ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ரோஜா மலரே! - 30: குமாரி சச்சு

எங்களை மாதிரி நடனம் ஆடுபவர்கள் எல்லாம் மேடையில் நடனம் ஆடும் போது பத்துப் பாடல்கள் மட்டுமே தெரிந்தவர்களாக என்றும் இருக்க மாட்டோம். காரணம், பலர் இந்தப் பாட்டுக்கு நடனம் ஆடத் தெரியுமா? எனக்

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 4:15 pm

எங்களை மாதிரி நடனம் ஆடுபவர்கள் எல்லாம் மேடையில் நடனம் ஆடும் போது பத்துப் பாடல்கள் மட்டுமே தெரிந்தவர்களாக என்றும் இருக்க மாட்டோம். காரணம், பலர் இந்தப் பாட்டுக்கு நடனம் ஆடத் தெரியுமா? எனக் கேட்பார்கள்.இந்த மாதிரி ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எங்களுக்குப் பல விண்ணப்பங்கள் வரும். நாங்களும் சளைக்காமல் ரசிகரின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து  நாங்கள் முடிவு செய்து வைத்திருக்கும் ஓரிரு பாடலை, மீறி திடீரென்று கேட்டாலும் ஆடிக் காண்பித்து விட்டு வீடு திரும்புவோம்.

இது சகஜமாக நடக்கிற ஒரு விஷயம் தான். இதில் எங்கள் லிஸ்டில் இல்லாத பாடலைக் கேட்டால் பரவாயில்லை. சில சமயம் தில்லானாவை மாற்றிக் கேட்பார்கள். அதே போல் ஜாவளியைக் கூட வேறாக கேட்பார்கள். அதையும் எங்கள் மாஸ்டர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததினால் ஆடி சமாளித்து விடுவோம். பரத நாட்டியத்தில் இப்படிப் பல்வேறு வகையான பாடல்கள், கீர்த்தனைகள், ராகங்கள் என்று இருப்பதினால் நாங்கள் பல கீர்த்தனைகள், ராகங்கள் உள்பட பல்வேறு பாடல்களை, ஜாவளிகளைக் கற்கும் போதே கற்றுப் பயிற்சி செய்து கொள்வோம். 

சில பாடல்களைக் கற்றுக்கொடுக்கும் சிறப்பான சில ஆசிரியர்களிடம் போய்க் கற்றுக் கொண்டு வருவோம். இப்படிக் கற்றுக் கொடுப்பவர்கள் பலர் அன்று இருந்தார்கள். அவர்கள் ஒரு பாட்டுக்கு இவ்வளவு பணம் என்று கூறி கற்றுக் கொடுப்பார்கள். இவர்கள் கற்றுக் கொடுப்பது சில நாட்கள் தான். அதற்குப் பிறகு நாம் அவர்கள் கற்றுக் கொடுத்ததை, காலையிலும் மாலையிலும் பயிற்சி செய்து மேடையில் ஆடவேண்டும். 

அப்படிபட்டவர்களில் ஒருவர் தான்  ஆசிரியர் கெளரி அம்மாள். அன்று மயிலாப்பூரில் புகழ் பெற்றவர் . அதே மாதிரி கந்தர்சஷ்டி சமயத்தில் எல்லாம் தேவகோட்டையில் முருகன் பெயரில் தான் வர்ணம் ஆடவேண்டும் என்று கேட்பார்கள் அதையும் நாங்கள் தெரிந்து வைத்துக் கொண்டு போவோம். அதையும் மீறி சில ஆசிரியர்கள் பெயரைச் சொல்லி இவர்கள் பாணி, உங்களுக்குத் தெரியுமா என்று கேட்கும் போது, எங்களுக்குத் தெரியும் என்று சொல்லும் வண்ணம் அதை மேடையில் ஆடிக் காட்ட வேண்டும். 

