சேவையால் திருப்தி!
உலகின் முன்னணி கால்பந்து நட்சத்திர வீரரான சாடியோ மானே ஆடம்பரத்தை விட, சேவையே தனக்கு ஆத்ம திருப்தி தருகிறது என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


உலகின் முன்னணி கால்பந்து நட்சத்திர வீரரான சாடியோ மானே ஆடம்பரத்தை விட, சேவையே தனக்கு ஆத்ம திருப்தி தருகிறது என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் சாடியோ மானே (28), உலக கால்பந்து வட்டாரத்தில் பிரபலமான வீரர் ஆவார். இங்கிலாந்தின் பிரசித்தி பெற்ற ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில் முதலிடம் வகிக்கும் லிவர்பூல் கிளப் அணியில் பார்வர்ட், விங்கர் நிலையில் ஆடி வருகிறார். வாரத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடியே 84 லட்சம் வருவாய் பெறுகிறார் மானே.
மைதானத்தில் சாடியோ மானேவின் திறமை எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் அவர் ரசிகர்களால் விரும்பப்படுவதற்கு அவரது விளையாட்டு திறமை மட்டும் காரணமல்ல. மைதானத்திற்கு வெளியில் அவரது பணிவு மற்றும் தாராள மனப்பான்மை கால்பந்து ரசிகர்கள் மாத்திரமல்ல, அனைவரும் விரும்பும் ஒன்று.
மிகவும் பின்தங்கிய செனகல் நாட்டின் செதியோ பகுதியில் கடந்த 1992 ஏப்ரல் மாதம் பிறந்த சாடியோ மானே உள்ளூர் கால்பந்து அகாதெமியில் பயிற்சி பெற்றார். பின்னர் தீவிர ஈடுபாடு கொண்ட அவர், 19 வயதில் தொழில்முறை கால்பந்து வீரராக மாறினார். பிரான்ஸின் லீக் 2 கால்பந்து தொடரில் மெட்ஸ் அணியில் இடம் பெற்று ஆடினார். அதன்பின் 2012-14-இல் ஆஸ்திரியாவின் ரெட்புல் சால்ஸ்பர்க் அணியில் இடம் பெற்ற அவர், 2014-16-இல் இங்கிலாந்தின் செளதாம்ப்டன் கிளப் அணியில் ஆடினார். பின்னர் 2016 முதல் முன்னணி கிளப் அணியான லிவர்பூலில் இடம் பெற்று ஆடி வருகிறார்.
லிவர்பூல் அணியில் இடம் பெற்றதே சாடியோ மானே வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.34 மில்லியன் யூரோ மதிப்பில் அவர் வாங்கப்பட்டார். அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமை மானே வசம் உள்ளது.
சாம்பியன்ஸ் லீக் தொடர் வெற்றி நாயகன்: கடந்த 2018-19 சீசனில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற நிலையில் ப்ரீமியர் லீக் தங்க காலணியைப் பெற்றார். மானேவின் அற்புத ஆட்டத்தில் லிவர்பூல் அணி 2018 யுஇ"ஃ"எப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டி இறுதிக்கு முன்னேறியது. இதன் தொடர்ச்சியாக 2019-இல் போட்டியிலும் மானேவின் அபார ஆட்டம் லிவர்பூல் அணியை சாம்பியன் பட்டம் வெல்லச் செய்தது. மேலும் பி"ஃபாவின் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் 5-ஆம் இடத்தைப் பெற்றார் மானே. சர்வதேச அளவில் 19 கோல்கள்-செனகல் தேசிய கால்பந்து அணியில் மொத்தம் 69 சர்வதேச ஆட்டங்களில் ஆடிய மானே 19 கோல்களை அடித்துள்ளார். ஒலிம்பிக் மற்றும் பி"ஃ"பா உலகக் கோப்பை போட்டிகளில் தனது அணியை இடம் பெறச் செய்தார்.
ஆப்பிரிக்காவின் சிறந்த வீரர்: கடந்த 2019-இல் ஆப்பிரிக்க கண்டத்தின் சிறந்த வீரர் என்ற விருதையும் அவர் வென்றார். தலை மற்றும் கால்களால் கோலடிப்பதில் நிபுணர். வேகம், பந்தை கடத்துதல், கட்டுப்படுத்துதல், முடிவெடுத்தல், வியூகம் அமைத்தல் போன்றவற்றின் மூலம் கோலடிக்கவும், பிற வீரர்கள் கோலடிக்கவும் உதவி புரிபவர் என்ற பெயரும் மானே வசம் உள்ளது. லீக் கால்பந்து போட்டிகளில் 346 ஆட்டங்களில் ஆடி 149 கோல்களை அடித்துள்ளார்.
