தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரோஜா மலரே!: மனநிறைவு தந்த வெற்றிப்படம் - 63: குமாரி சச்சு

நான் கேள்விப்பட்டது இது தான். சிவாஜி நடிக்க, எம்.ஆர்.சந்தானம் தயாரிக்க, இயக்குநர் மாதவன் டைரக்ட் செய்ய ஒரு படம் எடுக்க இருக்கிறார்கள் என்று தெரிந்தது.

News image
இடமிருந்து 'மாடி' லட்சுமி, ராஜேஸ்வரி, வசந்தியுடன் சச்சு
Updated On :1 நவம்பர் 2020, 1:20 pm

சலன்


நான் கேள்விப்பட்டது இது தான். சிவாஜி நடிக்க, எம்.ஆர்.சந்தானம் தயாரிக்க, இயக்குநர் மாதவன் டைரக்ட் செய்ய ஒரு படம் எடுக்க இருக்கிறார்கள் என்று தெரிந்தது. அதிலும் மூன்று கதாநாயகியர், இந்தப் படத்தில் நடிக்கிறார்கள் என்று சொல்லபட்டது. சிவாஜி கணேசன், முத்துராமன், நாகேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அந்தப் படத்திற்கு பெயர் "அன்னை இல்லம்' என்றும் வைத்திருந்தார்கள். நடிகர் திலகம் நடித்தால் அது பெரிய படம் தான். அது மட்டும் அல்ல அன்று இருந்த பெரிய நடிகர்கள் அனைவரும் நடிக்க இருக்கும் படம் அது என்று எனக்குச் சொன்னார்கள்.   

"அன்னை இல்லம்' படத்தின் பெயருக்குள் பல சிறப்பான விஷயங்கள் இருந்தன. இந்தப் படத்தின் பெயர் தான் போக் ரோட்டில், இன்று செவாலியர் சிவாஜிகணேசன் சாலையில் இருக்கும் சிவாஜி அவர்களின் வீட்டின் பெயர். இந்தப் படம் எடுத்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் கமலா பிக்சர்ஸ். சிவாஜியின் மனைவி பெயர் கமலா அம்மாள். இந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் மூன்று முக்கியப் பாத்திரங்கள் இருந்தன.  அந்தப் பாத்திரங்களில் நடிக்க சிவாஜி கணேசன், முத்துராமன், நாகேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்கள். கதைப்படி சிவாஜிக்கு ஜோடியாக நடிகை தேவிகா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

மற்ற வேடங்களுக்கு நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது. இது தான் நான் கேள்விப்பட்ட விஷயங்கள். நான் ஏவி.எம் நிறுவனத்தில் இருந்து ஒப்பந்தம் முடிந்து வெளியே வந்து விட்டேன் என்று திரை உலகில் அன்று யாருக்கும் தெரியாது. அதனால் நாமே சென்று சிவாஜி அண்ணனிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்கலாம் என்று முடிவு செய்து சிவாஜியை சந்திக்கச் சென்றேன். நான் சென்ற போது தயாரிப்பாளர் சந்தானம், இயக்குநர் மாதவன் ஆகிய இருவரும் சிவாஜியுடன் இருந்தார்கள். அவர்களிடம் நான் வந்த விஷயத்தைக் கூறினேன். நகைச்சுவை பாத்திரங்கள் அதுவரை நடிக்கவில்லை. 
"காதலிக்க நேரமில்லை' அப்புறம் தான் வந்தது. ஏவி.எம் ஒப்பந்தம் முடிந்து விட்டது, இனி நான் யார் படத்திலும் எந்த வேடம் என்றாலும் நடிக்கலாம் என்று சிவாஜி அண்ணனிடம் சொல்லி விட்டு அவரின் ஆசீர்வாதம் வாங்கினேன். அவர்கள் நான் கூறியதைக் கேட்டு, நாங்கள் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உங்களை தான் நினைத்தோம். ஆனால் நீங்கள் ஏவி.எம் ஒப்பந்தத்தில் இருப்பீர்களோ என்று சந்தேகப்பட்டோம்.  நல்லவேளை நீங்களே நான் ஏவி.எம் ஒப்பந்தத்தில் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள், என்று சொல்லி அங்கேயே என்னை முத்துராமனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள். நான் ஒப்பந்தத்தில் இருந்து வெளியே வந்தவுடன் எனக்கு முதலில் நடிக்கக் கிடைத்த படம் "அன்னை இல்லம்'. பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் படம். பெரிய நடிகர்கள் நடித்த படம். 100 நாள்கள் ஓடிய படம். இது எல்லாமே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களினால் தான் என்று சொன்னால் அது மிகை இல்லை. அவர்களிடம் நான் ஆசீர்வாதம் வாங்கப் போய் தானே, இது எல்லாம் நடந்தது. அன்று இந்தப் படம் கிடைத்தது எனக்குப் பெரிய உதவியாக இருந்தது என்று கண்டிப்பாகச் சொல்லலாம்.