இது எல்லாம் எங்களுக்கு என்றும் சோதனையாகத் தெரிந்தது இல்லை. ஆனால் இதை விட ஒரு மிகப் பெரிய பரீட்சை எங்களுக்கு வைக்கப்பட்டது. அது, நாங்கள் எதிர்பார்க்காத வகையில் எங்களுக்கு வந்தது. திடீரென்று ஒரு புதிய பாடலைக் கொடுத்து, ஆடச்  சொன்னால் ஆடுவீர்களா என்று கேட்டது போல்  இருந்தது. ஆனால் கேட்டது அரசர் என்றால் எப்படி மாட்டேன் என்று சொல்ல முடியும். எங்களது நடனத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் மைசூர் மஹாராஜா. அவர் தமிழக ஆளுநராக இருந்தது 1964 முதல் 1966 வரை என்று நினைக்கிறேன். அப்பொழுது    state of Madras  என்று இந்த மாநிலத்தின் பெயர் இருந்தது. அவரது பெயர் ஜெயசாமராஜ உடையார். இவரே ஒரு கர்நாடக இசை மேதைதான். 

சுமார் 94 பாடல்களை எழுதி இருக்கிறார். அவற்றிக்கு அவரே இசையமைத்து, எந்த ராகத்தில் பாட வேண்டும் என்றும், ராகங்களின் பெயரை எழுதியும் வைத்துள்ளார். இவர் கர்நாடக இசை மட்டும் அல்ல, ஆங்கில இசையும் தெரிந்தவர். இவர் குதிரை ஏற்றத்தில் திறமையும் பயிற்சியும் பெற்றவர்.  இவர் எழுதிய 94 பாடல்களையும் இவரது மாப்பிள்ளை ஆர்.ராஜா ஒரு புத்தமாகப் பதிப்பித்துள்ளார். அந்த நூலின் பெயர் “"வித்யா கான வாரிதி'”.    Sree Vidyaa Gaana Vaaridhi என்பது நூலின் பெயர். இந்த மஹாராஜா மைசூரில் மூன்று கோயில்களையும் கட்டியிருக்கிறார். அவை மைசூரில் உள்ள  புவனேஸ்வரி கோயில், காயத்ரி கோயில், காமகாமேஸ்வரி கோயில், இந்தக் கோயில்களை வடிவமைத்துச் செதுக்கியவர் சிற்பி ஸித்லிங்க ஸ்வாமி.   

வி.வி.நாயுடு என்ற புகழ் பெற்றவர் ஒருவரின் வீட்டில் எங்களது நடனம் நடந்தது.  பெரும் புள்ளிகள் பலரும் இந்த நடன நிகழ்ச்சியைக் காண வந்திருந்தனர்.  ஆளுநராக இருந்த ஜெயசாமராஜ உடையாரும் விழாவிற்கு வந்திருந்தார். 

ஆளுநர் வருகிறார் என்பதனால் ஒரு மணிநேர நடன நிகழ்ச்சிதான் என்று சொல்லி விட்டுச் சென்றார்கள். அதனால் புகழ் பெற்ற பாடல்கள், அதற்கேற்றவாறு சில வர்ணங்கள் என்று எங்களுக்குத் தெரிந்த சில சிறப்பானவற்றை வரிசை படுத்தி வைத்திருந்தோம். அந்த நாளும் வந்தது. எங்கள் நடனம் ஆரம்பமாகியது. ஒவ்வொரு பாட்டுக்கும்  நடனம் ஆடி மக்களை மகிழ்வித்து, எங்கள் நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தோம்.

தில்லானா வரும் வேளையில் நாங்கள் எங்கள் ஆசிரியர் கற்றுக்கொடுத்த தில்லானாவை ஆட தயாராகிக் கொண்டிருந்தோம். எங்கள் தில்லானா கானடா ராகத்தில் அமைந்த தில்லானா. மேடையில் ஒலிபெருக்கியில், அடுத்து என்ன வரப்போகிறது என்று அறிவிப்பு செய்வார்களே,  அதைப் போல நாங்கள் சொல்லி விட்டு, எங்கள் உடைகளை மாற்ற மேடையின் பின்னால் உள்ள  மேக்கப் அறைக்குச் சென்றோம். உடை மாற்றிக்கொண்டு விட்டு வெளியே வரும் சமயம், யாரோ  மேக்கப்  அறைக் கதவை தட்டி, எங்களை அழைப்பது கேட்டது. வெளியே வந்து பார்த்தால், பலர்  மேக்கப் அறைக் கதவின் அருகில் நின்று இருந்தார்கள்.  என்ன” என்று எல்லோரையும் பார்த்தபடியே கேட்டோம். அதில் ஒருவர்,  “""நான் தான்  ஆளுநரின் உதவியாளர்''”, என்று கூறி எங்களிடம் பேச ஆரம்பித்தார். “நீங்கள் கானடா ராகத்தில் தில்லானா ஆடப் போகிறீர்கள் என்று அறிவிப்பு வந்தது. நமது ஆளுநர் பல பாடல்களை எழுதியுள்ளார். அதில் தில்லானாவும் அடங்கும். 

