ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ரோஜா மலரே! - 25: குமாரி சச்சு

"மரகதம்'” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம்,  டி.எஸ்.துரைசாமி எழுதிய நாவல். அந்த நாவலின் பெயர் "கருங்குயில் குன்றத்து  கொலை'”. இதில் இன்னொரு சிறப்பு இருக்கிறது. இந்தப் படத்தில் தான் சந்திரபாபு பாடிய

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 4:14 pm

"மரகதம்'” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம்,  டி.எஸ்.துரைசாமி எழுதிய நாவல். அந்த நாவலின் பெயர் "கருங்குயில் குன்றத்து  கொலை'”. இதில் இன்னொரு சிறப்பு இருக்கிறது. இந்தப் படத்தில் தான் சந்திரபாபு பாடிய என்றும் மறக்க முடியாத  "குங்கும பூவே கொஞ்சும் புறாவே', என்ற பாடல் இடம் பெற்றது. ஆனால் நான் நடனமாடியது வேறு ஒரு பாடலுக்கு. 

"பச்சை கிளி போல பவழ மலர் போல' என்ற பாடல் வரிகளுக்கு  என்னுடன் சில குழந்தைகளும் ஒன்றாக இணைந்து நடனமாடினோம். 

காட்சிப்படி பாலையா அண்ணன் வீட்டிற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வருவார். பத்மினி அம்மாவும் அந்தக் காட்சியில் இருப்பார். வீட்டில் உள்ள குழந்தைகள் அவர்களை வரவேற்பது போல காட்சி அமைத்திருந்தார்கள். இந்த நடனத்திற்கு இயக்குநராக இருந்து சிறப்பாக அமைத்தது ஹீரலால் மாஸ்டர். நான் முதலில் நடித்த படம் "“ராணி'”. இதை நான் முன்பே குறிப்பிட்டு இருந்தேன். 

அந்தப் படத்திற்கும் நடன இயக்குநர் ஹீரலால் தான். சினிமாவில் முதலில் ஒரு நடன இயக்குநர் காலை தொட்டு வணங்கி, நான் நடனம் கற்றுக்கொண்டது இவரிடம்தான். “"ராணி'” படத்தில் நடிக்கும் போது எனக்கு  4 வயது இருக்கும். அந்த வயதில் ஒரு குழந்தைக்கு என்ன தெரியும். அன்று எனக்குப் பொறுமையாக இப்படி நிற்கணும், இந்த இடத்திற்கு மேல் நீ நடனம் ஆடியபடி சென்றால் பிரேமுக்கு வெளியே சென்று விடுவாய் என்று பொறுமையாக சொல்லி, என் சினிமா நடனத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டார் அந்த நடன மாஸ்டர். பின்னர் நான் கதாநாயகியாக நடித்த பல படங்களுக்கு நடன இயக்குநராக இருந்து உள்ளார்.

குழந்தையாக இருந்த பொழுது எனக்குப் பல விஷயங்கள் தெரியாத நிலையில் கூட நடனம் பற்றிய சின்னச் சின்ன விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்தார். இந்த “"மரகதம்'” படத்தில் "ஒரு கஷ்டமான நடன அசைவு இருக்கு பண்ணுவியா'” என்று என்னிடம் கேட்டார் "சரி' என்று சந்தோஷமாகத் தலை ஆட்டினேன். ஏனென்றால் நான் முடியாது என்று எப்போதும் சொல்ல மாட்டேன். எது என்றாலும் முதலில் நான் பண்ணிப் பார்க்கிறேன். அப்புறம் அது சரியாக வர வில்லை என்றால் வேறு யாராவது செய்யட்டும் என்று தான் நான் சொல்வேன். அவர் கொடுத்த எல்லா நடன அசைவுகளையும் நான் சிறப்பாக செய்ய எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. 