“"அன்னை இல்லம்'” ஒரு சிறப்பான படம். சிவாஜி அண்ணனின் சிறப்பான நடிப்பிற்கு உதாரணமாக இருந்த படம். என்னைத் தவிர எல்லோரும் பெரிய நடிகர், நடிகையர். இதில் சிவாஜி கணேசன், தேவிகா, எஸ்.வி.ரங்கா ராவ், எம்.வி.ராஜம்மா, எம்.என்.நம்பியார், முத்துராமன், நாகேஷ், வி.கே..ராமசாமி முதலியோர் நடித்தனர். சிவாஜி அண்ணன், தேவிகா, எஸ்.வி.ரங்கா ராவ், எம்.வி.ராஜம்மா, எம்.என்.நம்பியார், முதலியோருக்கு மிகவும் முக்கியமான வேடங்கள், காட்சிகள் இருந்தது. இப்படி அவர்களைச் சுற்றியே காட்சிகள் இருந்ததால், எங்களுக்கெல்லாம் முத்திரைக் காட்சிகள் குறைவு என்றாலும், நான் எல்லாக் காட்சிகளிலும் இருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். பல காட்சிகளில் சிவாஜி அண்ணன், ரங்காராவ், தேவிகா போன்றோர் நடித்து, அசத்தி இருப்பார்கள். எங்களுக்களுக்கெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனாலும் ஒரு வெற்றிப் படத்தில் இருந்தோம் என்ற மனநிறைவு எங்களுக்கு இருந்தது. எல்லாமே சிறப்பாக இருந்த படம். குறிப்பாக இனிமையான பாடல்கள் நிறைந்த படம். ஒளிப்பதிவும், காட்சிகள் அமைப்பும் நன்றாக இருந்தது. vtb

நான் எப்பொழுது சிவாஜி கணேசனின் வீட்டிற்குச் சென்றாலும் அம்மா என்னுடன் வர விரும்புவார்கள். காரணம், சிவாஜி கணேசனின் தாயார் ராஜாமணி அம்மா  மீது அம்மாவிற்கு மிகுத்த பாசமும், பக்தியும் உண்டு. அவர்களை எவ்வளவு முறை சந்தித்தாலும், பேசினாலும் என் அம்மாவுக்கு அலுக்காது. அவர் கூறியது இன்றும், என்றும் என் நினைவில் நீங்காது இடம் பெற்ற சொற்கள். நாங்கள் சிவாஜி அண்ணன் வீட்டிற்கு சென்ற போது ஒரு நாள் ராஜாமணி அம்மையாரை பார்த்து பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அவர்கள் கூறினார்கள். "உங்களுக்கு இவ்வளவு பசங்க இருங்காங்க,. நீங்கள்  கொடுத்து வைத்தவர்கள். உங்களது குடும்பம் நிறைவான குடும்பம்' என்று சொல்லி ஆசீர்வாதம் செய்வார்கள். 

நாங்கள் எதிர்பார்த்த அளவில் இந்தப் படத்திற்குப் பிறகு எனக்கு படங்கள் கிடைக்கவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. காரணம், "அன்னை இல்லம்' பெரிய படம், 100 நாள்கள் ஓடிய படம், கண்டிப்பாக இதில் நடித்த நடிகர்கள், நடிகையர்களுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்று தந்த படம். நல்ல பல தயாரிப்பாளர்கள் மூலம் இதில் நடித்த நடிகர், நடிகையருக்கு பல்வேறு, படங்கள் கிடைத்திருக்க வேண்டும். மற்ற நடிகர்களுக்கு எப்படியோ எனக்கு எந்த ஒரு புதுப்படமும் கிடைக்கவில்லை. 