""அவரது தில்லானாவை இந்த நிகழ்ச்சியில் ஆட முடியுமா”, என்று ஆளுநர் கேட்டுவா  என என்னை அனுப்பியுள்ளார்'' என்று பாடலைக் கொடுத்தார். 

அந்த உதவியாளர் தந்தப் பாடலை நாங்கள் எங்கள் ஆசிரியரிடம் தந்து கேட்டோம். அவர் ""உங்கள் இருவருக்கும் இதை நான் கற்றுக்கொடுத்திருக்கிறேனே'' என்று கூற, நாங்களும் "சரி ஆடுகிறோம் என்று ஆளுநரிடம் சொல்லுங்கள்' என்று கூறி அவரை அனுப்பி வைத்தோம்.  எப்பவுமே தில்லானாவின் ஜதிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும். சுரங்கள்தான்  மாறியிருக்கும். ராகம் "கானடா' என்றால் அதற்கு ஒரு வகையான சுரங்கள் இருக்கும். "அடாணா' என்றால் அதற்கு ஏற்ற மாதிரி சுரங்கள் மாறுபடும். ஹிந்தோளம் என்றால் அதற்கு ஏற்ற மாதிரி சுரங்கள் வேறு படும். "பைரவி' என்றால் சில சுரங்கள் வேறு மாதிரி அமைந்திருக்கும். "தோடி' என்றால் இதற்கு சுரங்கள் வித்தியாசமாக இருக்கும். 

ஆடுகிறோம் என்று சொல்லி விட்டதால், ஒரு 5 நிமிடங்கள் புல்லாங்குழல் மற்றும் வயலின் போன்ற இசைக்கருவிகளை இசைக்கச் செய்து விட்டு, நாங்கள் மேடையின் பின்புறம் சிறிய பயிற்சி எடுத்துக்கொண்டோம். அன்று நமது ஆளுநரும், மஹாராஜாவுமான ஜெயசாமராஜ உடையார் முன்னிலையில், அவரது தில்லாவிற்கு நாங்கள் ஆடியது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டது. எங்களைப் பாராட்டிப் பேசும் போது “""இவ்வளவு குறைந்த நேரத்தில் நான் கேட்டுக்கொண்டதால் மேடையிலேயே எனது பாட்டிற்கான நடனத்தை ஆடிக் காண்பித்த உங்களுக்கு என் மனம் நிறைந்தப் பாராட்டுகள்''”, என்று சொல்லி, எங்களை மனதாரப் பாராட்டினர். எங்களுக்கும் அவரது பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. 

இவ்வாறு பல சமயம் இதுபோன்ற இன்ப நிகழ்வுகள் எங்களுக்கு ஏற்படுவதுண்டு. ஒரு முறை சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம் எங்களை நடனம் ஆட அழைத்திருந்தது. ஒரு மணி நேர நிகழ்ச்சிதான் என்பதால் நாங்கள் சரி என்று ஒப்புக்கொண்டு சென்று இருந்தோம். எங்கள் நடனம் நடந்து கொண்டு இருந்தபோது திடீரென்று ஒரு ஜப்பானியர் எங்கள் இசைக்குழுவில் உள்ள மிருதங்கத்தை வாசிக்கும் ஒருவரிடம் வந்து மிருதங்கம் வாங்கி வாசிக்கத் தொடங்கினார். எனக்குப் பயம் வந்து விட்டது. காரணம், எங்கள் நடனத்திற்கும் அவரது வாசிப்பிற்கும் சரியாக வர வேண்டுமே என்று?  சரியாக வந்ததா?  என்று அடுத்த வாரம் சொல்கிறேன்.

 (தொடரும்)   

சந்திப்பு: சலன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.