படத்தில் நடனம் என்றவுடன் நிஜத்தில் நடனம் பற்றிய ஒரு நிகழ்ச்சியை இந்த இடத்தில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. எனக்கு 12 வயது இருக்கும். அன்று காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி என்று என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் மறைந்த சி. சுப்ரமணியம். அவரது வீட்டிற்கான பல்வேறு விசேஷங்கள் அனைத்திற்கும் நானும் எங்க அக்காவும் நடனம் ஆடி இருக்கோம். அதனால் எங்களைப் பற்றியும், எங்கள் நடனத்தைப் பற்றியும் நன்றாகத்  தெரிந்தவர் அமைச்சர் சி.சுப்ரமணியம். அதனால் காரைக்குடி கல்லூரி என்று வந்தவுடன் எங்களை நினைவில் வைத்துக் கொண்டு அந்தக் கல்லூரி விழாவில் எங்கள் இருவரையும் ஆட வைக்கலாம் என்று அவர் யோசனை செய்திருக்கிறார். 

அதற்குள் பல்வேறு யோசனைகளைப் பலரும் சொல்ல, எல்லா யோசனைகளையும் அமைச்சர் முன் வைத்து அவரது யோசனை என்ன என்று கேட்டு விடலாம் என்று அரசு செயலாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள் . அமைச்சர் முன் எல்லோரும் தங்களது யோசனைகளைக் கூற, இந்த  விழாவை சிறப்பாக நடத்த என்ன செய்யலாம் என்று எல்லோரும் யோசனை செய்யும் போது, சி.எஸ். திடீரென்று "மாடிலட்சுமி - சச்சு நடன நிகழ்ச்சி நடத்தி கோலாகலமாக இந்த விழாவை சிறப்பாக முடித்து விடலாம்' கூறிவிட்டார். 

எல்லோரும் சரி என்பது போல், தலையாட்டி விட்டு வந்தார்கள். எங்களுக்கு இந்த செய்தியை சொல்ல, எங்கள் வீட்டிற்குத் தொலைபேசியில் அழைப்பு வந்தது. நாங்கள் சந்தோஷமாகக் கல்லூரி விழாவில் நடனமாட தயாரானோம். இதிலும் ஒரு பிரச்னை உள்ளது என்று பின்னர் தான் எங்களுக்குத் தெரிந்தது. அவர்கள் சொன்னது எங்களுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், இது எல்லாம் சாத்தியமாகுமா என்று நான் அவர்கள் சொன்னதை மிகவும் தயக்கத்துடன் சிந்தித்துப் பார்த்தேன். அரசு அலுவலர்கள் எங்களிடம் வந்து சொன்ன விஷயம் என்ன தெரியுமா? “நாங்கள் அமைச்சரிடம் சொல்லவில்லை. கல்லூரியில் பெண் பிள்ளைகள் யாராக இருந்தாலும் 12 வயதுக்குள் இருந்தால் மேடையில் நடனம் ஆட அனுமதிப்பார்கள். அதற்கு மேல் என்றால் அனுமதிக்க மாட்டார்கள் தான். இந்த நடன அரங்கமோ கல்லூரிக்குள் தான் இருக்கிறது. அதனால் எங்களை தவறாக நினைக்க வேண்டாம். மாடி லட்சுமியை நாங்கள் ஆட வைக்க முடியாது. சச்சுவை மட்டும் ஆட வைக்கலாம். அதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும்”, என்று சொல்ல, நான் மிகவும் சிந்தித்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே,  என் அக்கா மாடி லட்சுமி, எந்த விதமான யோசனையும் செய்யயாமல், “"இவ்வளவு தானே. சரி, சச்சு மட்டும் வந்து கண்டிப்பாக ஆடுவாள்' என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். 

அவர்கள் சென்ற உடனேயே என் அக்காவிடம் வந்து, "“ஏன் என்னை மட்டும் நீ மாட்டி விடுகிறாய் ?' என்று நான் கேட்டேன்”. அதற்கு என் அக்கா சொன்ன பதில் என்னை வாழ்த்துவதாக எனக்குப் பட்டது. அக்கா சொன்னார், “""என்னுடன் ஆடும் போது நீ முழு நிகழ்ச்சியையும் பார்த்து இருக்கிறாய். அப்புறம் என்ன, உனக்கு நன்றாக நடனம் ஆட வரும். ஒரு நடனத்திற்குப் பின் என்ன நடனம் வரும் என்று உனக்கு நன்றாகவே தெரியும். ஜதி, முக  பாவங்கள் எல்லாம் தெரிந்த நீ, கண்டிப்பாக முழுநடனத்தையும் சிறப்பாக ஆட முடியும். எதற்கு நீ பயப்படுகிறாய் என்று எனக்குத் தெரியவில்லை'', என்று கூறினார். நான் சந்தேகத்துடனேயே நிற்க, "நான் உனக்கு நட்டுவாங்கம் செய்றேன்' என்று கூற நான் அரை மனதுடன் சரி என்று சொன்னேன். 

