந்தார்கள் என்று பின்னர் கேள்விப்பட்டோம்.  

தவறு எங்கேயும் நிகழும். அதில் சினிமாவை சேர்ந்தவர் யாராவது இருந்தால் அவர்கள் மீது குற்றம் சாட்டி மற்றவர்கள் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பது, இன்று கூட நடந்து கொண்டு தான் இருக்கிறது. யாராவது எங்காவது ஒரு தவறு செய்தால், எல்லாவற்றையும் சினிமாகாரர்கள் மீது தொடர்ந்து ஏன் பழி போட வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. 

வேறு வேன் வந்து எங்களை அழைத்துக் கொண்டு போவதற்கு முன், எங்களுக்கு ஒரு ங்ய்ற்ங்ழ்ற்ஹண்ய்ம்ங்ய்ற் கிடைத்தது. நாங்கள் அநாதையாய் நின்ற கிராமத்திற்குள் ஒரு தெருகூத்து நடக்க இருந்தது.  நீங்கள் வந்து பார்த்து விட்டு போக வேண்டும் என்று அந்தக் கிராமத்து மக்கள் கேட்டார்கள். வேன் வரும் வரை சென்று அங்கு உட்கார்ந்தால் போதும்  என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அவர்களது அழைப்பை  தட்ட முடியவில்லை.  நாங்கள் போய் அங்கு உட்கார்ந்தோம். வேன் வந்து எங்களை அழைத்துச் சென்று நாங்கள் விழுப்புரம் அடைந்த போது, சுமார் 8 மணிக்கு மேல் ஆகிவிட்டது. நாங்கள் வந்த விவரத்தை கூட்டத்தினருக்கு  சொல்லி, காலதாமதம் நிகழ, வேன் இடையில் நின்றுவிட்டது தான் காரணம் என்றும், இன்னும் சிறிது நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கும் என்று ஒலிபெருக்கியில் கூறிவிட்டு, மேக்கப் மற்றும் உடை மாற்றும் அறைக்குச் சென்றோம்.  

எப்பொழுதுமே நாங்கள்  பரதநாட்டியதை மட்டுமே ஆடுவோம். சினிமா பாடல்களை ஆட மாட்டோம். நாங்கள் எங்கள் நிகழ்ச்சியை எவ்வளவு விரைவாக நடத்த முடியுமோ, அவ்வளவு விரைவாக நடத்த முடிவு செய்து, முதல் பாதியில் சிறிய சிறிய நடனங்களை ஆடினோம். என்னுடன், சில  பெண்களும் ஆடினார்கள். முதல் பாதியில் சில பதங்களை செய்து விட்டு, பிற்பாதியில் மிகவும் கடினமானப் பாடல்களை ஆடுவோம். அதன்படி ஒரு இடைவேளை விட்டு விட்டு, நாங்கள் திரையின் இடையே பார்த்த போது, எல்லோரும் எழுந்து வெளியே போய் கொண்டிருந்தார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நேரம் பார்த்தால் இரவு 10.30 மணிக்கு மேல் ஆகிவிட்டது. எல்லோரும் போய் விட்டால் யாருக்கு ஆடுவது என்று புரியாமல் நாங்கள் பிரமை பிடித்தப்படி நின்றிருந்தோம்.  நடன நிகழ்ச்சி தொடர்ந்ததா? 

 (தொடரும்)

சந்திப்பு: சலன் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.