ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ரோஜா மலரே!  - 32: குமாரி சச்சு

பலரையும்  பார்த்து பாராட்டுப் பெற்றியிருக்கிறேன். அதில் முக்கியமானவர்கள் ருஷ்யா நாட்டின் தலைவர்களான குருசேவ் மற்றும் புல்கானின்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 4:15 pm


பலரையும்  பார்த்து பாராட்டுப் பெற்றியிருக்கிறேன். அதில் முக்கியமானவர்கள் ருஷ்யா நாட்டின் தலைவர்களான குருசேவ் மற்றும் புல்கானின். இந்த மாதிரி பெரிய மனிதர்கள் வந்ததால், நான் முன்பே சொன்ன மாதிரி கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனிடமிருந்து அவர்களை சந்திப்பதற்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. மலையேறும் வீரர் டென்சிங்  கண்காட்சியில் கலைவாணரின் நாடகத்தைப் பார்த்தார். 

எங்களுக்கு தனி வழி இருந்தது. அவரைப் போய்ச் சந்தித்து விட்டு வந்து விட்டோம். 

ஆனால் ருஷ்யா நாட்டின் தலைவர்களான குருசேவ் மற்றும் புல்கானின், இருவரையும் சந்தித்தது இன்று அண்ணா சிலை இருக்கும் மவுண்ட் ரோடு அன்று  ரவுண்டானா. முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் அன்று இந்தச் சந்திப்பில் தான் நடக்கும். அது போலவே இந்தச் சந்திப்பில் நாங்கள் எல்லாம் கூட வேண்டும் என்று முன்பே எங்களுக்குச் சொல்லி விட்டு, எல்லோரும் ஓரிடத்தில் சேர்ந்த பிறகு ஒன்றாகவே இதே மவுண்ட் ரோடு ரவுண்டானாவிற்கு வந்தோம். எங்களுக்கு முன்பே பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்குக் கூடி இருந்தார்கள். ருஷ்யா விரும்பும் வெள்ளை உடையில் எல்லோரும் வரவேண்டும் என்று எங்களுக்கு முன்பே சொல்லியிருந்தார்கள். 

அது போலவே நாங்களும் வெள்ளை உடையில் சென்று இருந்தோம்.  ருஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் நல்ல நட்பிருந்தது. அதனால் இருபெரும் தலைவர்களை நாங்கள் வரவேற்கும் முகமாக எல்லோரும் வெள்ளை உடையில் சென்றிருந்தோம். இந்த இரண்டு தலைவர்கள் சென்னைக்கு மட்டும் வரவில்லை. இது நடந்தது 1955 என்று நினைக்கிறேன். இருவரும் பஞ்சாப், மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா என்று பல இடங்களுக்குச் சென்றார்கள். இன்னும் சொல்லப் போனால் இந்தத் தலைவர்கள் ஊட்டிக்குச் சென்று விட்டு தான் சென்னைக்கு வந்தார்கள். 

அது மட்டும் அல்ல, அந்தத் தலைவர்கள் அங்கிருந்த இரண்டு நாட்களில், ஒரு நாள் அங்கு தங்கள் தலைமுடியை திருத்திக்கொள்ள ஒரு முடி திருத்துபவரை அழைத்ததாகவும், அவர் பெயர் வரதன் என்றும்,  இருவருக்கும் விருப்பம் போல முடியை திருத்தி விட்டதாகவும், அதற்கு அவர்கள் ரூபாய் 100 அளித்ததாகவும் கேள்விப்பட்டேன். 

அந்தக் காலத்தில் இது மிகப்பெரிய தொகை என்றும் சொன்னார்கள். இது எல்லாம் நான் பத்திரிகைகளில் படித்ததுதான். அதற்குப் பிறகுதான் அந்த ஊட்டி தேயிலை மக்களுக்கு மிகவும் தெரிந்த பெயராகி விட்டது. 