அதற்குப் பிறகு காரைக்குடிக்கு போகும் வரை இதைப் பற்றி நான் நினைக்க வில்லை. அந்த நாளும் வந்தது. எல்லோரும் காரைக்குடிக்கு, அந்த அழகப்பா பாலி டெக்னிக் கல்லூரிக்குச் சென்றோம். காரில் போகும் போதே அக்கா எனக்கு ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே வந்தார். நானும் கேட்டுக்கொண்டே வந்தேன். மேடையில் ஆட வேண்டிய நாளில், நான் எந்த விதமான பயத்துடனும் இல்லாமல் ஆடினேன். என் அக்கா என்னை அந்த அளவிற்குப் பயற்சி கொடுத்து, ஊக்கப்படுத்திக் கொண்டே வந்தார். மேடையில் நானும் மிகவும் சிறப்பாக ஆடினேன். எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். 

இங்கே அந்த மாணவர்களைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒவ்வொரு மாணவரும், என் நடனத்தைப் பார்த்து ரசித்தார்கள் என்று கண்டிப்பாக சொல்லலாம். மானவர்களுக்கே உரித்தான கூச்சல் இருந்தது, குழப்பம் இல்லை. கைதட்டல் இருந்தது. கரகோஷம் இருந்தது. இப்படி வெற்றிகரமாக என் நடன நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது. அடுத்த நாள் கிளம்ப வேண்டிய எங்களை வேறு சில நிகழ்ச்சிகளையும் பார்த்து விட்டுப் போகச் சொன்னார்கள். அவர்களது அன்பிற்குக் கட்டுப்பட்டு நாங்களும் அடுத்த நாள் மாலை அரங்கத்திற்கு சென்றோம். 

மாணவர்களின் கலை நிகழ்ச்சியைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டோம். காரணம், அவர்களுக்குள் அவ்வளவு திறமை இருந்தது. பார்த்து விட்டு முடியும் தருவாயில் ஒலி பெருக்கியில், என்னை மேடைக்கு அழைத்தார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் அக்காவை பார்க்க, அவர் என்னைப் பார்க்க, மாணவர்கள் சிலர் எங்களை வந்து மேடைக்கு அழைத்துப் போக வந்தார்கள். அக்காவை “ஒலி பெருக்கியில் அழைத்த பின்னர், நாம் போகாமல் இருபது முறையில்லை. வாருங்கள் போவோம்”, என்று சொல்லிக் கொண்டே, என்னைக் கைப் பிடித்து அழைத்துக் கொண்டு மேடை ஏறினார் அக்கா மாடி லட்சுமி. நானும் அவருடேனேயே சென்றேன். 

நாங்கள் இருவரும் மேடை ஏறியதை பார்த்தவுடன் மாணவர் கூட்டத்தில் சலசலப்பு . அறிவிப்பாளர் எங்கள் இருவரையும் பெயர் சொல்லி பெருமையாகப் பேசினார். என் நடனத்தைப் புகழ்ந்து, பாராட்டினர். அத்துடன் விட்டுவிடவில்லை. மாணவர்கள் எல்லோரும் கூட்டாக இணைந்து எங்களுக்குப் பரிசு ஒன்றை கொடுக்க ஆசைப்படுவதாகத்  தெரிவித்தார்கள். எனக்கும் என் அக்கா மாடி லட்சுமிக்கும் ஒன்றுமே புரியவில்லை. எல்லோர் முன்னிலையிலும் எனக்கு ஒரு பரிசு கொடுத்தார்கள், அந்தக் கலை உணர்வு மிக்க மாணவர்கள். அவர்கள் கொடுத்த பரிசு உயர்ந்த பரிசு. மக்கள் எல்லோரும், என்றும் விரும்பும் பரிசு. என்ன பரிசாக இருக்கும். அடுத்த வாரம் சொல்கிறேன்.  

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.