சிறுவயதில் கால்பந்து ஆட தடை: சிறுவயதில் அவரது தந்தை சாடியோ மானே கால்பந்து ஆட தடைவிதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைதியான சுபாவம் கொண்ட மானே, 7 வயதிலேயே தனது தந்தை உடல்நலன் குன்றி போதிய மருத்துவ வசதி இல்லாத நிலையில் உயிரிழந்ததால் மன வேதனைக்கு ஆளானார்.
இது தொடர்பாக சாடியோ மானே கூறியதாவது: 7 வயதில் மைதானத்தில் ஆடிக் கொண்டிருந்த போது, எனது தந்தை இறந்து விட்டார் என உறவினர் வந்து கூறினார். ஆனால் அதை நான் நம்பாமல் ஏன் ஜோக்கடிக்கிறீர்கள் என கேட்டேன். பின்னர் தான் தந்தை இறந்தது உண்மை என்றும், கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்க பம்பாலியில் மருத்துவமனை இல்லாததும் தெரியவந்தது. மேலும் பாரம்பரிய மருந்துகளை அளித்தும் தந்தை உயிர் பிழைக்கவில்லை. எனது குடும்பத்தினர் பம்பாலியின் இமாம்களாக பணி செய்து வந்தனர். எவருக்கும் நான் கால்பந்து ஆடுவது பிடிக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் கால்பந்து ஆடக்கூடாது என வலியுறுத்தினர்.
தப்பி ஓட்டம்: ""கால்பந்து ஆட்டத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட நான் இதனால் தான் 15 வயதில் அதிகாலை 6 மணிக்கு மூட்டை முடிச்சுகளுடன் ஜாம்பியாவுக்கு தப்பி ஓடிவிட்டேன். பின்னர் என்னை கண்டுபிடித்து அழைத்துச் சென்றனர். அந்த நாள் தான் மிகவும் மோசமானதாக அமைந்தது. பின்னர் பள்ளிப் படிப்பை முடித்தவுடன், கால்பந்து ஆடலாம் என அனுமதித்தனர். இதன் தொடர்ச்சியாக கிடைத்த பேரும் புகழையும் எனது சொந்த நாட்டின் நலனுக்கு பயன்படுத்த நினைத்தேன். மருத்துவமனையின்றி தந்தை இறந்ததால், பம்பாலியில் பெரிய மருத்துவமனை, பள்ளி போன்றவற்றை அமைத்தேன்'' என்றார் மானே.
ஆடம்பரம் தேவையில்லை: மேட் இன் செனகல் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மானே பம்பாலியில் மருத்துவமனை, பள்ளி, மசூதியை கட்ட 2,50,000 அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளார். பல கோடி சம்பாதிக்கும் சாடியோ உடைந்த செல்போனுடன் மக்கள் மத்தியில் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
ஆடம்பர வாழ்க்கை எனக்கு தேவையில்லை. 100 "ஃ"பெராரி கார்கள், 20 வைர வாட்ச்கள், அல்லது 2 விமானங்கள் இருந்தால், அவை எனக்கோ அல்லது உலகத்துக்கோ என்ன செய்யும். கடந்து வந்த பாதையை என்றும் மறக்கக் கூடாது. நான் சிறுவயதில் வறுமையுடன் வளர்ந்தவன். சாப்பாடு கிடைக்காது. பள்ளிக்குச் செல்ல முடியாது. காலில் அணிவதற்கு செருப்பு கிடையாது. ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டை கூட வெறும் காலில் தான் விளையாடுவேன். ஆனால், இன்று நிறைய சம்பாதிக்கிறேன். சம்பாதித்த பணத்தை என்னுடைய இஷ்டப்படி செலவு செய்தால் ஆடம்பர வாழ்க்கை வாழலாம். எனக்கு அந்த வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை. நான் சம்பாதித்த பணத்தில் மக்கள் படிக்கும்படி பள்ளிகளை உருவாக்கியுள்ளேன்.என் நாட்டில் உள்ள ஏழை குழந்தைகளுக்குப் புதிய காலணிகளும், உடைகளும் வாங்கி கொடுக்கிறேன். அவர்களுக்குத் தேவையான உணவும் வழங்குகிறேன். இது எனக்கு ஆத்ம திருப்தியை அளிக்கிறது'' என்கிறார் சாடியோ மானே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...