என்னைப் பொருத்தவரை இவர்கள் வரவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்படிப் புகழ் பெற்ற இருவரையும் பார்க்க எங்களால் முடிந்ததே என்று நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். அது மட்டுமல்ல, அன்று சோவியத் யூனினாக இருந்து, பிரிந்த உஸ்பெக்கிஸ்தான் என்ற நாட்டின் தலைநகரமாக இருந்த தாஷ்கண்டிலிருந்து ஒரு கலாசாரக் குழுவினர் இங்கு வந்து இருந்தனர். அவர்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் அவர்களது நடனங்களை இங்கு சிறப்பாக நடத்தினர். 

அவர்கள் சிறப்பாக இதை செய்யும் போது, நாம் அவர்களுக்கு ஒரு விருந்து கொடுத்து, நமது பரதநாட்டியத்தையும் ஆடி காண்பிக்க வேண்டும் என்று இங்குள்ளவர்கள் விரும்பினார்கள். அந்தப் பணியை எங்களை அழைத்துச் செய்ய சொன்னார்கள். நாங்களும் சந்தோஷத்துடன் அவர்கள் முன்னிலையில் நமது பாரம்பரிய முறையான பரதநாட்டியத்தை ஆடி, அவர்களின் பாராட்டையும் பெற்றோம். இப்படி எல்லோரும் கூடி, நாமும் சந்தோஷப்படும்படி, இன்று இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடப்பதில்லை என்று வருத்ததுடன் சொல்லித்தான் ஆகவேண்டும். 

மற்றுமொரு நடனம் சம்பந்தமான நிகழ்ச்சியை இங்கே  குறிப்பிட விரும்புகிறேன். இந்த மாதிரி நடனம் ஆடும் போது எங்களை முதலில் ஒப்பந்தம் செய்த பிறகு தான் மற்ற விஷயங்களைக் கவனிப்பார்கள். 

காரணம், நாங்கள் சினிமா புகழ் பெற்றவர்கள். அதனால் எப்பொழுதுமே எங்களைக் கேட்டுக் கொண்டு தான் நிகழ்ச்சி சம்பந்தமாக எதுவுமே செய்வார்கள். கண்காட்சி நடனம் என்பது வேறு. அப்படியே கண்காட்சியில் நடனம் என்றாலும் அதற்கு என்று தனியாக ஒரு வழியை வைத்து, நடனத்திற்கு வரும் கூட்டம் நடனத்திற்கே வருவதுபோல், கண்காட்சிக்கு வரும் மக்கள் நடனத்தைப் பார்க்க முடியாதவாறு செய்து விடுவார்கள். 
கண்காட்சியைப் பார்ப்பதற்கு வாங்கும் நுழைவுச் சீட்டால் எங்கள் நடனத்தைப் பார்க்க முடியாது. சில சமயம் எங்கள் நடனம் திறந்த வெளி அரங்கில் நடைபெறும். அப்பொழுது இருக்கைகள் போட்டு யார் இருக்கைகளில் உட்கார விரும்புகிறார்களோ அவர்களுக்கு இந்த அளவிற்குப் பணம் கொடுத்தால் இருக்கை வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் முன்பே சொல்லி விடுவார்கள். 
இதை எல்லாம் விட ஒரு படி மேலே போய், எங்கள் நிகழ்ச்சியினால் வரும் பணத்தை ஒரு குறிப்பிட்ட அநாதை இல்லங்களுக்கோ அல்லது ஒரு மருத்துவமனைக்கோ, அல்லது, ஒரு குறிப்பிட்ட பொதுச் சேவைக்கோ செலவு செய்ய முடிவு செய்து ஒப்பந்தம் செய்வார்கள். 

ஒரு முறை வழக்கம் போல் என்னை ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்தார்கள். அவர்கள் கோயம்புத்தூரில் இருந்து ஒரு கண்காட்சி நிகழ்ச்சியில் நான் நடனம் ஆட வேண்டும் என்று கேட்டு என்னை ஒப்பந்தம் செய்ய வந்திருந்தார்கள். 

