எங்களுக்கு விசா கிடைக்குமா இல்லையா என்று தெரியாத நிலையில் சென்னையில் நாங்கள் இருந்தோம். இந்த செய்தியை எங்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு தெரிவித்தோம். அவர்களோ அரசாங்கப் பதவியில் இருப்பவர்கள். எங்கள் விசா பிரச்னையை நேரடியாக நாட்டின் பிரதம மந்திரியிடம் கொண்டு சென்றார்கள். ""நமக்காக வருகிறார்கள், அவர்களுக்கு விசா கிடைக்க நாம் தான் ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று தெரிவிக்க, பிரதமர் டட்லி சேனநாயக்கா உடனேயே சென்னைக்கு தந்தி கொடுத்து, எங்களுக்கு உடனடியாக விசா வழங்க உத்தரவிட்டார்.
பிரதம மந்திரியே சொல்லி விட்டதால், விசா வேலைகள் எல்லாம் துரிதமாக நடை பெற்றன. எங்கள் 15 பேர்களுக்கும் ஒரே நாளில் விசா வழங்கப்பட்டது.
முதல் நிகழ்ச்சி இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இரண்டு நாள் நடந்த இந்த நிகழ்ச்சியில் எல்லா டிக்கெட்டும் விற்றுத் தீர்ந்து போய் விட்டது என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சொன்னார்கள்.
அரங்கில் கட்டுக்கடங்காத கூட்டம். இலங்கை மக்கள் தமிழ் மீதும், தமிழ் சினிமா மீதும் கர்வம் கொண்டவர்கள். இங்கு மட்டும் அல்ல, ஜெர்மனி, லண்டன், கனடா என்று உலகில் எங்கு சென்றாலும் எங்களைப் பார்த்து, ரசித்துப் பாராட்டுவார்கள்.
இலங்கை ரசிகர்கள் தாராள குணம் உடையவர்கள், என்றும் நல்லவர்கள். ஒரு காலத்தில் எனக்கு வந்த ரசிகர்களின் கடிதங்களுக்குப் பதில் கூடப் போட முடியாது. அவ்வளவு ரசிகர் கடிதங்கள் வரும்.
ஒரு கால கட்டத்தில் எங்கள் தெருவிற்கு தபால்காரர் ஒரு மூட்டை நிறைய கடிதங்களைக் கொண்டு வந்து கொட்டுவார். கொட்டியவுடன் அவர் சொல்வது என்ன தெரியுமா? ""உங்களுக்குப் பல நாட்டில் இருந்து கடிதங்கள் வருவதை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், கொழும்புவில் இருந்து இவ்வளவு கடிதங்கள் வருவதைப் பார்த்தால், அவர்கள் உங்கள் மேல் பாசம் கொண்டுள்ள ரசிகர்களாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது. நீங்கள் கொடுத்து வைத்தவர்'' என்று சொல்லி விட்டுப் போவார்.
அதில் பல வகையான கடிதங்கள் இருக்கும். சிலர் கையொப்பமிட்டு புகைப்படம் அனுப்ப கேட்டு வரும் கடிதங்கள், சில பாராட்டுக் கடிதங்கள். இப்படி வரும் கடிதங்களுக்கு பதில் கடிதம் போடக்கூட நேரம் இல்லாத நிலை. ஆனால், என் அம்மாவிடமும், பாட்டியிடமும் சொல்வேன். அம்மா, கண்ணுக்குத் தெரியாத இந்த இலங்கை ரசிகர்களைப் பெற்றதை பெருமையாக கருதுகிறேன். இவர்கள் விருப்பம் எல்லாம் ஒன்று தான். என் கையொப்பம் இட்ட என் புகைப்படம் மட்டும் தான். அவர்கள் ஆசையாய் கேட்கிறார்கள். இந்த சிறிய விருப்பத்தை நாம் கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு நேரம், காலம், செலவு எல்லாம் பார்க்கக்கூடாது என்று சொல்லுவேன். என் நடிப்பைப் பற்றி ஆக்கப்பூர்வமான விமர்சனம் வந்திருந்தால், அதை தனியாக எனக்கு காண்பிக்க எடுத்து வைத்திருப்பார்கள்.