எங்கள் வீட்டில் அன்று இருந்த நிலையில் இது வருத்தத்தை அளித்தது. இந்த நிலையில் வேறொரு நிகழ்ச்சியையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். எனக்கு முன்பாக பிறந்தவர் தான் வசந்தி. அழகாக இருப்பார். நான் "வீரத் திருமகன்'  நடித்துக் கொண்டிருக்கும் போது என்னுடன் படப்பிடிப்பிற்குத் துணையாக வருவார். நானும் அவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த தயாரிப்பாளர்கள் எம்.சரவணன், இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் மற்றும் பலர் இவரிடம் வந்து "சச்சுவை விட நீ அழகா இருக்கே, நீ எங்கள் படத்தில் நடிக்கலாமே', என்று என் முன்பாகவே கூறியிருக்கிறார்கள். ஆனால் அவருக்குச் சினிமாவில் நடிக்க விருப்பமில்லை. ஆனால் நல்ல குரல் வளம் மிக்கவர். நன்றாகப் பாடுவார். எங்கள் மாமா வீடு கல்கத்தாவில் இருந்தது. அங்கு வளர்ந்தவர் என்பதால் பெங்காலி படப் பாடல்களைச் சரளமாக நன்றாகப் பாடுவார். 

வசந்திக்கு இதயத்தில் ஏதோ பிரச்னை இருந்தது, எங்களுக்கு முதலில் இது தெரியவில்லை. போகப் போக அவருக்கு மூச்சு திணறல், நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தவிர வேறு சில உடல் உபாதைகளும் இருந்தன. இன்று இந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனைகள் உள்ள நகரம் சென்னை. ஆனால் அன்று அப்படியில்லை. சிறந்த மருத்துவமனை என்றால் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை தான். அந்த மருத்துவமனையில் சேர்க்க சிபாரிசு தேவைப்பட்டது. எங்களுக்கு யாரையும் தெரியாது. அப்படி இருக்கும் நிலையில் நாங்கள் ஒருவரை தான் நம்பினோம். அவர் தான் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். அவரது சிபாரிசால் நாங்கள் அங்குச் சென்று அவளைச் சேர்த்தோம். எனக்கும் அவளுக்கும் இடையில் சில வருடங்களே வித்தியாசம். அதனால் எனக்கும் அவள் மேல் அதிகப் பாசம். அவளுக்கும் என் மேல் பிரியம் அதிகம். அதனால் நான் படப்பிடிப்பில் உள்ள பொழுது மாலை படப்பிடிப்பு முடிந்தவுடன் நேராக அவளைப் பார்க்க வேலூர் போய் விடுவேன்.அவளுடன் இரவு தங்கி  காலையில் அங்கிருந்து நேராகப் படப்பிடிப்பிற்கு வந்து விடுவேன். ஏனென்றால் அவளைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. அவளுக்கும் அதே நிலை தான். அடுத்தடுத்து பிறந்ததால் எங்கள் இருவருக்கும் உள்ள அன்பு அதிகமாக இருந்தது. சிறு வயதில் நாங்கள் ஒன்றாக விளையாடிய காலங்கள்  என்னால் மறக்க முடியாதவை.  

ஒரு நாள் அதிகாலை வசந்தி மரணமடைத்தாள். இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு விட்டது. மருத்துவர்களால் அந்த அடைப்பை சரி செய்ய முடியவில்லை. அதனால் அவள் இறந்து விட்டாள். வேலூர் சி.எம்.சி. அன்று சிறந்தது என்றாலும், இன்று இருக்கும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்து விடவில்லை. வசந்தியின் இறப்பு எங்களை நிலைக்குலையச்  செய்து விட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. உடலை எப்படியாவது சென்னைக்கு எடுத்து வர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் முழு மூச்சுடன் செயல்பட்டோம். இறந்த போது அவளின் வயது 20 தான். சென்னை கொண்டு வந்து சிறிது நேரம் எங்கள் வீட்டில் வைத்து விட்டு, ஈமச்சடங்கிற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து விட்டு, நேராக மயானத்திற்கு எடுத்துக் கொண்டு போனோம். மயானத்திற்குள் நாங்கள் நுழைய முற்படும் நேரத்தில் எங்களைத் தடுத்தார் அந்த மயானத்தின் நிர்வாகி. ஏன்?

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.