என் அக்கா "மாடி' லட்சுமி அவர்கள் கேட்கும் தேதியில் இங்கு இல்லை என்பதால் நான் மட்டும் நடனமாட ஒப்புக் கொண்டேன். அவர்கள் என்னை ஒப்பந்தம் செய்த மகிழ்ச்சியுடன், தங்கள் இருப்பிடமான கோவை சென்றார்கள். நடன நிகழ்ச்சி நடக்கும் சில மாதங்களுக்கு முன்பே இந்த ஒப்பந்தம் நடைபெற்றது. 

வழக்கம் போல் ஒப்பந்தம் செய்தவுடன் நாங்கள் எங்கள் வேலையில் மூழ்கி விட்டோம். தனியாக ஆடுவதனால் சில சிறுமிகளை உடன் நடனம் ஆட வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். அவர்களுக்கும் இது நல்ல வாய்ப்பாக இருக்கும், எனக்கும் ஒரு வித்தியாசமான நடன நிகழ்ச்சியாக இருக்கும் என்று நான் நினைத்து சில இளம் பெண்களைத் தேர்ந்து எடுத்து சில பாடல்களில் அவர்களையும் ஆட வைக்க முடிவு செய்தேன். 

இதனால் நடனத்தில் வித்தியாசம் கிடைக்கும். பார்க்கும் மக்களுக்கும் சந்தோஷம் ஏற்படும். எனக்கும் சிலசமயம் தொடர்ந்து நடனம் ஆடுவதால் சோர்விலிருந்து கொஞ்சம் விடுபட முடியும்.. அன்றைய நிலையில் நான் மிகவும் புகழ் பெற்ற நடிகையாகவும் இருந்தேன். அந்தப் புகழ் என்னை நடனம் ஆடாமல் என்றைக்குமே தடுத்து நிறுத்தவில்லை. காரணம் நடனத்தின் மீது எனக்கும் என் குடும்பத்திற்கும் இருந்த தீராத ஆசை என்றே சொல்லலாம். 

நடனத்தைப் பொருத்தவரை நான் எந்த நிலையிலும் நடனத்தை விட்டு விடவில்லை. ஆயிரக்கணக்கான மேடைகளை பார்த்த பின்னும், புகழ் பெற்ற நடிகையாக இருந்த பின்னும், நான் தொடர்ந்து நடனம் ஆடிக்கொண்டே இருந்தேன்.

என்னைப் பொருத்தவரை நடனம் தான் என்னை மக்கள் மனதில் நிரந்தரமாக இருக்கச் செய்தது என்று சொன்னால் அது உண்மை. சில சமயம் படங்கள் வரும், பல சமயம் படங்கள் வராது, எந்த நிலையிலும் என்னைப் பிஸியாக வைத்திருந்தது இந்த நடனம் மட்டும் தான். இன்னும் சொல்லபோனால், நான் சிறுமியாக இருந்து, வயது ஏற ஏற சிறுமி வேடமும் செய்ய முடியாமல், வயது வந்த பெண்ணாகவும் நடிக்க முடியாமல் இருந்த ஒரு காலகட்டத்தில் எனக்குக் கைக் கொடுத்தது நடனம்தான். 

இப்படிப்பட்ட நிலையில் நாட்கள் நெருங்க நெருங்க "பாலே' போன்று நடனம் ஆட சில பாடல்களுக்கு நடனப் பயிற்சி தேவைபட்டது. நான் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். என்னுடன் நடனம் ஆடும் சில பெண்களும் என்னுடன் பயிற்சியில் ஈடுபட்டார்கள். நாங்கள் செய்யும் பயிற்சி, நடனம் ஆடும் நாள் நெருங்க, நெருங்க இன்னும் சிறப்பாகவும், தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டோம். 

இரண்டு நாளைக்கு முன் எங்களை நினைவுபடுத்த அந்தக் கண்காட்சியின் மேலாளரிடமிருந்து எங்கள் வீட்டிற்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. எனது பாட்டி தான் பேசினார்கள். அவர் என்ன சொன்னார் தெரியுமா? அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.