இது நடந்தது எல்லாம் நான் கதாநாயகியாக இருந்த நேரம். "அன்னை' படமும் வெளியாகி இருந்தது. கொழும்பு நிகழ்ச்சிக்குப் பிறகு அடுத்து நாங்கள் சென்ற இடம் யாழ்ப்பாணம். அங்கும் கூட்டத்திற்கு குறைவில்லை. அங்கிருந்து ஹட்டன் என்ற இடத்திற்குச் சென்றோம். இந்த ஹட்டன் என்ற இடம் ஒரு மலைப்பிரதேசம். எல்லா இடங்களிலும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. எப்பொழுதுமே நிகழ்ச்சி ஒரு நாளோ இரண்டு நாட்களோ நடந்தால் மற்ற நாளில் ஊரை சுற்றிக் காட்டுவார்கள்.
திரிகோணமலையில் உள்ள கோணேஸ்வரர் கோயில் நாங்கள் பார்த்த முக்கியமான கோயில். இந்த கோயிலின் வரலாறு மிகவும் பழமை வாய்ந்ததாகும்.இந்த ஊருக்கு "திரிகூடம்' என்றும் பெயருண்டு.
அங்குள்ள சுவாமிக்கு விளக்கேற்றுவதற்குப் போதிய அளவு திரியும் நெய்யும் கிடைப்பதற்கு, இந்த ஊர் மக்கள் வழி வகுத்தார்கள் என்றும், அது எப்படி என்றால், தாமரை தண்டிலிருந்து நூலேடுத்து அதை திரியாக செய்து கோயிலில் உள்ள தெய்வத்திற்கு விளக்கு ஏற்றினார்கள் என்றும் சொல்வார்கள்.
அதனால் இந்த இடத்திற்குப் பெயர் "திரிதாய்' என்றும் வழங்குகிறது. சுதந்திரம் பெற்ற பின் 1950-ஆம் ஆண்டில் ஆலயம் அமைக்க முற்பட்டு, காசியில் இருந்து சிவலிங்க பெருமானை இங்கு எழுத்தருளச் செய்தார்கள் என்றும் கூறுவர்கள்.
இங்கு இன்னொரு அதிசயமும் நடந்ததாகச் சொல்வார்கள். ஒரு பெரிய கிணற்றைத் தோண்ட, மூன்றாவது அடியிலேயே அம்மையாரோடு கோணேஸ்வரர் பெருமாள், சந்திரசேகர், பார்வதி, பிள்ளையார் ஆஸ்திரதேவர் போன்ற உருவங்கள் வெளிப்பட்டன என்றும் கூறுவார்கள். இவை யாவும் இந்த கோயில் உள்ளேயே இன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வணங்கப்பட்டு வருகின்றன.
இந்த சிலைகளைப் பாதுகாக்க, அன்று இந்தக் கோயில் இருந்த இடத்திற்கு அருகில் உள்ள ஒரு கிணற்றில் வந்து போட்டுவிட்டார்கள் என்றும், பின்னர் இதை எடுத்தார்கள் என்றும் கூறுவார்கள். இப்படிப் பல கதைகள் கூறப்படுகின்றன. இந்த கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நமது அருணகிரிநாதர் வந்திருக்கிறார் என்பதால் இது பாடல் பெற்ற ஸ்தலமாகவும் கருதப்படுகிறது.
இதை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால், நிகழ்ச்சி எந்த ஊரில் நடக்கிறதோ அந்த ஊரில் நடந்து முடிந்து விட்டது என்றால், இப்படி அந்த ஊரில் உள்ள கோயில் மற்றும் சுற்றுலா தலங்களையும் பார்த்து விட்டு, அவர்களது கலாசாரம், பண்பாடு போன்றவற்றை தெரிந்து கொண்டு வருவோம்.
இப்படி திரிகோணமலையில் உள்ள கோயில் மற்றும் நாங்கள் பார்க்க வேண்டிய புகழ் பெற்ற இடங்களையும் பார்த்த பிறகு, அங்கிருந்து நாங்கள் ஹட்டன் என்ற இடத்திற்குச் சென்றோம்.
நாங்கள் சென்ற போது ஹட்டன் என்ற இடத்தில் கொஞ்சம் குளிர் அதிகமாக இருந்தது. எங்களுக்கு நடுங்க தொடங்கியது. இங்குதான் எங்கள் குழுவிற்கு ஒரு பிரச்னை உருவானது. என்ன பிரச்னை என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.
(தொடரும்)
சந்திப்பு: சலன்
பாடகி ராணியுடன் சச்சு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 2-வது வெற்றி!
ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்

ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!
10 கோடி பார்வைகளைக் கடந்த முட்ட கலக்கி!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


